Published On: Sunday, April 14, 2013
முஸ்லிம்களினது துயரில் பங்குபோட்ட சம்பந்தனிடம் முஸ்லிம் தலைவர்கள் பங்குகேட்பதா?

“செயல்களைவிட சிந்தனைகள் ஒரு மனிதனின் குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது” – அறிஞர் புளுமர் என்பாரின் இக்கூற்று தற்போது இலங்கையில் இடம்பெறுகின்ற சிறுபான்மையினர் பற்றிய நிந்தனைகளை இன்னொரு இனத்தார் பேசுகின்றபோது அவர்களுக்கு எதிராக குரல் எழுப்புகின்ற இன்னொரு சிறுபான்மையினரின் போக்குகள் உண்மையிலே அவர்களினதும், அவர்கள் சார்ந்த தலைவர்களினதும் சிந்தனைகளில் ஒற்றுமை பற்றியும், இணைந்து வாழ்வதற்கான ஆதரவையும், ஒரேமொழியின் அடிப்படையில் வாழவேண்டியதன் அவசியத்தையும், மாற்றங்களுக்கான தேவைகளையும் காண்பிக்கின்றன என்கிற விடயத்திற்காகவே இக்கூற்றை தெரிவித்திருந்தேன்.
இந்நாட்டில் வாழ்ந்துவருகின்ற சிறுபான்மையினரில் ஒருபகுதியினர் தாக்கப்படுகின்றபோது அல்லது கஷ்டப்படுகின்றபோது அந்நாட்டின் பெரும்பான்மையினரால் அவமதிக்கப்படுகின்றபோது அவர்களுக்காக பரிந்து பேசுதல், பரிகாரம் தேடுதல் மனிதப்பண்புகளில் ஒன்று. இலங்கையில் முஸ்லீம்கள் என்கிற சிறுபான்மையினர் நோகடிக்கப்படுவதைப் பார்த்து உள்ளார்ந்தமாக அடுத்த சிறுபான்மையினர் இத்தாக்குதல் குறித்து பரிந்து பேசியுள்ளமை பாராட்டுக்குரியது என்கின்றனர் கனத்த முஸ்லீம் சகோதரர்கள். உண்மையில் ஒருநாட்டின் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் இன்னொரு சிறுபான்மையினருக்குத்தான் தெரியும் என்பதுபோல இலங்கைவாழ் முஸ்லீம்களுக்கு அண்மையக்காலங்களில், அரசின் ஆதரவுடன் இயங்கியதாககக் கூறப்படுகின்ற இனவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றமை காலத்தின் கொடுமையா? அல்லது ஏனைய சமூகங்கள் மீதான காழ்ப்புணர்ச்சியா? என்பது புரியவில்லை. ஆனால் இப்போக்கானது நித்திரை செய்வதுபோல தூங்குகின்றவர்களை எழுப்புகின்ற ஒருநிலைப்பாடுதான் இந்த இனவாதிகளின் முஸ்லீம் விரோத செயல்கள் எனக் கூறலாம்.
அண்ணல் காந்தி கூறியதுபோல “பெரும்பான்மையோர் சிறுபான்மையோரிடம் நம்பிக்கை ஏற்படும்படிச் செய்து அவர்களின் நல்ல எண்ணத்திற்கு பாத்திரமாக விளங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். இந்த அடிப்படையில் பார்க்கின்றபோது தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா கடந்த செவ்வாய் அன்று பாராளுமன்றில் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். உண்மையில் இந்நாட்டுவாழ் தமிழர்கள் பெரும்பான்மையோரால் தாக்கப்படுகின்றபோதெல்லாம் அவர்கள்பட்ட கஷ்டங்களும், நஷ்டங்களும், கவலைகளும் சொல்லில் வடிக்கத்தான் முடியுமா? இலட்சக்கணக்காண மக்களின் வெளியேற்றத்திற்கும், ஆயிரக்கணக்கான மக்களின் படுகொலைகளுக்கும் இந்நாட்டின் எந்த இனமும் பட்டிராத வேதனையை அனுபவித்த மக்களின் தலைவன் இன்னொரு இனம் படுபாதாளத்தில் அடி உதைபடுவதை பார்க்க முடியாத பரிதாபத்தை செல்லில், சிந்தனையில் வடிக்கின்றார் என்றால் மனிதாபிமானமும், மனிதத்துவமும் தலைத்தோங்க எத்தனிக்கின்ற ஒரு காலகட்டத்தில் இரண்டு சிறுபான்மையினரும் ஒற்றுமைப்படுகின்ற காலத்தை நெருங்கிவிட்டோம் என்பதைத்தான் தலைவரின் உரைகள் எடுத்துக்காட்டுகின்றன.
