Published On: Wednesday, May 01, 2013
மக்களை வாட்டி வதைக்கப் போகும் மின்கட்டண அதிகரிப்பு

நாட்டின் முக்கிய பிரச்சினையெனக் கருதப்படும் இனப்பிரச்சினையைவிடவும் முக்கிய பிரச்சினையாக அன்மையில் அரசு கொண்டுவந்த மின் கட்டண அதிகரிப்பைக் கூறலாம். எக்கால கட்டத்திலும் மக்களின் அன்றாடத் தேவையான ஒரு அத்தியவசியப் பண்டமாகக் கருதப்படும் மின்சாரம் அனைத்துவகை மக்களினதும் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றது. சனத்தொகை அதிகரிப்பு மின்சாரத் தேவையின் அளவை அதிகரிக்க வேண்டிய அவசியம் உணரப்பட, இதன் உற்பத்தியும் பலமடங்காக அதிகரிக்கலாயின.
அதற்காக நீர் மின்சார உற்பத்தியிலிருந்து நவீன முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவுக்கு நிலைமை மாற்றம் காணலாயின. நீர் தேக்கங்களின் ஊடாக பெற்று வந்த மின்சாரத்திற்குப் பதிலாக பாரிய இயந்திரங்களைகொண்டு மின் உற்பத்தியாக்க, அதிகளவு மசகு எண்ணெய் தேவைப்பட்டது. இதற்கான செலவுகள் மக்களின் தலையில் விழுந்தன. இதன்பின்னர் நுரைச்சோலை அனல் மின்சார நிலையம் ஆரம்பிக்கப்பட்டு தேசிய உற்பத்தியில் அவை இணைக்கப்பட்டன. அப்போது மின்சாரக் கட்டணம் குறையும் என அரசு அறிவித்தது. இருப்பினும் மின்கட்டணம் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை.
நமது நாட்டில் காணப்படும் சுமார் 350க்கும் மேற்பட்ட சிறிய பெரிய நீர்வீழ்ச்சிகளிலிருந்து சரியான முறையிலான மின்சார உற்பத்தியை தொடர முடியாதளவுக்கு நாட்டுக்கும், மக்களுக்கும் சுற்றாடல் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் நவீன மின் உற்பத்திகள் காணப்படுகின்றமை கவலைக்குறிய விடயமாகும். அதேவேளை விரல் விட்டு எண்ணக்கூடிய நீர் மின் நிலையங்களிலிருந்து உற்பத்தியாகின்ற இலங்கையின் மின்சாரம் நாட்டின் மின்தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமானதாகவும் இல்லை.
இருப்பினும் மக்களின் அதிகரிப்புக்கு ஏற்ப மின்சாரத்தை வழங்கவேண்டிய பொறுப்பு அரசுக்குண்டு. அதன்காரணமாக அனல் மின் உற்பத்திசாலைகளை உருவாக்க முனைந்தன. நுரைச்சோலை, சம்பூர் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கு மக்களும், சுற்றாடல் ஆர்வலர்களும் அரசுக்கு எதிராக கோரிக்கை விட்டபோது அரசு கூறிய காரணம் பழமையான நீர் மின் உற்பத்திகளுக்கு செலவுகள் அதிகம். தற்காலத்தில் அனல் மின் உற்பத்தி உலகம் முழுவதும் வியாபித்துள்ளன. இதன் காரணமாக மின் கட்டணம் குறையும் என்றனர். ஆனால் குறைவு ஏற்பட்டதா? உலகிலேயே வரி குறைவாக அறவிடப்படும் நாடு இலங்கை என்று அண்மையில் ஒரு அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அதனால்தான்போலும் வரியை மின் கட்டணத்திலும் அதிகரித்துள்ளனர்.
இலங்கையின் பொருளாதாரத்தில் விழுந்துள்ள ஓட்டை தற்போது மிகப்பெரியளவில் வியாபித்து வருகின்ற காரணத்தினால் அனைத்துப் பொருள்களிலும் வரி அறவிடுதல் என்கிற பேரில் விலைகள் அதிகரிக்கப்பட்டு வருவதாக பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். வெளிநாட்டு உதவிகளில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நிவர்த்திக்க வரியை அதிகரிப்பதன் மூலம் ஈடுசெய்யலாம் என அரசியல் வாதிகள் நம்புகின்றனர். இது மக்களின் கொந்தளிப்புக்கு வழிவகுக்கும் என்கின்றனர் எதிர்க்கட்சிகள். அண்மையில் மின் கட்டண அதிகரிப்பு சம்பந்தமாக நாட்டின் பாராளுமன்றில் கடும் சொற்போர்கள் இடம்பெற்றமை ஞாபகமிருக்கலாம். இதற்கு ஈடுகொடுக்க முடியாத பாராளுமன்ற அமர்வு அடுத்தநாள்வரை ஒத்திவைக்கப்பட்டன.
