Published On: Wednesday, May 01, 2013
மீன்பாடும் தேன்நாட்டின் பண்டைக்கால வரலாறு
தேசமொன்றின் வரலாற்றினைக் கூறுவது இலக்கியங்களும் தொல்பொருள் மூலாதாரங்களுமேயாகும். எனினும் இலக்கியங்கள் அது எழுதப்பட்ட காலத்திற்கும் அதனை எழுதியவரின் கற்பனா சக்திக்கும், மனோநிலைக்கும் உட்பட்டவை. எனவே இலக்கியங்கள் வரலாற்றினைக் கூறும் வேளையில் அவை மிகைப்படுத்திக் கூறுவதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளன. ஆனால் தொல்லியல் ஆதாரங்கள் அவ்வாறானவையன்று.

அவை நம்பகமான வரலாற்றுத் தன்மையினைக் கூறும் இயல்புடையவை. இலங்கையின் ஆரம்பகால வரலாறானது ஐதீகங்களின் அடிப்படையில் அமைந்திருந்தது. எனினும் தொல்லியலில் ஏற்பட்ட வளர்ச்சிநிலை இந்நிலையில் மாற்றங்களை உண்டுபண்ணி ஆதாரங்களுடனான வரலாற்றினைக் கட்டியெழுப்பியது. தமிழர்களின் பூர்வீக தேசமான மட்டக்களப்பு வரலாற்றில் தொல்லியல் ஆய்வுக்கான முயற்சிகள் இடம்பெற்றிருந்த போதிலும், அவை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு முழுமையான நிலையை அடையாமை கவலைக்குரியது. இங்கு தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமாயின் மட்டக்களப்பு வரலாற்றின் வளர்ச்சிப்படிகளை கண்டுகொள்ளமுடியும்.
கிழக்கிலங்கையின் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல பிரதேசங்கள் தொல்லியல் ஆதாரங்கள் நிரம்பப் பெற்றவை. ஆயினும் அவை இன்னும் அடையாளப்படுத்தப்படாதவை. அடையாளப்படுத்தப்பட வேண்டியவை. இங்கு குறிப்பாக குடும்பிமலை, பெரியமியன்கல் (பத்தாவெடி) போன்ற பிரதேசங்கள் தொல்லியல் ஆதாரங்கள் நிரம்பப் பெற்றவை. இப்பகுதிகளில் கல்வெட்டுக்கள் பலவற்றை எம்மால் அடையாளங் காணமுடிந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்தின் சந்தியிலிருந்து மேற்குநோக்கிச் செல்லும் பாதையில் 25கி.மீ பயணம் செய்தால் குடும்பிமலை பிரதேசத்தைச் சென்றடைய முடியும். இப்பிரதேத்திலுள்ள தொல்லியல் ஆதாரங்களை கண்டறியும் ஆய்வு முயற்சியொன்று அப்பிரதேசகிராமசேவையாளர் ச.குரு, அப்பிரதேச கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களான ச.புனிதநாயகம், க.பொன்னுத்துரை, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களாகிய க.சந்திரமேகன், க.நிராஜ்மேனன் ஆகியோரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் அங்கு பல தொல்லியலாதாரங்களை கண்டுகொள்ள முடிந்தமை மகிழ்ச்சிக்குரியது.
கி.மு மூன்றாம் நூற்றாண்டுமுதல் கி.பி. நான்காம் நூற்றாண்டுவரை தென்னாசியத் துணைக் கண்டத்தில் எழுதப்பட்டுள்ள ஆவணங்கள் எல்லாம் பிராமி எனும் வகைக்குரிய வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளன. தமிழகத்தில் வழங்கிய இந்த எழுத்து முறையில் தமிழுக்குச் சிறப்பான எழுத்துக்கள் அமைந்திருந்தமையால் அதுதமிழ் பிராமி என்று அழைக்கப்பட்டது. இலங்கையில் 2000க்கு மேலான பிராமிசாசனங்கள் உண்டு. இவை பெரும்பாலும் மலைகளிலும் பெருங்கற்பாறைகளிலும் குகைத்தளங்களிலும் வெட்டப்பட்டுள்ளன.