இரா.சம்பந்தன் ஐயாவின் பேச்சு முஸ்லீம் தலைவர்கள் விட்ட தவறை நிறைவு செய்திருக்கிறது என்கிற பார்வைகளும் எழாமலில்லை. ஒருகால கட்டத்தில் புத்தளம் பள்ளிவாசலுக்குள் முஸ்லீம்கள் சுடப்பட்டபோது அதற்காக துணிந்து விளக்கம் கேட்டவர்கள் அன்றைய தமிழ் தலைவர்கள் என்பதை மீண்டும் ஒருதடவை சம்பந்தன் ஐயா மூலமாக இன்னும் தமிழர்கள் முஸ்லீம்களுடன் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றார்கள் என்பதை பறைசாட்டியுள்ளது. கடந்தகாலங்களில் முஸ்லீம் தமிழர்களுக்கிடையிலான ஒற்றுமையற்ற போக்குகளுக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்த விடயங்கள் அரசாளும் அரசியல்வாதிகளின் குதர்க்கதனமான சிந்தனைப்போக்குகள் என்பதுதான் யதார்த்தமான உண்மையாகும். முப்பது வருடத்திற்கும் மேற்பட்ட காலத்திலிருந்து சிந்தனைரீதியான போக்குக்கு தமிழர் போராட்டம் வெற்றியடையாமைக்குக் காரணமாக அமைந்த முக்கிய செயற்பாடுகள் சிந்தனை வேறாக்கம் என்பதுதான் உண்மையாகும். சிந்தனைரீதியான பிளவுகளை ஏற்படுத்துகின்ற இராஜ தந்திரோபாயங்களை சிலரின் உள்ளத்தில் உள்ளார்ந்தமான முறையில் ஆசைகாட்டி மோசம் செய்கின்றபோது இவ்வாறன பின்னடைவுகள் ஏற்படுவது வழமை. இதில் முஸ்லீம்களும் அள்ளுண்டு போனமை கவலையான விடயமாகும்.
கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட அமளிதுமளிகளுக்கு தமிழர் தரப்பிலிருந்தும், முஸ்லீம் தரப்பிலிருந்தும் சிலர் தங்களது சிந்தனைகளின் வெளிப்பாடாக காய் நகர்த்தல்கள் ஏற்பட்டமை இரண்டு இனங்களினதும் பிரிப்புக்கு கால்கோளாகின. தற்போதுகூட முல்லைத் தீவுப் பிரதேசத்திலும்சரி, யாழ்ப்பானத்திலும்சரி முஸ்லீம்களின் காணிகளை சரியான முறையில் அடையாளப்படுத்தி பெற்றுக் கொள்ளுமாறு தமிழர் தரப்பினர் அறைகூவல் விடுக்கின்றனர். ஆனால் இதனை அரசுடன் சம்பந்தப்படுத்;தி ஆட்சியாளர்களின் நன்றிக்காக இருதரப்பாரையும் மீண்டும் மீண்டும் தெருச் சண்டைக்கு அழைப்பதுதான் இந்த இராஜதந்திரப் புத்தியாகும். இதனையெல்லாம் மறந்து அல்லது மீண்டும் ஒருமுறை முட்டாள்களாக நாம் இரு இனமும் மாறக் கூடாது என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள் என்று சொல்லாமலே சொல்லிவிட்டார் இரா.சம்பந்தன் அவர்கள்.
