Published On: Wednesday, May 22, 2013
தமிழ்-முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் கருத்துக்கள் ஆரோக்கியமானதல்ல
அண்மைக்காலமாக தமிழர் முஸ்லீம் உறவுகளில் நல்ல முன்னேற்றம் கண்டு வருவதை பார்க்கின்றபோது அது கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த உறவை புதுப்பிக்கும் வகையில் வருவது கண்டு பலரும் அகலக் கண்திறக்கின்றனர். ஒருகாலத்தில் புட்டும் தேங்காய்ப்பூவும்போல இருந்து வந்த இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வில் பாசாங்கு செய்வதுபோல உள்ளே ஊருடுவி அவர்களைப் பிரிக்கவைத்த சக்திகள் இந்த அரசியல்வாதிகள் என்பதை இரு சமூகமும் உணர்ந்துள்ள நிலையில் கடந்தகால பிரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழர்தரப்பு பல்வேறுபட்ட பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பது யாவரும் அறிந்தவிடயம். கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது தமிழர் தரப்பு குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லீம்களை அரவணைத்துச் செல்ல பல்வேறு எத்தனங்களை மேற்கொண்டபோதிலும் அதனை முக்கிய முஸ்லீம்களின் கட்சியான ஸ்ரீ.ல. முஸ்லீம் காங்கிரஸ் ஒத்துக் கொள்ளவில்லை என்பதும் அறிந்தவிடயமே.
இந்நிலைமையில் முஸ்லீம் கட்சிகள் அரசுடன் ஒட்டிக் கொண்டுள்ள நிலைமையிலும் முஸ்லீம்களுக்கான அநியாயங்கள் தொடர்ந்தபோது முஸ்லீம் மக்கள் இந்த முஸ்லீம் கட்சிகளின்மீது அவநம்பிக்கையைத் தெரியப்படுத்தி அவர்கள்மீது வசைமாறி பொழிந்தனர். இன்றுகூட பல முஸ்லீம்கள் குறிப்பாக கிழக்குவாழ் முஸ்லீம்கள் தமிழர் தரப்பினருடன் இணைந்திருந்தால் இந்த அரசின் செயற்பாடுகளுக்கு முடிவு கட்டியிருக்கலாம் என்கிற கருத்துக்களும் எழுந்தன. இதற்கிடையில் முஸ்லீம் மக்களுடன் இணைந்து அரசியல் செய்வதற்கு தமிழர் தரப்பு முஸ்லீம் மக்களையும் அரவணைத்துச் செல்லும் நோக்குடன் தமிழ்தேசிய கூட்டமைப்புக்குள் ஒரு முஸ்லீம் பிரிவை ஆரம்பித்தால் என்ன? என்கிற வாதப்பிரதி வாதங்கள் அண்மைக்காலமாக கருத்தியல் வாதங்களாக மேலெழுந்து கொண்டிருக்கின்றன. இதில் ஒரு முக்கிய கட்டமாக அண்மையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் ஐயா அவர்கள் மட்டக்களப்பில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசும்போது “வடமாகாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில்யே தமிழர் தரப்பு மற்றவர்களிடம் நியாயம் கோர முடியும்” எனத் தெரிவித்திருந்தார்.
உண்மையில் இந்த நியாயமான கோரிக்கையானது அன்று உணரத்தவறியவற்றை இப்போதாவது ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதையே இவரது கூற்றுக்கள் தொட்டுக்காட்டின. கடந்த சில மாதங்களாக இலங்கை வாழ் முஸ்லீம்களுக்கு நாடு முழுவதிலும் சில பேரினவாத சக்திகள் தடைபோட்டு சமய சார்பான விடயங்களுக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தி நாட்டில் இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்;. முஸ்லீம்கள் சார்பாக பாராளுமன்றம் சென்றவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க ஒவ்வொரு கட்டத்திலும் தமிழர் தரப்பிலிருந்து முஸ்லீம்கள் சார்பாக கண்டனக் கணைகளை விட்டுக் கொண்டே இருந்தனர். இதன் ஒரு தொடர்ச்சியாகத்தான் அண்மையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் திருவாளர் சம்பந்தன் ஐயா அவர்களின் பாராளுமன்ற உரையும் அமைந்திருந்தன. இதனைத் தொடர்ந்து சுமந்திரன் அவர்களது உரைகள் முஸ்லீம்களின் மீதான பாச உணர்வுகளை காண்பித்துக் கொண்டு வருகின்றன.