இவற்றிலே காணப்படும் சொற்களும் சொற்றொடர்களும் பெரும்பாலும் பொதுவானவை. இவற்றில் பெரும்பாலனவை ஓரிருவரிகளில் துறவிகளுக்கு அக்காலச் சமூகத்தின் பலதரப்பட்டமக்கள் அளித்த நிலம், கால்வாய், குகை, கற்படுக்கை, உணவு போன்ற தானங்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றில் பலவற்றில் தானமளித்தவர் பெயரோடுஅவரின் வம்சம், பட்டம், பதவி, தொழில், சமயம், இனம் போன்றவையும்,அவர்கள் வாழ்ந்த இடம், ஊர் போன்ற செய்திகளும் கூறப்படுகின்றன. இவை நாவலந்தீவின் பொதுவழக்கான பிராகிருதமொழியில் அமைந்தவை. குடும்பிமலை, பத்தியாவெளி போன்ற இடங்களில் சிலசாசனக் குறிப்புக்கள் உள்ளடங்கலாக தொல்லியல் தடயங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
குடும்பிமலை பிரதேசத்தில் காணப்படும் கல்வெட்டுச் சாசனமானது 5அடி நீளமும் 2அடி அகலமும் கொண்டது. (படம்-1) 5 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ள இதில் மேலுள்ள ஒருவரி நேர்த்தியில்லாதது. மீதமாகவுள்ள நான்குவரிகளும் கட்டமைக்கப்பட்ட செவ்வகவடிவில் அமைந்த பரப்பினுள் அமைந்தவை, நேர்த்தியானவை. இதில் 2,3ஆம் வரிகளின் இடைநடுவில் சிலஎழுத்துக்கள் அழிந்துபோயுள்ளன. இவ்வெழுத்துக்களில்; வளர்ச்சியடைந்த போக்கைக் காணமுடிகின்றது. கி.பி 2ஆம் நுற்றாண்டுகாலப்பகுதிக்குரியவையாகக் கருதமுடிகின்றது. பிராகிருதமொழிவழக்கானவை.
இச்சாசனத்தினை முழுமையாக படிக்க முடியவில்லை. எனினும் அதில் “மகாராஜ அபயஹ”எனும் சொற்கள் காணப்படுகின்றன. இதன்படி இப்பிரதேசத்தின் அரசனான அபயன் என்பவனால் நடத்தப்பட்ட ஏதோவோர் நிகழ்ச்சி பற்றி இச்சாசனம் குறிப்பிடுகின்றது. இச்சாசனப்பொறிப்பினை ஓர் தானசானமாகக் கொள்ளலாம். இதிலுள்ள இச்சொற்றொடரிற்கும் அதன் சூழலிற்கும் தொடர்பிருப்பதனைக் காணமுடிகின்றது. சிறியதும் ஆழம் குறைந்ததுமான குளங்;கள் இப்பகுதிகளின் பல இடங்களில் காணப்படுகின்றன. இவை நீர்வசதி குறைந்த இப்பிரதேசத்தில் மக்களினுடைய தேவைக்காக அல்லது தனிப்பட்டோருக்காக அமைக்கப்பட்டுத் தானமாக வழங்கப்பட்டிருக்கலாம் என யூகிக்க முடிகின்றது. எனினும் அவை உறுதியாக கூறமுடியாதவை. வரலாற்றாய்வாளர்களின்; பரிசீலனைக்கு உட்படவேண்டியவை.
இதிலுள்ள அபயஹ எனும் சொல்லில் அபய என்பது வடமொழி வழக்கானவை. இலங்கையில் கிடைக்கின்ற சாசனங்களில் இதுபோன்ற சுமன, தீச, விஸாக, குடும்பிக, சமண முதலான சொற்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன. இவ்வகையான சொற்பிரயோகங்கள் இடம்பெறும்போது அவை “அன்று விகுதி சேர்த்து படிக்கப்படுகின்றது. இதன்படி அபய என்பது அபயன்(அபயஹன்) என்றே படிக்கப்படவேண்டும். இது அப்பிரதேசத்தின் தலைவனாக இருந்த அபயன் எனும் குறுநில மன்னனையே குறிக்கின்றது எனலாம்.
இப்பிரதேசத்தின் மற்றுமொரு தொல்லியலாதாரமாக அங்கு காணப்படும் தூண்கள் அவை நேர்த்தியாக செதுக்கப்படவில்லை, நிலத்தில் நாட்டப்பட்டும் மண்ணில் புதைபட்டதுமாகக் காணப்படுகின்ற அவை பல உண்டு. எதற்காக உருவாக்கப்பட்டன என்பதினை உறுதியாகக் கூறமுடியாதுள்ளது. தென்னிந்தியாவில் இறந்த வீரர்களது நினைவாக வீரக்கற்கள் நிறுவப்பட்டன. பழந்தமிழ் இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, ஐந்திணைஐம்பது, தொல்காப்பியம் முதலான இலக்கியங்களில் நடுகல் வழிபாடு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பெருங்கற் காலத்தில் இறந்தோரின் நினைவாக குத்துக்கல் எனப்படும் நினைவுக் கற்கள் எழுப்பப்பட்டன. இவை முற்றிலும் உருவம் வரையப்படாதவை. கி.மு1000முதல் கி.மு500 வரையானகாலத்தில் இந்நிலையைக் காணலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு இப்பகுதிகளில் நடுகல் வழிபாடு பேணப்பட்டுள்ளது என்கின்ற முடிவிற்கு வரமுடிகின்றது.
