எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, October 18, 2014

றிஷாத்தையும் என்னையும் பிரிக்க கட்சிக்குள் சதி: ஹுனைஸ் பாருக் எம்.பி.

Print Friendly and PDF

கேள்வி: பாராளுமன்றத் தேர்தலில் எப்போது போட்டியிட்டீர்கள்?

பதில்: 2010ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டினேன். 


கேள்வி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் ஏதாவது பொறுப்பு வகிக்கின்றீர்களா?

பதில்: தேசிய இணைப்பாளராக கடந்த பல வருடங்களாகக் கடமையாற்றி வருகின்றேன். 

கேள்வி: வேறு ஏதேனும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதா?

பதில்: வன்னி மாவட்டத்தில் பல்வேறு பிரதேச செயலகங்களில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். 

கேள்வி: இப்பகுதிகளின் அபிவிருத்திப் பணிகள் சீராக முன்னெடுக்கப்பட்டதா?

பதில்: முசலி, மடு, முசலி வடக்கு, முல்லைத்தீவு, மாந்தை ஆகிய பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகள், ஏனைய அரச சேவைகள் தொடர்பிலான இணைப்புப் பணிகளை சீராக மேற்கொண்டேன். மின்சார வசதிகள், பாதை அபிவிருத்திப் பணிகள், கல்வி, சுகாதாரம் உட்பட பொதுமக்களுக்கான சேவைகள் உட்பட இன்னோரன்ன பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றேன். மின்சாரத்தையே கண்டிராத 90 கிராமங்கள் அளவில் இக்காலப் பகுதியில் மின் வசதியைப் பெற்றுக் கொடுக்கும் வாய்ப்புக் கிட்டியது. 

கேள்வி: கட்சியின் தேசியத் தலைவர் றிஷாத் பதியுதீனின் மேற்பார்வையில் இப்பணிகளை மேற்கொண்டீர்கள்?

பதில்: நிச்சயமாக, கட்சித் தலைவரும், நானும் கடந்த காலங்களில் மிக நெருக்கமாகச் செயற்பட்டோம். வன்னி அபிவிருத்திப் பணிகளை அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் மிகச் சிறப்பாகச் செய்து முடித்தேன். அவற்றினைக் கண்காணித்து அமைச்சரூடாக பல்வேறு திட்டங்களையும் சீராக முன்னெடுத்தேன். 

கேள்வி: அமைச்சர் றிஷாதினை எவ்வாறு நோக்குகின்றீர்கள்? 

பதில்: மிகச் சிறந்ததொரு அரசியல்வாதி. மக்களுக்காக அவர்களின் முன்னேற்றத்துக்காக உழைக்கும் மக்கள் தலைவன். மிகச் சிறந்த செயற்பாட்டாளர். வன்னி மக்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள மக்களுக்காகவும் குரல் எழுப்பியதுடன், அவர்களின் சுகதுக்கங்களிலும் பங்கு கொண்டவர். 

கேள்வி: உங்கள் அரசியல் பயணத்துக்கு வழி சமைத்தவர் அமைச்சர் றிஷாத் தானே? 

பதில்: அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியிலேயே முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்டேன். கட்சித் தலைவர் றிஷாத் பதியுதீன் எனக்கு அதற்கான வாய்ப்பினையும், வழிகாட்டல்களையும் வழங்கினார். 

கேள்வி: அரசியல் வழிகாட்டியான அமைச்சர் றிஷாதுக்கும், உங்களுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏதும் தோன்றியுள்ளதா?

பதில்: ஒருபோதும் இல்லை. அவரோடு நான் கோபித்ததும் கிடையாது. அவர் என்னோடு கோபித்ததும் கிடையாது. இரண்டு பேரும் மிக நெருக்கமாக, அன்னியோன்யமாக நட்புடன் பழகினோம். கட்சிக்கும், தலைவருக்கும் மிக விசுவாசமானவனாகவே நடந்து வந்திருக்கின்றேன். 

கேள்வி: உங்களுக்கும், அமைச்சர் றிஷாதுக்கும் இடையில் பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக சிலர் குறிப்பிடுகின்றார்களே?

பதில்: அதில் உண்மை கிடையாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் கட்சித் தலைவருக்குத் துரோகம் செய்யவில்லை. அவருக்கெதிராக செயற்படவுமில்லை. அவரைப் பற்றி எவரிடமும் குறை கூறவுமில்லை. அமைச்சருடன் பிரச்சினைகள் தோன்றும் படியாக நடந்து கொண்டதும் கிடையாது. 

