Published On: Sunday, April 14, 2013
முஸ்லிம் தேசிய இலக்கியத்திற்கான அவசியம் உணரப்படவேண்டும்

அண்மையில் சாய்ந்தமருதில் நடைபெற்ற முஸ்லிம் தேசிய இலக்கியம் சம்பந்தமான ஒன்றுகூடல் எழுத்தாரான நவாஸ்சௌபி தலைமையில் நடைபெற்றபோது அங்கு கலந்துகொண்ட அம்பாரை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் இலக்கிய வாதிகளினால் முன்மொழியப்பட்ட, விவாதிக்கப்பட்ட, கலந்துரையாடப்பட்ட விடயங்களைத் தொகுத்தளிக்கின்றேன்.
பொதுவாக தமிழ் இலக்கியங்கள் தமிழ்மொழியில் பேசப்பட்டு, போஷிக்கப்பட்டு வந்தாலும் அனைத்தும் தனித்துவமான மொழியடையாளங்கள் அடிப்படையில் அதனை முழுமையாக தமிழ் என்கிற காரணத்தினால் அது முஸ்லிம்களுக்கான தனித்துவத்தை அடையவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கள் இன்று நேற்றல்ல பல வருடங்களாக முஸ்லிம்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தாலும் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் சிலர் தன்னுடைய தாய்மொழியாக தமிழைப் பேசி வருகின்றனர்.
உண்மையில் முஸ்லிம்கள் ஒவ்வொரு நாட்டிலும் தான் சார்ந்துவாழுகின்ற சமூகத்தின் மொழியை தன் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் பிறப்பால் முஸ்லிமாகவும், தன்வாழ்வியல் இலட்சியங்களை, தன்னுடைய மார்க்கத்தின் அடிப்படையில் கொண்டு செல்கின்றவனாகவே உலகில் எங்கு வாழ்ந்தாலும் முஸ்லீம் என்கிற தனித்துவமான அடையாளத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் முஸ்லிம்களினால் படைக்கப்படுகின்ற இலக்கியங்களும் தன்னுடைய சமயம் சார்பான கோட்பாடுகளை முன்னிறுத்தியதாகவே அமைகின்ற ஒருபோக்கு காணப்படுகின்றது. இருந்தாலும் தான் சார்ந்து வாழுகின்ற மொழியை தாய்மொழியாகக் கொண்டாலும் முஸ்லிம்களுக்குள் மதரீதியான கோட்பாட்டின் அடிப்படையலான அரபு மொழியும் பரவலாக பரந்து கிடக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த அடிப்படையில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் நடைபெற்றுவந்தாலும் அங்கெல்லாம் தமிழ்பேசும் அறிஞர்கள் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்து தமிழ் மொழிக்கு அதிககூடிய அந்தஸ்து வழங்கி நடாத்தி வருகின்ற ஒருவழமையான விடயமாகும்.
ஆனால் இஸ்லாமிய உலகிற்கான இலக்கியங்கள் அரபு மொழியில் அமைந்திருந்தாலும் முஸ்லீம்கள் வாழுகின்ற தங்களுடைய நாடுகளில் பேசுகின்ற தாய்மொழியில் தம்முடைய இலக்கியங்களைப் தான்சார்ந்துள்ள மொழியில் படைத்தும் வருகின்றனர். ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் தமிழ் மொழியை தாய்மொழியாக் கொண்ட முஸ்லிம்கள் முஸ்லிம் தேசிய இலக்கியம் சம்பந்தமான ஒரு மாநாட்டை நடாத்துவதில் பின் நிற்கின்றனர் என்கிற குற்றச்சாட்டுக்கள் வெளிக்கிட ஆரம்பித்துள்ள நிலையில் இவ்வாண்டில் கொழும்பில் நடைபெற ஏற்பாடாகிவருகின்ற இஸ்லாமிய இலக்கிய தமிழ் மாநாடு என்பதை முஸ்லீம் இலக்கிய மாநாடு என்கிற பெயரைக் கொண்டு அழைத்தால் என்ன? என்கிற தேவையும் தற்போது பேசப்பட்டு வருகின்றது.
அந்த அடிப்படையில் எழுத்தாளரும், ஆய்வாளருமான நவாஸ் சௌபியினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முஸ்லிம்களின் தனித்துவமான இலக்கியங்களை முழுமையான வடிவமாக வடித்தெடுகின்ற ஒரு செயற்பாட்டை முஸ்லிம் தேசிய இலக்கியம் என்கிற பெயரில் முன்கொணர்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். குறிப்பாக எதிர்வரும் மாநாட்டை இப்பெயரில் நடாத்தினால் என்ன என்கிற கேள்விகள் இலங்கை வாழ் முஸ்லிம் இலக்கியவாதிகள் பலரிடம் காணப்படுகின்றது.
இதனை ஆய்வு செய்து, தனித்துவமான இஸ்லாமிய மக்களினால் படைக்கப்படுகின்ற அனைத்திலக்கிய வடிவங்களையும் ஒருமுகப்படுத்தும் வகையில் முஸ்லீம் தேசிய இலக்கியம் முழுமைபெறுமாக இருந்தால் இந்நாட்டில் மாத்திரமல்ல உலகின் எங்கெல்லாம் இஸ்லாமியர்களால் படைக்கப்படுகின்ற இலக்கியங்கள் இந்த முஸ்லிம் தேசிய இலக்கியங்களுக்குள் வகைப்படுத்தப்படுவதற்கு ஒரு வழியாக அமையும்.
அதேவேளை, இலங்கை போன்ற நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம்களின் தாய்மொழி தமிழாக இருப்பதனால் அம் மொழி அவர்களுடைய மொழியல்ல என்கிற கருத்தினையோ, தேசியத்தை ஊட்டுகின்ற விடுதலை வேட்கையான சொல்லாடல்களைக் கொண்டு இவர்கள் தனிநாட்டுக்குரிய கோரிக்கையை முன்னெடுகின்ற ஒருவழியாகவோ இதனைக் கொள்ளவில்லை என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.
அதாவது தனித்துமான சிந்தனைகள் தங்களுடைய மதரீதியான அடிப்படையில் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படுகின்ற இலக்கியப் படைப்புக்களை ஒன்று திரட்டுவதும், அவர்களால் படைக்கப்படுகின்ற, பேசப்படுகின்ற பழையை, புதிய, நவீன, முற்போக்குடைய அனைத்துவகைப் இலக்கியப் படைப்புக்களையும் ஒன்று சேர்க்கின்ற விடயத்தில் எழுத்தாளரான நவாஸ் சௌபி அவர்களது முயற்சிகள் பாராட்டத்தக்கதாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு “முஸ்லிம் தேசிய இலக்கியம்” என்கிற சிறு நூல் ஒன்றையும் யாத்துள்ளார்.
எனவே. முஸ்லிம்களின் தனித்துவமான அடையாளங்களை ஒன்று சேர்க்கின்ற முஸ்லிம் தேசிய இலக்கியம் அல்லது முஸ்லிம்களது இலக்கியக் கோப்புக்கள் எதிர்கால சந்ததிகளுக்கான ஒரு அடையாளச் சின்னமாக மாற்றம் பெறுவதற்கு இலங்கைவாழ் முஸ்லிம்கள், முஸ்லிம் இலக்கிய ஆர்வலர்கள், முஸ்லிம் இலக்கியவாதிகள் அனைவரும் ஒன்றுபட்டு முஸ்லீம் தேசிய இலக்கியத்தை கட்டியெழுப்ப முயற்சிகளை மேற்கொள்வோமாக?
(எஸ்.எல்.மன்சூர்)