இதனோடு மலையில் குளியல் தடாகம் போன்ற அமைப்பும் உள்ளது. அதன் அருகேமலையில் இருவேறாக்கப்படும் வகையில் சங்கிலிபோன்ற அமைப்பில் தொடராக ஓர் கோடு நீண்டு செல்கின்றது. அது அலங்கார வேலைப்பாடாகவோ அல்லது மலையினை இருவேறாக பிரித்த எல்லைக் கோடாகவோ இருக்கலாம். இங்குள்ள கோயிலிலுள்ள ஒருதட்டையான கல்லில் அலங்கார உருவம் செதுக்கப்பட்டிருக்கின்றது. அது இரண்டடிநீள, அகலங்களைக் கொண்டது. இரு பகுதிகளாக பிரிக்கப்பட்ட இக்கல்லின் இரு பகுதிகளிலும் ஒரேவிதமான அலங்காரம் பொறிக்கப்பட்டுள்ளது. தற்போது வழிபாட்டிற்குரிய கற்களை நீளமான தூண் கல்லில் வைத்துள்ளனர். கீழ் அமைந்திருக்கக் கூடிய இக்கல்லின் ஒருமுனையில் வளைவுகளுடன் கூடிய அலங்கார வேலைப்பாடுகள் உண்டு.

இங்கு கிடைக்கப்பெறும் மற்றுமொரு தொல்லியல் ஆதாரமாக கலவோடுகளைக் கூறலாம். அவைசற்றுக் கனமானவை. பூசப்படாத மேற்பரப்பினை உடையவை. இவை ஏராளமாக காணப்படுகின்றன. அளவில் பெரியசெங்கற்கள் காணப்படுகின்றன. இதனடிப்படையில் இங்;கு களிமண்ணாலான பொருட்களின் உற்பத்தி நடைபெற்றிருக்க வேண்டும். அப்பகுதிகளில் தோண்டப்பட்ட நிலையில் காணப்பட்ட குழிகளை நாம் ஆராய்ந்த போது அடுக்கப்பட்ட நிலையில் செங்கற்கள் காணப்படுகின்றன. எனவே இங்கு கட்டடத்தொகுதிகள் இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப்பெறுகின்றன.
ஓரிடத்தில் மலையின் ஒருபகுதி குடைந்துள்ளதினைப் போன்று வெட்டப்பட்ட மலை உண்டு. அதிலே நீர் வழிந்தோடுவதற்கான கற்பீலிகள் அமைந்துள்ளது. கல்வீடு என அழைக்கப்படும் இவ்விடம் சமயதுறவிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருக்கலாம். எனினும் இங்குசாசனப் பொறிப்புக்கள் கிடைக்கவில்லை. இதன் அருகில் உள்ள கல்லில் ஓர் பாத அடையாளமும் உண்டு. பொதுவாக இவை பெருங்கற்கால பண்பாட்டுமக்கள் இப்பகுதிகளில் வாழ்ந்தமைக்கான உறுதியானசான்றுகளாக நாம் கொள்ளமுடியும். எனினும் பூரணமான ஆய்வுகள் செய்யப்படாத நிலையில் இது பற்றிய உறுதியான முடிவினைக் கூறமுடியாதுள்ளது.