கேள்வி: அப்படியானால் முறுகல் நிலையைத் தோற்றுவிக்க சதி ஏதும் நடந்ததா?

பதில்: அப்படித்தான் நினைக்கின்றேன். என்னையும், அமைச்சர் ரிஷாத்தையும் பிரித்து வைக்க சதி நடக்கிறது. அண்மைக் காலமாக இதனை அவதானித்து வருகின்றேன். பல்வேறு நிகழ்வுகள், அமர்வுகள், பொது நிகழ்வுகள் மூலம் இப்படியான சதி நடைபெறுவதை அவதானித்துள்ளேன். 

கேள்வி: யார் சதி செய்கிறார்கள்?

பதில்: கட்சிக்குள்ளேயே எனக்கெதிராக சதி நடக்கிறது. கட்சியிலுள்ள குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் எனது அரசியல் முன்னேற்றப் பணிகளை தடுத்து நிறுத்தும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். என்னைப் பற்றிய பிழையான கருத்துக்களையும், பொய்த் தகவல்களையும் அமைச்சரிடம் எடுத்துரைத்து முறுகல் நிலையைத் தோற்றுவிக்க இவர்கள் முற்படுகின்றனர். 

கேள்வி: இந்த அரசியல்வாதிகள் எக்காரணத்துக்காக உங்களைப் பழிவாங்க எத்தனிக்கின்றனர்? 

பதில்: அமைச்சரையும், என்னையும் பிரித்து வைப்பதன் மூலம் அரசியலிலிருந்து என்னை அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர். கட்சியிலிருந்து என்னை அகற்றுவதன் மூலம் புதிய ஒரு அரசியல்வாதியை எனது இடத்துக்குக் கொண்டு வருவதே இச்சதிகாரர்களது நோக்கமாகும். 

கேள்வி: இதுபற்றி அமைச்சர் றிஷாதிடம் எடுத்துச் சொல்லவில்லையா?

பதில்: பலமுறை முயற்சி செய்தும் அவரோடு தொடர்புகொள்ள முடியவில்லை. 

கேள்வி: நீங்கள் தொடர்பு கொள்ளும்போது அமைச்சர் நாட்டுக்கு வெளியே இருந்தாரா?

பதில்: உள்நாட்டில்தான் இருந்தார்.

கேள்வி: அப்படியானால் உங்கள் தொடர்புக்கு அவர் ஏன் பதிலளிக்கவில்லை?

பதில்: அதுதான் எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. முன்பு மிக நெருக்கமாக இருந்தபோது இரண்டு பேரும் ஒவ்வொரு நேரமும் தொடர்புகளை ஏற்படுத்தி பொதுவான விடயங்கள், அபிவிருத்திப் பணிகள் பற்றிப் பேசுவோம். இப்போது அந்த நிலை மாறி தொடர்பு கொண்டாலும் பேசுவதாகத் தெரியவில்லை. 

கேள்வி: முசலி ஹஜ் விளையாட்டு விழாவில் அமைச்சர் றிஷாதை புறக்கணித்ததாக சொல்கிறார்களே? 

பதில்: ஒருபோதும் நான் அவரைப் பறக்கணித்தது கிடையாது. ஹஜ் விளையாட்டு விழா  சுவரொட்டிகளில் அவரது பெயரே முதலில் குறிக்கப்பட்டிருந்தது. நாமல் ராஜபக்ஷவின் பெயரும், எனது பெயரும் அதன் பின்னாலேயே பிரசுரிக்கப்பட்டிருந்தது. 

கேள்வி: விழாவுக்கு அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா?

பதில்: அழைப்பு விடுக்கப்பட்டது.

கேள்வி: அப்படியானால் ஏன் அமைச்சர் கலந்து கொள்ளவில்லை?

பதில்: அதுதான் எனக்கும் புரியவில்லை. 

கேள்வி: நாமல் ராஜபக்ஷ பங்கேற்றாரா?

பதில்: அவர்கூட வரவில்லை.

கேள்வி: முசலி பிரதே சபை மற்றும் அரசியல்வாதிகள் பங்கேற்றார்களா?

பதில்: முசலி பிரதேசசபைத் தலைவர் உட்பட உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. 

கேள்வி: பங்கேற்காமைக்கான காரணம் தெரியாதா?

பதில்: அதுபற்றி ஒன்றும் தெரியாது. 