குறிப்பாக கிழக்கு மற்றும் வட புலங்களில் இரு சமூகங்களும் அதிகமாக வாழ்கின்றனர். இவர்கள் இருதரத்தாரும் தமிழைத் தாய்மொழியாகவே பேசுகின்றனர். தங்களுக்குள் ஒட்டி உறவாடுகின்ற ஒரே சமூகமாகவே கடந்த காலங்களில் வாழ்ந்து வந்தனர். அரசியல் இலாபங்களுக்குள்; அடிமைபட்டிருந்த முஸ்லீம்களின் தலைவர்கள் சிலரும், தமிழர் தரப்பிலிருந்த சில தலைவர்களும் பிளவை ஏற்படுத்திக் கொண்டனர். குறிப்பாக புலிகள்;; முஸ்லீம்களை குறிவைத்துத் தாக்கத் தொடங்கினர். தாக்கத்திற்கு புலிகள் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்திருந்தனர். முஸ்லீம்கள் ஆயுதப்படையினருடன் இணைந்திருக்கின்றனர் என்கிற குற்றச் சாட்டுக்கள் முக்கியமானதாகும். அதேவேளை முஸ்லீம்களுக்கு எதிராக ஆயுதத்தை பிரயோகித்த புலிகளை எதிர்த்துப் பேசுகின்ற தமிழர்களும் புலிகளால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டனர்.
இந்தச் சூழ்நிலையில் புலிகள் வெளியே வந்தபோது முஸ்லீம் தலைவர்களை சந்தித்த புலித்தலைவரான பிரபாகரன் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றியதும், முஸ்லீம்கள் மீது ஆயுதம் பிரயோகித்ததை மன்னிப்புக் கோரியதும் நினைவிருக்கலாம். இன்றைய சந்தர்ப்பத்தில் தற்போது புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட விடயங்களுக்கு அவர்கள் சார்பான மக்களின் பிரதிநிதிகள் மன்னிப்புக்கோருவதும், அவர்களை அரவணைத்துச் செல்வதற்குத் தயாராகுவதும் நல்லதோர் விடயம் என்பதை அறிவுடையோர் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். இதுதான் மனித தர்மமாகும். இஸ்லாமியர்கள் பொதுவாக மன்னிக்கும் மனப்பக்குவம் உள்ளவர்கள். மார்க்கப் பற்றுடையவர்கள். ஒரே இறைவனை வணங்குகின்றவர்கள். பாவம் செய்கின்றவர்களை இறைவன் தண்டிப்பான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர்கள். எப்போதுமே நல்லுறவைப் பேணுவதற்கு தயங்காதவர்கள். அயல் வீட்டில் மாற்று மதக்காரணாக இருந்தாலும் அவர்களில் நேசம் கொள்பவர்கள்.
இவ்வாறான போக்குடையவர்கள் கடந்த காலங்களில் தமிழ்பேசும் மக்களை குலைத்தவர்களை இறைவன் மீது சாட்டுதல் வைத்துவிட்டு வாழ்க்கையை ஓட்டுபவர்கள். அரசியல் வாதிகள் இடையிடே தங்களை வேறுடன் அறுத்தவர்களை ஞாபகமூட்டி மீண்டும் முட்டி மோதவிடுவதில் கைவந்தவர்கள். இச்சந்தர்ப்பத்தில் முஸ்லீம்கள் மீது தாம் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடும் வண்ணம் கூறப்படுகின்ற கூற்றுக்களை ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில் தமிழர் தரப்பிலிருந்து அறிக்கைகள் விடப்படுகின்றபோது அதனை தட்டிக் கழிக்கவேண்டும் என்று ஒருசாரார் கூறினாலும் தற்போது அதற்குரிய மன்னிப்புக்காகவும், ஒரே பிரதேசத்து மக்களான நாம்; இணைந்து செல்வதில்தான் வெற்றி நிச்சயம் உண்டு என்பதை நிதர்சனமாக காண்பதற்கு அழைப்பு விடுக்கின்றனர். இதில் எந்தத் தப்புக்களும் இல்லைதானே.
ஆனால் இதனை தவறாக விளங்கிக் கொண்டு சில தனிப்பட்ட நபர்களால் மீண்டும் மீண்டும் இனச் சாயம் பூசுவதற்கு முயல்கின்றனர். கடந்த வாரம் இரா. துரைரத்தினம்(சுவிஸ்) என்பவரால் சுடர் ஒளி ஞாயிறு சிந்தனைவெளி பக்கத்தில் “தமிழர்களைப் பற்றி யார் பேசுவது?” எனும் தலைப்பில் ஒருகட்டுரையை எழுதியிருந்தார். உண்மையிலேயே இவர்களைப் போன்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு மீண்டும் ஒரு பிரச்சினையான சூழ்நிலைக்குள் தமிழர்களையும், முஸ்லீம்களையும் சிக்கலாக்கும் செயற்பாடுகளுக்கு தூபமிடுகின்றனரா? என யோசிக்க வைத்துள்ளமையினால்தான் நான் இக்கட்டுரையை எழுத வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டேன். கிழக்கில் அக்காலத்தில் முஸ்லீம்கள் மீது கருனா, பிள்ளையான் குழுவினர் புலிகளுடன் இணைந்திருந்தபோது தவறு செய்தார்கள் அவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்கிற வாதங்கள் எல்லாம் ஒரு மட்டம் வரையில்தான் கூறமுடியும். ஒருவன் செய்த பாவங்களை உணர்ந்து அவன் மன்னிப்புக் கேட்டானாக இருந்தால் அதற்கப்புறம் அதனைப் பற்றி பேசவே கூடாது என்பதுதான் நியாயமான அர்த்தமாகும்.