குடும்பிமலையிலிருந்து சற்று 3கிலோமீற்றர் தொலைவில் பத்தாவெடி எனும் ஓர் இடம் உண்டு. அங்கே ஒருவரியில் சாசனம் ஒன்றுகிடைத்துள்ளது. (படம்-3) அடர்ந்தகாட்டினுள் அமைந்த இது அங்குவாழும் வேளாண்மைசெய்பவர்களாலும். மாடுவளர்ப்பவர்களாலும் வணங்கப்படும் அவர்களின் குலதெய்வம் இருக்கும் இடத்;திற்கு அருகில் அமைந்துள்ளது. 9 எழுத்துக்களினை கொண்ட இது 3 அடிநீளமானது. முன்பு குறிப்பிட்ட குடும்பிமலை சாசன எழுத்தின் சமகாலத்தவை. இதில் முரண் எனும் சொல் இடையில் தென்படுவதினைக் காணலாம். இது தமிழிற்குரிய சிறப்புச் சொல்லாகும். இச்சாசனம் காணப்படும் இடத்திற்கு சற்று அருகாமையில்; கருங்கற்கள் அடுக்கிய திட்டுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பெருங்கற்படைக்காலம் என்பதுகி.மு 1000 முதல் ஆரம்பமாகின்றது. பெருங்கற் பண்பாட்டைஉருவாக்கியமக்கள் இறந்தோரைஅடக்கம் செய்வதற்கு பெருங்கற்களால் ஆன ஈமச்சின்னங்களை அமைத்தமையினால் இவர்கள் காலப் பண்பாடு ‘பெருங்கற்காலப் பண்பாடு’ என்ற பெயர் பெறுகின்றது. எனவே இக்கற்திட்டுக்கள் பெருங்கற்படைக்காலத்தில் வாழ்ந்த இம்மக்களினால் ஈமக்கிரியைகளின் போது உருவாக்கப்பட்டிருக்கலாம். பெருங்கற்படைக்காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது இறந்தவர்கள்; பயன்படுத்திய பொருட்கள்,அவர்களுக்கு விருப்பமானவைகள், ஏனைய தானியங்;கள் போன்றவை அவர்களினுடைய உடலோடு வைத்து அடக்கம் செய்யப்படும். எனவே இவ்விடத்தினை அகழ்வாய்வு செய்யும்; போது பெருங்கற்படைக்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களினுடைய வாழ்க்கைமுறை, இதனோடிணைந்த இலங்கையின் ஆதிகால வரலாற்றுமரபின் உற்பத்திமரபுகள் முதலான பல விடயங்களினைக் பெற்றுக் கொள்ளமுடியும்.
இவற்றுடன் இக்கருங்கல் திட்டுகளுக்கு அண்மையில் மக்கள் வீடுகள் கட்டி இருந்தமைக்கான தடயங்களும் கிடைக்கின்றன. இதன்படி வீட்டினுடைய அமைப்பு, அறைபிரிப்புகள் கொண்டதாக அமைந்துள்ளது. சிறுசிறு அறைகளாக குறிப்பாக 6 அடிநீளமும் 3அடி அகலமும் கொண்டதாக அவைபிரிக்கப்பட்டிருப்பதினைக் காணலாம். எனவே இது வீடு அமைக்கப்பட்டதற்கான இடமாகக் கொள்ளமுடிகின்றது. இது போன்று ஓரிரு இடங்களில் உண்டு. இதனை அக்கால சமுதாய அமைப்பின் ஓர் அம்சமாக கொள்ளமுடியும். இவ்வீடுபோன்ற அமைப்பினைச் சுற்றி கருங்கற்கள் ஓவ்வொரு அடிநீள இடைவெளியில் வேலிபோன்ற அமைப்பில் நடப்பட்டு இருப்பதினைக் கொண்டு அவை ஒவ்வொருவீட்டின் நிலப்பரப்பின் எல்லையை சுட்டுவதாக அமைந்தவைஎனலாம். எனவே அக்காலமக்கள் எல்லைகளை வகுத்து வாழ்ந்தமை தெரிகின்றது.
இங்கும் செங்கற்கள் கிடைக்கப்பெறுகின்றன. ஆவை அளவில் பெரியவை. ஒன்றன் மேல் ஒன்று அடுக்கப்பட்ட நிலையில் உள்ளவை. வலிமையானவை. குடும்பிமலை பிரதேசத்தில் கிடைத்த செங்கற்கள் போன்றவை கருங்கல் திட்டுக்கள் உள்ள இடத்தில் அதிகமாகக் கிடைக்கின்றன.
இப்பிரதேசங்களில் உள்ள தொல்லியல் ஆவணங்கள் முக்கியமானவை, பாதுகாக்கப்பட வேண்டியவை. இவற்றுடன் இவை கூறும் விடயங்கள் என்னவென்பது ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டியவை. ஆதிகா லவரலாற்றம்சங்களை கொண்டுள்ள இப்பிரதேசங்கள் அகழ்வாய்வுகளுக்கு உட்படுத்தப்படவேண்டியவை. இதற்கு சட்டரீதியான அனுமதியும், ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில் எம்மால் எமது பிரதேசம் பற்றிய வரலாற்றம்சங்களை அடையாளப்படுத்தவும், ஆவணப்படுத்தவும் முடிகின்ற வேளையில் இப்பிரதேசத்தினுடைய வரலாற்றினோடு இணைந்த வகையில் மட்டக்களப்பின்; வரலாறும் கட்டியெழுப்பப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
(குகதர்சன்)