கேள்வி: அப்படியானால் பிரச்சினையொன்று இருக்கிறதாக கருதுகின்றீர்களா?

பதில்: நிச்சயமாக.

கேள்வி: நாமல் ராஜபக்ஷவை ஏன் விழாவுக்கு அழைத்தீர்கள்?

பதில்: என்னோடு நெருங்கிப் பழகுவார். ஜனாதிபதியின் புதல்வர். அவர் மூலமாக நிறைய மக்கள் பணிகளைச் செய்யலாம் என்ற நோக்கில் அவரையும் விழாவுக்கு அழைத்தேன். 

கேள்வி: உங்களுக்கு பிரதியமைச்சர் பதவி தரப்படுமா?

பதில்: அப்படியேதும் கிடையாது. இது எனது சதிகாரர்களின் கட்டுக்கதை. நான் பிரதியமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்யப்போவதாக இவர்கள்தான் பகிரங்கமாக அறிவித்தார்கள். 

கேள்வி: பிரதியமைச்சர் பதவி தரப்படுமென நாமல் உங்களிடம் சொன்னாரா? 

பதில்: இல்லவே இல்லை. பிரதியமைச்சர் பதவி தேவையென்றால் ஏற்கனவே என்னால் எடுத்திருக்க முடியும். கட்சிக்கு முரணாக செயற்பட்டு பிரதியமைச்சர் பதவி பெற நான் விரும்பவில்லை. 

கேள்வி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் பிளவை ஏற்படுத்த அரசு சதி செய்கிறதாமே? 

பதில்: அதுவும் ஒரு கட்டுக்கதை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரிப்பதற்கான எந்தத் தேவையும் அரசுக்குக் கிடையாது. எமது கட்சித் தலைவருடன் ஜனாதிபதி மற்றும் ஏனைய தலைவர்கள் நெருக்கமாகப் பழகுகின்றனர். எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்குகின்றனர். இப்படியிருக்க ஏன் எமது கட்சியை பிரிக்க வேண்டும்? 

கேள்வி: நீங்கள் அரசுக்கு வக்காளத்து வாங்குவதாகச் சொல்கிறார்களே? 

பதில்: நிச்சயமாக நான் எப்போதும் எனது கட்சிக்கும், கட்சித் தலைவருக்கும் விசுவாசமாகத்தான் நடந்திருக்கின்றேன். அவ்வாறு யாராவது கட்சிக்கு நான் துரோகமிழைத்திருப்பதாக சொன்னால், அதனை நிரூபிக்கும்படி சவால் விடுகின்றேன். 

கேள்வி: கட்சி மாறும் எண்ணமிருக்கிறதா? 

பதில்: இப்போதைக்கு இல்லை. காலம்தான் பதில் சொல்லும். 

கேள்வி: யாராவது தமது கட்சியில் இணைந்து கொள்ளுமாறு உங்களுக்கு அழைப்பு விடுத்தனரா? 

பதில்: இல்லை. 

கேள்வி: அழைப்பு விடுத்தால் கட்சி மாறுவீர்களா? 

பதில்: அதுபற்றி தீர்மானம் ஏதும் எடுக்கவில்லை. 

கேள்வி: ஆளும் கட்சியில் யாராவது கட்சிப் பிரச்சினை பற்றிக் கேட்டார்களா? 

பதில்: ஆம். ஒரு சில அமைச்சர்கள், உறுப்பினர்கள் என்னிடம் வினவினர். என்றாலும் சமாளிப்புச் செய்தேன். 

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பீர்கள்? 

பதில்: இன்னும் எனது கட்சியில்தான் இருக்கின்றேன். கட்சியின் தீர்மானத்துக்கு மதிப்பளிப்பேன்.

கேள்வி: உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏதாவது கூறுவீர்களா?

பதில்: எனக்கு வாக்களித்த மக்கள் இன்னும் ஒத்துழைப்புத் தருகிறார்கள். அவர்களுக்கு என்றும் மதிப்பளிக்கின்றேன். எனது பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன். 

கேள்வி: உங்கள் எதிர்காலம் பற்றி?

பதில்: அரசியல் எனது வாழ்வல்ல. அரசியல் காரணமாக நான் பெற்றவைகளை விட இழந்தவைகளே அதிகம். அரசியலிலிருந்து விலகினால் சட்டத்துறையில் நிலைத்து நிற்பேன். முழுமையாக அப்பணிகளில் ஈடுபடுவேன். 

(நேர்காணல்: சக்கரவர்த்தி)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2