மக்களின் தலைமேல் விழுந்துள்ள ஒரு முக்கிய பிரச்சினையை மக்களவையில் எடுத்தாளுகின்றபோது அச்சபை ஒத்திவைக்கப்படுகின்ற ஒரு நிலைமை இன்று உலகில் இலங்கையைத் தவிர வேறெங்கும் இல்லை என்கின்றனர் எதிர்கட்சியினர். மின் கட்டண உயர்வுக்கு மாணியம் வழங்கப்படவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலர் கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கருத்துப்படி நீதிமன்ற உத்தரவையும்மீறி மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளமை மக்களை மேலும் மேலும் கஷ்டத்திற்குள்ளாக்கும் செயலென அவர் தெரிவித்திருந்தார்.
உலகில் மசகு எண்ணெய்க்கான விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் இலங்கையில் பெரியளவில் மாற்றம் ஏற்படுவதில்லை. அதிகரித்துச் செல்லும் பெற்றோலியப் பொருட்கள் காரணமாக இன்று அனைத்துப் பொருட்களிலும் விலை அதிகரிப்பு தாக்கம் செலுத்துகின்றன. அதேபோல மின் கட்டண உயர்வும் அதிகமான பொருள்களின் விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் பகல் முழுவதும் எரிகின்ற ஒரு நாடு இலங்கைதான். பிரதேச மின்சார சபை ஊழியர்கள் அல்லது பிரதேச சபை ஊழியர்கள் உரிய நேரத்திற்குள் தெரு மின்விளக்குகளை அணைப்பதிலிருந்து தவறிவிடுகின்றனர்.
குறிப்பாக தென்கிழக்குப் பிரதேசங்களில் காணப்படும் கிராமங்களில் பல தெருவிளக்குகள் பகற்காலங்களிலும் எரிந்து கொண்டே இருக்கும். அதனை அணைப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை. அதேபோல் ஆளும் அரசியல் வாதிகளின் வீடுகளில் பல மின்விளக்குகள் எரிகின்றன. அணைக்கவோ, குறைக்கவோ மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் ஆளும் அரசியல்வாதிகள். அவர்கள் மக்களின் வரிப்பணத்தில் வாழ்பவர்கள். அவர்களது சுகபோகங்களுக்கு மக்களிடமிருந்து வரி அறவிடப்படுகின்றன.
மேலும் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் என்கிறபேரில் பல கண்காட்சிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தயட்டகிருள கண்காட்சி. இதற்காக பல நாட்கள் எரிக்கப்படுகின்ற மின்சாரம் எந்தக் கணக்கில் செல்கின்றது. இதுபோன்று பல வீணான செயற்பாடுகள் காரணமாக மின்சாரத்தின் தேவை அதிகரிக்க அதிகரிக்க அனைத்தையும் மக்களே சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்தி;ற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மின்சாரத்தைக் கொண்டு உற்பத்தியாகின்ற அனைத்துப் பொருட்களினதும், சேவைகளினதும் கட்டணங்கள் உயர்கின்றன.
வருடாந்தம் அதிகளவான மழை பொழிகின்றது. சேமிக்க பல நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நீர் மின்சாரத்தை சரியான முறையில் திட்டமிட்ட அடிப்படையில் வெற்றி கொள்ளவில்லை என்பதாகவே கூறப்படுகின்றது. அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட மேல் கொத்மலைத் திட்டத்திலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. இவ்வாறான நிலையில் பெற்றோலியப் பொருட்களின் உதவியுடன் உற்பத்தியாகும் மின்சாரத்தின் கட்டணம் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாத ஒன்றே. ஆனாலும் மக்கள் மீதான சுமைக்கு அரசே பொறுப்புக்குக் கூறவேண்டியதும் கட்டாயமாகும்.