மீண்டும் மீண்டும் பழையவற்றைக் கிளறுகின்றபோது அது நாற்றம் மெடுக்கும் குப்பைத் தொட்டி போலாகும் என்று கூறுவார்கள். இதனைத்தான் இவர் கூறிய கருத்துக்கள் வெள்ளிடைமலையாக தெரிவிக்கின்றன. ஒரே பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் ஒரே மொழியைப் பேசுபவர்கள் முஸ்லீம்களும் தமிழர்களும். சில காலம் சந்தேகக் கண்கெண்டு பார்த்தது உண்மைதான். யாழ்ப்பான முஸ்லீம்களை வெளியேற்றி இன்றும்கூட மிகவும் அல்லல் படுகின்ற ஒரு குழுவினராகத்தான் வடபுல முஸ்லீம்கள் வாழ்கின்றனர். அங்குமிங்கும் அலைமோதுகின்ற ஒரு குழுவாகவே இவர்கள் காணப்படுகின்றனர். அன்று துரத்தப்பட்டவர்கள் 23வருடங்களின் பின்னர் எத்தனை வீதமாக வளர்ந்திருப்பார்கள் என்பதை கட்டுரையாளர்; எண்ணிப்பார்க்க வேண்டும். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பல கிராமங்களுக்கு அண்மையாக இருந்த சில சிறிய கிராமங்களை முஸ்லீம்கள் கைப்பற்றியிருக்கின்றனர் என்று கூறுவது அபத்தமான பொய்யாகும். ஒரு காலகட்டத்தில் குழப்பமான சந்தர்பங்களில் தமிழர்களால் முஸ்லீம்களுக்கு அவர்களது காணிகள் அன்றைய நிலவரத்திற்கேற்ப பணத்தைக் கொடுத்து முஸ்லீம்கள் வாங்கினார்கள் என்பதற்கு அந்தக் கிராமத்து மக்களே சாட்சி.
இந்நிலைமையில் அண்மையில் சம்மாந்துறையில் தமிழ்க்கோவில் ஒன்றின் சிலை உடைப்புக்கும் முஸ்லீம் சமூகத்திற்கும் தொடர்பை ஏற்படுத்துவது அபாண்டமானதாகும். இரு தரப்பிலும் நயவஞ்சகத் தனமுடையோர்கள் வாழ்கின்றார்கள். அவர்களால் இவை செய்யப்பட்டிருக்கலாம். காத்தான்குடியில் அதன் எல்லையில் அமைந்துள்ள ஆரையம்பதியில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. முஸ்லீம்கள் சிலைகளை வெறுப்பவர்கள். அதற்காக அவர்கள் உடைப்பவர்கள் அல்ல. காத்தான்குடிப் பள்ளிவாசலுக்கு அருகாமையிலும் ஒரு சிலை காணப்படுகின்றது. காத்தான்குடியில் ஈச்சம்மரங்கள் காணப்படுகின்றன. அது அவரவர் விருப்பங்கள். அதற்காக ஈச்சமரத்தை வெட்டுவதற்கோ, சிலைகளை உடைப்பதற்கோ மனிதாபிமானம் உள்ளவர்கள் முன்வரவே மாட்டார்கள். இவ்வாறுதான் சம்மாந்துறையிலும் நடைபெற்றிருக்கலாம். அதுமட்டுமல்ல முஸ்லீம்கள் தமிழர்களை துவம்சம் செய்தார்கள் என்கிற குற்றச்சாட்டுகளையும் தெரிவித்திருக்கின்றார். எந்தச் சந்தர்ப்பத்திலும் முஸ்லீம்கள் தானாக சன்டைக்குச் செல்லவதில்லை. அக்ரைப்பற்றுப் பிரதேசத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகளையும், பள்ளியினுள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களையும் கொலை செய்தபோது வழமையாக வெளியிடப்படுகின்ற கோபதாபங்கள் உணர்வலைகள் ஏற்பட்டிருக்கலாம். அந்தச் சந்தர்;ப்பங்கள் தவிர வேறு ஒருகாரணமும் இல்லை.