முஸ்லீம்கள் சரித்திரரீதியாக காலங்காலமாக இந்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் அபிவிருத்திக்காக பல நூறு ஆண்டுகள் தங்களை அர்ப்பணித்துள்ள ஒரு சமூகம், அவர்களுக்கென்று ஒரு கலாச்சாரம், தனித்துவமான பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மட்டுமன்றி உணவு, உடைகளையும் கொண்டுள்ளனர். தங்கள் மதத்தின் மீது அபரீதமான நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் நம் சகோதரர்கள். ஒரே மொழி பேசுகின்ற இந்நாட்டின் சிறுபான்மையினர். அவர்கள் வீதிகளில் துன்புறுத்தப்பட்டால், குண்டர்களால் தாக்கப்பட்டால், அவர்களது பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டால் இன்னொரு சிறுபான்மையினராகிய தமிழர்களால் அக்கரையற்ற விதத்தில் பார்வையாளர்களாக இருக்க முடியாது. என்று கூறியுள்ள இரா.சம்பந்தன் அவர்களது கூற்றுக்கள் இதுவரை எந்தவொரு முஸ்லீம் தலைவனும் கூறவில்லை. அதற்குக் காரணமும் இல்iலாமலுமில்லை. ஆட்சியில் பங்கில்லாதவர்கள் சிலர் பேசினாலும், பாராளுமன்றத்தில் பேசுவதுதான் சிறப்பானதாக அமையும்.
இன்றைய முஸ்லீம் தலைவர்கள் என்கிற அமைச்சர்களும், நாடாளு உறுப்பினர்களும் நமது ஜனாதிபதியின் முன்னால் எட்டாக மடிகின்றபோது இவ்வாறு கூறுவார்களா? அல்லது சரியான முறையிலான அறிக்கைகளைத்தான் வி;டுவார்களா? மதனமுத்துவின் கதையில் வரும் பானை பத்திரம்போல் ஆட்டின் தலைபோனாலும் பறவாயில்லை. பானைதான் முக்கியம் என்பதெற்கொப்ப முஸ்லீம் தலைமைகளுக்கு தங்களுடைய பதவிகள் மாத்திரமே முக்கியத்துவமாக இருந்திருக்கின்றது. குறிப்பாக அண்மையில் ஜனாதிபதியுடன் பேசப்பட்ட பேச்சுவார்த்தைகள்கூட சரியான முடிவுகளை எட்டியதா என்பதும் கேள்விக்குறியே. முஸ்லீம் கட்சியின் தலைவர் ஒருவரைப் பார்த்து பொதுபலசேனாவின் செயலாளர் சவால் விட்டிருக்கின்றார். முடியுமானால் சவுதிக்கு செல்லுங்கள் என்று. முஸ்லீம் தலைவர்களே முஸ்லீம்களது பிரச்சினைக்குக் காரணமாக அமைகின்றனர் என்று கூறும் பொதுபலசேனா, தற்போது இலங்கையின் முஸ்லீம்களை காப்பாற்றும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக கொக்கரிக்கின்றனர். ஒருவகையில் பார்த்தால் அவர்கள் கூறுவதும் சரிபோலவே தெரிகிறது. முஸ்லீம்களின் பிரச்சினைகளை முஸ்லீம் தலைவர்கள் சரியான முறையில் கையாளவில்லை என்றால் வேற்று மதக்காரர்களைக் கொண்டு உங்களைத் திருத்துவேன் என்று இறைவேதத்தில் கூறப்பட்டுள்ளது. அது இதுதானா என்பதையும் சீர்தூக்க வேண்டியுள்ளது.
