Published On: Wednesday, April 03, 2013
துபாயிலிருந்து தமிழர்களை இலங்கைக்கு அனுப்புவதை தடுக்கவேண்டும்: வைகோ

துபாயில் இருந்து 19 ஈழத் தமிழர்களை கொழும்புவுக்கு அனுப்புவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ கடிதம் எழுதி உள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வைகோ எழுதி உள்ள கடிதம் வருமாறு; துபாயில் இருந்து 19 ஈழத் தமிழர்கள் கொழும்புக்கு அனுப்பப்பட உள்ளனர். அவ்வாறு அனுப்பப்பட்டால், அவர்கள் சித்ரவதை செய்து கொல்லப்படுவார்கள் என்பதால், அவர்களைக் காப்பற்ற உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி, தங்களுக்கு இக்கடிதத்தை எழுதி உள்ளேன்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி, தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக 45 ஈழத் தமிழர்கள் ஆஸ்திரேலியாவுக்குப் பயணித்தபோது, அவர்கள் சென்ற மரக்கலம் பழுது பட்டதால், தங்கள் உயிர்களைக் காக்குமாறு அபயக்குரல் எழுப்பினர்.
அப்பொழுது துபாயைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் இருந்த மாலுமிகள் அவர்களைக் காப்பாற்றி, தங்கள் கப்பலில் ஏற்றி துபாயில் கொண்டு போய்ச் சேர்த்தனர். சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக வெளிநாடுகளில் அத்தமிழர்கள் அடைக்கலம் கேட்டனர்.
ஸ்வீடன் நாடு 7 ஈழத்தமிழர்களையும், அமெரிக்கா ஒருவரையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. 6 ஈழத்தமிழர்கள் கட்டாயப்படுத்தி, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக கொழும்புக்கு அனுப்பப்பட்டனர். மீதம் இருக்கக்கூடிய 31 தமிழர்களுள், 19 பேரை, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, ஒரு வார காலத்துக்குள், கட்டாயமாக இலங்கைக்கு அனுப்பப்போவதாக துபாய் அரசு அறிவித்து உள்ளது.
இந்த 19 பேர்களுள் ஒருவரான இளம்பெண் ஹரினி, தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணி ஆற்றியவர். இதேபோன்ற செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய இளம்பெண் இசைப்பிரியா, சிங்கள இராணுவத்தினரால் மிகக் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு, படுகொலைக்கு உள்ளான காட்சியை சேனல் 4 தொலைக்காட்சி காணொளி மூலம் 2010 இல் வெளியிட்டதால், உலகெங்கும் உள்ள மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர்.
இப்போது ஹரினி கொழும்புக்கு அனுப்பப்பட்டால், அதேபோன்ற கொடுமை நிகழும். ஹரினியும் கொல்லப்படுவார். எனவே, துபாயில் இருக்கின்ற 19 ஈழத் தமிழர்களையும் இலங்கைக்கு துபாய் அரசு அனுப்பவிடாமல், மனிதாபிமான அடிப்படையில் அவர்களைப் பாதுகாக்க ஐக்கிய அரபு குடியரசு மூலம் உடனடி நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுகிறேன்.
இவ்வாறு, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் வைகோ கேட்டுக் கொண்டு உள்ளார். மேலும் ஹரினி உள்ளிட்ட 19 பேரை பாதுகாப்பதற்காக, வைகோ நேற்றைய தினம் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள் யஷ்வந்த் சின்காவையும் ஜஸ்வந்த்சிங் கையும் புதுடெல்லியில் நேரில் சந்தித்து நிலைமையை விளக்கி கடிதமும் கொடுத்து உள்ளார். இதுகுறித்துத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, அவர்கள் இருவரும் வைகோவிடம் உறுதி அளித்து உள்ளனர்.
(சென்னையிலிருந்து சாஹுல்)