Published On: Monday, April 01, 2013
சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றம்: இருவர் சஸ்பெண்ட்

சட்டப் பேரவையிலிருந்து திமுக எம்எல்ஏக்கள் கூட்டு வெளியேற்றப்பட்டனர். அவையில் தொடர்ந்து முழக்க மிட்டதால் ஸ்டாலின் உட்பட திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
திங்கட்கிழமை நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், தி.மு.க. மார்க். கம்யூ. கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். தமிழக போக்குவரத்து கழகத்திற்கு ஜி,.பி.எஸ்.கருவி வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தி.மு.க. கூறிய புகாருக்கு சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து பேசியதாவது;
போக்குவரத்து பயண சீட்டிற்காக ஜி.பி.எஸ். கருவிகள் வாங்க ஒப்பந்தம் கோரியதில் முறைகேடு நடந்ததாக, ஆங்கில நாளிதழ் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது. முறையான ஒப்பந்தத்தால் அரசுக்கு ரூ. 27 கோடி நிதி செலவு குறைந்துள்ளது. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. ஒப்பந்த புள்ளிக்கான முறையான அரசாணை வெளியிடப்பட்ட பின்னரே நிர்வாகம் ஒப்புதல் பெறப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டது.
பொய்யான செய்தி வெளியிட்ட நாளிதழ் மீது வழக்கு தொடரப்படும். அதில் போக்குவரத்து துறைக்கு ஜி.எஸ்.பி. கருவி வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விவாதிக்க வலியுறுத்தினர்.போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய கருத்தால் அவையில் கூச்சல் நிலவியது. மேலும் சபாநாயகர் இதனை ஏற்க மறுத்தார். இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட முயன்றதாகவும், அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெ. அன்பழகன், சிவசங்கர் ஆகியோரை 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
(சென்னையிலிருந்து சாஹுல்)