இன்று நாட்டின் பொருளாதாரம் ஒரு மயக்கமான நிலையில் காணப்படுகின்றது. நாளுக்குநாள் பொருள்களின் விலை அதிகரித்துச் செல்கின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவிகளில் பாரிய தடை ஏற்பட்டுள்ளன. அண்மையில் அமெரிக்கா, இலங்கைக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகின்ற உதவிகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தில் பாரியளவு சீனாவின் பங்களிப்பு காணப்படுகின்றமையினாலும், நாட்டின் இனப்பிரச்சினை, நாட்டில் மனிஉரிமை மீறல்கள், யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் ஏற்பட்ட மனித, பொருள் அழிவுகள், அதிகரித்த ஆயுதக் கொள்வனவுகள், இராணுவ வீரர்களின் அதிகரிப்பு, தென்பகுதியில் அமைக்கப்படுகின்ற பாரியளவிலான அபிவிருத்திகள், ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்காக அரசு செலவு செய்கின்ற பாரியளவிலான நிதி போன்ற பலதரப்பட்ட விடயங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சிக்கலான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனைத் தவிர்ப்பதற்குரிய மாற்று நடடிவக்கை மின்சாரப் பட்டியலை அதிகரிப்பது என்கிற குற்றட்சாட்டுக்களும் எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நிலையில் மக்கள் தற்கொலை செய்யும் அபாயத்தை அரசு மேற்கொண்டுள்ளது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை “மின் கட்டண அதிகரிப்பு சாதாரண மக்களை பாதிக்காது” என்பதாகும். இதனை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருந்தது. அதாவது அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி மின்கட்டணம் தொடர்பில் தெரிவித்த கருத்துக் குறித்தே ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன இவ்வாறு தெரிவித்திருந்தார். அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் தலைமையில் அலறி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர்களது சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த பவித்ரா வன்னியாராய்ச்சி, மின்சாரக் கட்டண அதிகரிப்பானது சாதாரண மக்களை பாதிக்காது எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு மின்சாரக் கட்டணத்தை வரலாறு காணாத வகையில் அதிகரித்து விட்டு இப்போது இந்த அதிகரிப்பானது சாதாரண மக்களை பாதிக்காது என்ற நல்லதொரு நகைசுவையை அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி கூறியுள்ள இந்தக் கதையை கேட்டால் நேற்று பிறந்த குழந்தையும் வாய் விட்டு சிரிக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதுவே இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவையாகும் என்பது அவர்கருத்து.
இவ்வாறு மக்களின் தலைமேற் சுமத்தப்பட்டுள்ள ஒருவிடயம் கேலிக்கூத்துக்குள்ளாகி வருகின்ற அதேவேளை நிதி நெருக்கடியினால் அவதியுறும் இலங்கையின் வரி அறவிட ஏதுவாக வருமான எல்லையும் குறைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் ஈட்டுவோரிடமிருந்தும் வருமான வரியை அறவீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கை இறைவரித் திணைக்களத்தின் யோசனைக்கு அமைய வரி அறவீடு செய்யப்படவுள்ளது. இதன்படி, இதுவரை காலமும் வரி அறவீடு செய்வதற்கான வருமான எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட தொகை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் ஈட்டுவோரும் வரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. 600,000 ரூபா வருடாந்த வருமானம் ஈட்டுவோருக்கே இதுவரை காலமும் வருமான வரி அறவீடு செய்யப்பட்டது.எனினும், தற்போது இந்தத் தொகை 400,000 ரூபாவாக குறைக்கப்பட உள்ளது. இந்த உத்தேசத்திட்டத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்ள அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதேவேளை கடந்த 26 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்கட்டணம் எவ்வித அடிப்படையும் இல்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் எந்த முன் அறிவித்தலும் இன்றி கடந்த மாதத்துக்கும் இந்த மின் கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. என்று கூறும் எதிர்க்கட்சிகள், இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள வருமான இழப்புகளை ஈடுசெய்வதற்காகவே தற்காலிகமாக இந்த மின் கட்டண உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது என அரசு கூறுகின்றது. நல்லவேளை நாட்டில் எந்தவொரு நீர்த்தேக்கங்களும் உடைந்தோ அல்லது நீர்வற்றியோ காணப்படவில்லை. இல்லாவிட்டால் அதனையும் அரசாங்கம் மின் கட்டண உயர்வுக்கு காரணம் காட்டிருக்கும். கொழும்பில் லம்போகினி கார் பந்தய போட்டி நடாத்தப்பட்டது. இதற்கு பல மின் விளக்குகள் பொறுத்தப்பட்டன. காரணம் ஜனாதிபதியின் மகன் இதில் பங்கேற்றார். ஜனாதிபதி மகன் என்றால் மின்சாரம் இலவசமா? அதுவும் வீண்விரயம் ஆகாதா? இதனை ஏன் பொதுமக்களுக்கு வழங்க முடியாது. மின்கட்டண உயர்வு பொதுமக்களுக்கு சாதாரணமான விடயமென என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார். இவரைப்போன்ற அமைச்சர்களுக்கு இது சாதாரண விடயம்தான். காரணம் அரசாங்கம் தானே இவர்களுடைய மின் கட்டணத்தை செலுத்துகின்றது. ஆகவே இவ்வாறுதான் கூறுவார். பாதிக்கப்படுவது சாதாரண பொதுமக்கள் என்பதை உணரமாட்டார்கள் என எதிர்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கூற்றுக்களுக்கு ஆதரவாக அமைச்சர் விமல் வீரவன்ச கருத்துத் தெரிவிக்கையில் மின் கட்டண அதிகரிப்பானது ஒரு நியாயமான செயற்பாடெனத் தெரியவில்லை. இதனை திருத்தியமைக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். இந்நிலையில் மின்சார சபையில் தலைவிரித்தாடுகின்ற மாபியாக்களை உடனடியாக இனம்கண்டு விரட்டியடிக்க வேண்டும். குறிப்பாக டீசல் திருடும் கும்பல்கள் மற்றும் தமது அடியாட்களை மின்சார சபையில் வேலைக்கமர்த்தும் கும்பல்கள் ஆகியவற்றை முதலில் இனம்காண வேண்டும். இதேவேளை, குறித்த பிரச்சினை கடந்த 1977 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையின் பின்னர் உருவான நிலைமையாகும். அதன் பின்னர் தான் அரச உடைமையாகவிருந்த மின்சார சபையானது தனியார் மயமாக்கப்பட்டது இதிலிருந்தே இப் பிரச்சினை ஆரம்பமாகியது. இப் பிரச்சினையானது எந்தவொரு அரசாங்கமும் ஆட்சிக்கு வந்தாலும் இது நீண்டு கொண்டே செல்லும். இது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் பிரச்சினையே கிடையாது. இப் பிரச்சினையை அரசினால் தீரக்க முடியாத அதேவேளை, மின்சார துறை முழுமையாக அரசின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்த கருத்துக்களும் ஆராயப்படவேண்டிய ஒன்றாகும்.
இவ்வாறு, மின்சார உற்பத்திக்கான செலவுகளுக்கும், அதனைப் பயன்படுத்துகின்ற மேலதிக செலவுகளுக்கும் மக்களின் தலைமேற் சுமத்துவதிலிருந்து அரசு விலக்களிக்க வேண்டும். நாட்டின் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கேற்ற ஊதியம் அதிகரிக்கப் படவில்லை. ஆனால் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் பொருளாதாரக் கஷ்டங்களில் மிகவும் கவலையடைந்துள்ள அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்புக்களைச் அரசு மேற்கொள்ள வேண்டும். அல்லது அவர்களது வீடுகளில் பாவிக்கப்படுகின்ற மின்கட்டணங்களையாவது அரசு செலுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உலகில் மின் உற்பத்தியை மேற்கொள்ள செலவு குறைந்த வழிவகைளை கண்டறியவேண்டும். இன்று செயற்கை முறை மின்சார உற்பத்திகள் பல காணப்படுகின்றன.
அந்தவகையில் அனல் மின்சார உற்பத்தி, அணு மின்சார உற்பத்தி, நீர் மின்சார உற்பத்தி, காற்றுத் திறன் மின்சார உற்பத்தி, சூரியக்கதிர் மின்சார உற்பத்தி, கடல் அலை மின்சார உற்பத்தி, உயிரி வாயு மின்சார உற்பத்தி போன்றனவாகும். இவற்றில் இலங்கையில் காணப்படுகின்ற நீர் மின் நிலையங்களில் நீண்டகாலமாக உற்பத்தியில் ஈடுபடுகின்ற சாதனங்களை அகற்றி புதிய தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடியவாறு மின்சாதனங்களை மாற்றியமைத்து மக்கள் மீது சுமக்க முடியாதளவுக்கு வரிகளை அறவீடு செய்வதிலிருந்தும் விலக்களித்து மக்களை வாடிவதைக்கப்போகின்ற மின் கட்டணத்தைக் குறைக்கின்ற ஒரு திட்டத்தை அமுல்படுத்தி மக்களின் வாழ்வியல் சுமைகளை குறைக்க அரசு முற்படவேண்டும். இல்லையேல் நாட்டு மக்கள் முழுமையாக அரசின் மீதுள்ள நம்பிக்கையை இழப்பதற்கு மின்கட்டண உயர்வு காரணமாக அமைந்துவிடும். காந்திஜீ அவர்களின் பொன்மொழி “தான் வாழும் சமுதாயத்திற்கு சிறந்த சேவை செய்பவனே உண்மையான சமூகத் தொண்டனாவான்” எனக் கூறுகின்றார். இதனையாவது ஆட்சியாளர்கள் விளங்கிக் கொண்டால் எல்லாமே சரிதான்!
(கழுகுப் பார்வை)