இன்னும் கூறப்போனால் லொறியில் அடிபட்ட நாய்யொன்று திசைதெரியாது எல்லாப்பக்கமும் ஓடித்திரிவதுபோல பொதுபல சேனாவினர் தாங்கள் என்ன செய்கின்றோம், என்ன கூறுகின்றோம், எதற்காக இதனைச் செய்கின்றோம், இதனால் ஏற்படப்போகின்ற நிலைமைகள்தான் என்ன என்பதுகூட தெரியாதவர்களாக ஒரு சமூகத்தின் மதரீதியான விடயங்களில் பார்வையைச் செலுத்தியுள்ளனர். அதேநேரம் மதத்தலைவர்கள் என்போர் அந்தச் சமூகத்தின் தலைவர்கள். அவர்களை வழிநடாத்துகின்றவர்கள். வழிகாட்டிகள். அப்படி என்றால்; வழிகாட்டிகள் என்போர்;; யார்? வழிகாட்டிகள் என்றால் மனிதாபிமானம், சகோதரத்துவம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், ஒற்றுமை, மதரீதியான நிந்தனை அற்ற தன்மை போன்ற நற்பண்புகள் ஒருங்கே அமைந்திருக்க வேண்டும். மற்றவரைத் திருத்த வேண்டும். நல்ல விடயங்களை செய்வதும், மற்றவர்களைப் பின்பற்றவைப்பது போன்றவைகளாகும். மதரீதியான வளர்ச்சிக்கு இவைகள்தான் அடிப்படையான பண்புகளாக அமைகின்றன.
ஒருவன் தன்னுடைய மார்க்கத்தை விட்டு வேறொரு மார்க்த்தில் நுழைகின்றான் என்றால் அதிலுள்ள நற்பழக்கங்கள், நல்ல விடயங்கள்தான் முக்கியமாகும் என்பது எமக்குத் தெரியும். இந்தியாவின் சட்டவரைபை வரைந்த சட்டமேதையான டாக்டர் அம்பேத்கார் தன்னுடைய சமூகத்தை இந்திய பெரும்பான்மைச் சமூகம் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற காரணத்தினால் பௌத்த தத்துவங்கள் சிறப்பாக காணப்பட்டமையினால் அந்தச் சமூகமே பௌத்தமதத்திற்கு மாறிய வரலாற்றைக் காண்கின்றோம். அவ்வாறான சமூகத்தின் தலைவர்கள் என்கிற பௌத்த பிக்குகள் இன்று பிற்போக்கான அரசியலிலும், ஏனைய மதங்களை நிந்திக்கின்ற அளவுக்கு இவர்களது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை வெறும் காழ்ப்புணர்ச்சி என்பதை தவிர வேறொன்றும் இல்லை.
இதனைத்தான் இரா. சம்பந்தன் அவர்கள் இலங்கை முஸ்லீம்களைப் பற்றி கூறும்போது “எட்டாம் நூற்றாண்டு தொடக்கம் 13ஆம் நூற்றாண்டுவரை பரவியிருந்து இஸ்லாமிய பொற்காலத்தின் பண்பாடு சார்ந்த கொடையாளர்களாகிய இலங்கை முஸ்லீம்கள் கலை, இசை,மருத்துவம், சட்டம்,விஞ்ஞானம்,தொழில் முயற்சி, கல்வியறிவு போன்ற துறைகளின் வளர்ச்சியில் உயர்நிலைகளை அடைந்திருந்தனர். இன்றும் அப்படித்தான். இவைகளை கண்டு காழ்ப்புணர்ச்சி கொண்டு முஸ்லீம்களுக்கு எதிராக வன்மம் சார்ந்த கசப்பான பிரசாரத்தைக் கொண்டுள்ளனர். வேதனைப்படுத்துமளவுக்கு இந்த முஸ்லீம்கள் செய்தவை என்ன? தமிழ் மக்களினதும், முஸ்லீம்களினதும் உறவு எப்போதும் மிகவும் நெருக்கமானதாகவே இருந்து வந்துள்ளது. சில சமயம் எமது உறவில் ஏற்பட்ட வன்செயல் மற்றும் குரூரத்தனம் காரணமாக வெட்கப்பட வேண்டியும் இருந்தது. என்றாலும் இருதரப்பு உறவுகள் நெருக்கமாகவே இருந்து வருகின்றது. மற்றவரின் விதியில் உயிர் பிழைக்கலாம் என்ற அடிப்படையில் எம் மக்கள் உறவு பின்னிப் பிணைந்துள்ளது. சிங்களவர், மலாய் மற்றும் பறங்கியர் ஆகியோருடனும் தொடர்பு வைத்துள்ளதுபோல நாம் முஸ்லீம்களுடனும் தொடர்புகளை கொண்டுள்ளோம். பொது மொழி, வாழ்விடம் ஆகியவற்றின் இணைப்பை இலகுவாக துண்டிக்க முடியாது” என்றும் தெரிவித்திருந்தார்.