அவர் சுமத்;தியுள்ள முக்கியமான ஒரு விடயம் வீரமுனையில் மாட்டின் கழிவுகளை வீசுவதாக கூறியுள்ளமை. பிரதேச சபைகளினால் ஆளப்படுகின்ற இடங்களில் மாடுகளை அறுப்பதற்கென்றே இடங்கள் ஒதுக்கப்பட்டு அந்த இடங்களை பார்வையிடுகின்ற பொதுசுகாதார அதிகாரிகள் இருக்கின்றபோது யாரோ ஒருவர் செய்திருக்கலாம் என்பதற்காக மாட்டுக் கழிவுகள் அனைத்தையும் வீரமுனை வீதிகளில் வீசுவது என்பது சுத்தமான பொய்தானே. அதற்காக மாட்டை மாத்திரம் குறிப்பிடாமல் குரங்கையும் சேர்த்து குறிப்பிட்டிருப்பது மிகவும் கவலையான விடயமாகும். இறைவன் கட்டளையை முஸ்லீம்கள் முழுமையாக பின்பற்றுகின்றவர்கள். இறைவன், மாடுபோன்ற பிராணிகளை மாத்திரம் இறைவன் பெயரில் அறுத்துண்பதுதான் சட்டம். இதற்காத்தான் அண்மைக்காலமாக ஹலால் ஹறாம் பற்றிய பிரச்சினைகளுக்கு முஸ்லீம்கள் குரல் கொடுத்தமை இதுபோன்ற விடயங்களுக்குத்தான் என்பதை இவர் மறந்துவிட்டார் போலும்.
குரங்கு, பன்றி, செத்த மிருகங்கள் போன்றவற்றை முஸ்லீம்கள் உண்ணவே மாட்டார்கள். மேலும் கிழக்கில் நடைபெற்றதாக கூறப்படுகின்ற படுகொலைகள் அனைத்துக்கும் இலங்கைப் படையினரையும் முஸ்லீம் ஊர்காவல் படையினரையும் இணைத்துக் கூறியுள்ளார். ஊர்காவல் படையினர் என்றால் அவர்களும் படையினர்தானே. முஸ்லீம்களை கொலை செய்த புலிகளை புலிகள் என்று கூறுகின்றபோது தமிழ்ப்புலிகள் என்றுதானே கூறுவது. அப்படியிருக்க தனியாக முஸ்லீம்கள் கொலை செய்கின்ற அளவுக்கு முஸ்லீம்கள் கொலைகாரச் சமூகம் அல்ல.
எனவே, இரு இனங்களும் நல்லுறவை வளர்த்துக் கொண்டு வருகின்ற இச்சந்தர்ப்பங்களில் ஒரிருவர் ஊடாக மீண்டும் உறவைச் சீர்குலைக்கின்ற கருத்துக்கள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும். இன்று உலகில் இலட்சக் கணக்கான தமிழ் சகோதரர்கள் இந்நாட்டு தமிழர் சார்பாக உலக மட்டத்தில் நியாயம் கேட்டுத் தட்டிக கொண்டிருக்கின்றனர். அண்மையிலுள்ள தமிழ்நாட்டுச் சகோதரர்கள் இந்நாட்டு தழிழ் மக்களுக்காக போராடுகின்ற தொப்புக் கொடி உறவுகள் எத்தனையோ கோடி இருக்கின்றார்கள். ஆனால் முஸ்லீம்களுக்காக உலக அளவில் கேட்பதற்கு யாருமே இல்லாத நிலையில் இந்நாட்டு வாழ் தமிழ்த் தலைவர்கள் ஒருசிலர் ஐக்கியமாக வாழ்வோம் என்பதற்காகவும், முஸ்லீம்களுக்கான நியாயத்தைக் கேட்கின்றபோது தமிழர் பற்றி யார்பேசுவது என்று இரா. துரைரத்தினம் கேட்பது நகைப்புக்குரிய ஒரு விடயமாகும். “ஐயா! அவர்களே எங்களை ஒற்றுமையாக வாழவிடுங்கள். எங்களை தயவு செய்து பிரிக்க வேண்டாம். முஸ்லீம்களுக்காக ஒருகாலத்தில் அரசியல் செய்தவர்களும், எமது முன்னோர்களுக்கு கல்வியறிவு புகட்டியவர்களும் தமிழர்களே என்பதை எம்முன்னோர்கள் மறக்கவில்லை. அரசியல் இலாபத்திற்காக எங்களைப் பிரித்தார்கள். நீங்களுமா எங்களைப் பிரிக்கப்பார்க்கிறீர்கள். விடுகள். வேற்றுமை மறந்து ஒற்றுமையாக மீண்டும் அந்த புட்டும் தேங்காய்ப் பூவும்போல வாழப்போகின்றோம்”.
(கழுகுப்பார்வை)