Published On: Friday, April 12, 2013
திருச்சி - கொழும்பு மிகின்லங்கா விமான சேவை ஜூன் மாதம் நிறுத்தம்

இலங்கை சுற்றுலா பயணிகள் தாக்குதல் எதிரொலியாக, திருச்சியிலிருந்து வாரம், நான்கு முறை கொழும்புக்கு இயக்கப்படும், மிகின்லங்கா விமான சேவையை, எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி முதல் நிறுத்தப்போவதாக மிகின்லங்கா அறிவித்துள்ளது.
இதனால் ஐரோப்பிய மேற்கு ஆசிய நாடுகளில் ஏற்றுமதி தொழில் செய்துவரும், தமிழக வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலங்கை தமிழர் பிரச்சினை, சில மாதங்களாக தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து, தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
2012 செப்டம்பர் மாதம் இலங்கையிலிருந்து, தமிழகத்துக்கு சுற்றுலா வந்த இலங்கையைச் சேர்ந்த 80 பேர் மீது, தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரில் அமைப்பு நடத்தி வரும் சிலர் தாக்குதல் நடத்தினர். அதன்பின், கடந்த மார்ச், 16ஆம் திகதி, ஆய்வுக்கு வந்த கனலேகா ஞனோதரா என்ற புத்தபிட்சு, தாக்கப்பட்டார்.
அதன்பின் சென்னை ரயில்வே ஸ்டேஷனில் புத்த பிக்கு உள்ளிட்ட, இலங்கையைச் சேர்ந்த, இருவர் தாக்கப்பட்டனர். இதையடுத்து இலங்கை நாட்டினர் தமிழகம் சுற்றுலா செல்வதை தவிர்க்கவும் என்று, அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது. இதனால் இலங்கையிலிருந்து தமிழகம் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
இலங்கையைச் சேர்ந்த சில வர்த்தர்கள் மட்டும் தற்போது தமிழகம் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படி இலங்கையிலிருந்து, தமிழகம் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்ததாதல், சென்னையிலிருந்தும், திருச்சியிலிருந்தும், கொழும்பு நகருக்கு இயக்கப்படும் விமானங்கள் காத்தாடின. குறிப்பாக, திருச்சியிலிருந்து, கொழும்பு நகருக்கு இயக்கப்படும் மிகின்லங்கா, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள், குறைந்த எண்ணிக்கை பயணிகளுடன் செல்ல தொடங்கின.
இதனால் நஷ்டத்தை சந்திக்கும் விமான நிறுவனங்கள், தங்களின் சேவையை தொடர வேண்டுமா என்று, ஒரு மாதமாக ஆலோசனை நடத்தின. கொழும்பிலிருந்து, திருச்சிக்கு வாரம், நான்கு முறை வந்து செல்லும் மிகின்லங்கா விமானம், பயணிகள் பற்றாக்குறையால், வரும், ஜூன் 1ஆம் திகதி முதல் தன் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது, வாரத்துக்கு, 14 முறை, கொழும்பிலிருந்து, திருச்சி வந்து செல்கிறது. அந்நிறுவனமும் தன் சேவையை குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும், இதுவரை வெளியாகவில்லை.
இதுகுறித்து மிகின்லங்கா ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, "பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால், விமான சேவையை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது' என்று கூறினர். திருச்சியிலிருந்து, கொழும்புக்கு மிகின்லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மட்டுமே விமான சேவை அளித்து வருகின்றன.
இதில் மிகின்லங்கா தன் சேவை நிறுத்த முடிவு செய்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் சேவை நிறுத்த முடிவை எடுத்தால், திருச்சியிலிருந்து கொழும்பு நகருக்கு எந்த விமான சேவையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வெளிநாட்டுக்கு செல்லும் தமிழர்கள் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், வர்த்தகர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
(சென்னையிலிருந்து சாஹுல்)