எனவேதான், இந்நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் சொந்தமான இலங்கை மண்ணில் அமைதி, ஒற்றுமை ஓங்குவதற்கான நடவடிக்கைகள் யுத்தமற்ற ஒரு நிலைமையில் அரசின் அபிவிருத்திக்கான முன்னெடுப்புக்கள் நல்ல நிலைமையில் வருகின்றபோது தாளி உடைந்த கதைபோல இலங்கைவாழ் முஸ்லீம்களை வேண்டா வெறுப்புடன் கைகழுவ நினைப்பது எந்தவகையில் நியாயம் என்பதை பலாங்கொடை ஜெய்லானி; பள்ளிவிவகாரத்தில் விட்டுக் கொடுப்புக்களை முழுமையாக விடுவதற்கு ஏன் அங்கு அரசின் முக்கியஸ்தரான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் செல்லவேண்டும். இந்நாட்டிலுள்ள அனைத்திடங்களும் சொந்தம் கொண்டாட பெரும்பான்மையினர் முயற்சிப்பதும், அதற்கு வக்காலத்து வாங்கும்நோக்குடன் அறிக்கைகள் விடுவதும் சகஜமாகி போயுள்ள நிலையில் தற்போது மீண்டும் நுவெரலியா வசந்த விழாவில் முஸ்லீம்கள் பங்குபற்றக் கூடாது என்கிற குறுஞ்செய்திகள் பரவியுள்ளன.
அதேநேரம் யாழ்ப்பான பல்கலைக்கழத்தில் முழுக்க முழுக்க பாதுகாப்பான முறையில் அமையப்பெற்றுள்ள முஸ்லீம் மாணவர்களது தொழுகையறை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இவைகளைப்பார்க்கின்றபோது சமாதானமாக வாழ நினைக்கும் முஸ்லீம், தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் ஊடுறுவியுள்ள புள்ளுறுவிகளை இந்நாட்டு சமாதான சகவாழ்வை விரும்புகின்ற மக்கள் அறிந்து அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்க வேண்டும். அரசின் பிரதமர் “இனங்களுக்கிடையே நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது” என்றும் இனங்களிடையே முறுகளை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சிப்பது குறித்து அரசு அவதானமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அப்படியானால் இந்நாட்டில் அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கின்ற பொதுபலசேனாவினரை பிடித்து சிறையில் அடைப்பாரா பிரதமர்? அடைக்கத்தான் முடியுமா? வெறும் பூச்சாண்டித்தனமான கேலிப்பேச்சுக்களிலிருந்து உண்மையான, யதார்த்தமான சிந்தனைத்துவமிக்க நேசர்களாக இந்நாட்டின் அரசியல்வாதிகள் மாறுகின்ற நாள் எப்போது மலரும் என்பதே சாதாரண மக்களின் கேள்வியாகும்.
(கழுகுப்பார்வை)