எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, October 18, 2014

ஐ.தே.க. ஆட்சிக்கு வந்தாலே சிறுபான்மைக்கு பாதுகாப்பு: இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

Print Friendly and PDF

கேள்வி: உங்கள் அரசியல் ஆரம்பம் பற்றிக் கூறுவீர்களா?

பதில்: ஆம். ஐ.தே.க. மாணவர் அமைப்பினூடாகவே அரசியலை ஆரம்பித்தேன். ஆனந்தாக் கல்லூரியிலிருந்த போது ஐ.தே.க. மாணவர் சங்கத்தில் இணைந்து அரசியலை ஆரம்பித்தேன். 


கேள்வி: மாணவராக இருந்தபோதே அரசியலில் ஈடுபடக் காரணமென்ன? அதுவும் ஐ.தே.க.வினை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? 

பதில்: எனது வீட்டில் அரசியலுக்கான சூழ்நிலை அதிகளவில் காணப்பட்டது. எனது தந்தை, முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாக்கார் ஐ.தே.க.வின் தீவிர செயற்பாட்டாளராக இருந் தார். வீட்டில் அதிகளவான நேரங்கள் அரசியல் பற்றியே பேசப்பட்டது. அரசியல்வாதிகள், ஆதரவாளர்கள் என வீட்டில் எந்த நேரமும் தந்தையைச் சந்திப்பதற்காக வருகை தந்த வண் ணமிருந்தனர். தந்தையும் சில நேரங்களில் அந்த செயற்பாடுகளில் என்னையும் பங்கேற்கச் செய்தார். எனது அரசியல் பிரவேசத்துக்கு இது உந்து சக்தியாக அமைந்திருந்தது. 

கேள்வி: பல்கலைக்கழக அரசியல் எவ்வாறி ருந்தது?

பதில்: பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலத்தில் மாணவர் சங்கத் தலைவராகவும், அனைத்துப் பல்கலைக்கழக  மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும், ஐ.தே.க. இளைஞர் முன்னணி தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறேன். இதற்கு முன்இளைஞர் முன்னணியின் உப தலைவராக, பொருளாளராக, உறுப்பினராகவும் இருந்துள்ளேன். 

கேள்வி: தீவிர அரசியலுக்குள் எப்படி நுழைந்தீர்கள்? 

பதில்: எனது தந்தை பாக்கீர் மாக்கார் ஆளு னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து பேருவளை தொகுதி ஐ.தே.க. அமைப்பாளராக யாரை நியமிப்பது என்ற இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரகசிய வாக்கெடுப்பில் 98 கட்சி அமைப்புக்கள் பங்கேற்றிருந்தன. இந்த வாக்கெடுப்பில் 100 வீத ஆதரவு எனக்குக் கிடைக்கப் பெற்றிருந்தது. ரஞ்சன் விஜேரத்ன செயலாளராக இருந்த போது நடாத்தப்பட்ட இவ் இரகசிய வாக்கெடுப்பில் எனக்கு கிடைக் கப் பெற்ற ஆதரவு எனது அரசியலுக்கு உத் வேகத்தைத் தந்தது. 

கேள்வி: பாராளுமன்ற அரசியல் பிரவேசம் பற்றி...? 

பதில்: 1988இல் முதற் தடவையாக பாராளு மன்றத்தினுள் பிரவேசித்தேன். அப்போது ஆர். பிரேமதாஸ ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அப்போது அவரின் பொறுப்பிலிருந்த வீடமைப்புப் பிரதியமைச்சர் பதவியை என்னிடம் ஒப்படைத்தார். 

கேள்வி: பதவியைத் தந்தபின் அவர் ஏதாவது குறிப்பிட்டாரா?

பதில்: ஆம். அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் பதவியேற்று  சென்றபின் என்னை ஜனாதிபதி மாளிகைக்குள் அழைத்துச் சென்ற ஜனாதிபதி பிரேமதாஸ சிரித்தவாறு "எனது அமைச்சு பொறுப்பினை உங்களிடம் கையளித்திருக்கிறேன். அந்தப் பகுதிகளுக்கு அமைச்சர்கள் கால்வைத்ததே கிடையாது. மிகவும் வறுமையான தொரு பிரதேசம். எனவே சிறந்த முறையில் செயற்படவேண்டும். அந்த மக்களின் குறை, நிறைகளைப் பூர்த்தி செய்து அவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காகப் பாடுபட வேண்டு மென்றும்' என்னைக் கேட்டுக் கொண்டார். அவரின் அந்த கனிவான உத்தரவு எனது காதில் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றது. 

கேள்வி: அமைச்சரவை அந்தஸ்துள்ள (கபினெட்) அமைச்சராக நியமிக்கப்பட்டீர்கள் தானே? 

பதில்: ஆம். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியில் தபால், தொலைத்தொடர்புகள் ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டேன். 

கேள்வி: 2003இல் ஐ.தே.க. ஆட்சி வீழ்ந்ததன் பின் கட்சி செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருந்தீர்களா? 

பதில்: அப்படி ஏதும் கிடையாது. எனது குடும்பத்தினருக்குப் பிறகு பேருவளைத் தொகுதியில் ஏனைய வேட்பாளர்களுக்கு வழிவிடும் வகையில் செயற்படத் தீர்மானித்தேன். நான் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி டீ.பி.விஜேதுங்க முன்னிலையில் பேருவளை மக்களுக்கு உறுதிமொழியொன்றை வழங்கினேன். அடுத்துவரும் தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன். புதிய இளம் வேட்பாளர் ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்குவேன் எனக் குறிப்பிட்டேன். அதன்பிரகாரம் நான் அடுத்து வந்த தேர்தலில் போட்டியிடாது வேறொருவருக்கு அந்த வாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்தேன். 

கேள்வி: ரணில் விக்கிரமசிங்கவுடன் உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்ததா? 

பதில்: எந்தவித பிரச்சினையும் இருக்கவில்லை. என்றாலும் அரசியல் செய்யும்போது பிரச்சினைகள் வராமலும் இல்லை. உடன்படாத விடயங்களும் இருக் கத்தான் செய்தன. அரசியலில் இருசாராரும் சில தீர்மானங்களின்போது உடன்படாத சந்தர்ப்பங்களும் இருந்தன. கட்சிக் கொள்கை வேறுபாடுகளுக்கு முரண்படாத வகையில் அவ்வப்போது எனது எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்தியிருக்கிறேன். 

கேள்வி: அது என்னவென்று குறிப்பிட முடியுமா? 

பதில்: அது பற்றி குறிப்பிட முடியாது. அது கட்சி செயற்பாடுகளைப் பாதிக்கலாம். ஐ.தே.க.வுக்கு என்றுமே மதிப்பு வைத்திருப்பவன் நான். எனது கட்சிக்கு பாதிப்பு ஏற்படுவதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன். 

கேள்வி: ஐ.தே.கவின் தற்போதைய நிலை பற்றி கூறுவீர்களா? 

பதில்: ஐ.தே.க. என்ற கட்சி தனியொரு வருக்கு, குடும்பத்துக்குச் சொந்தமான கட்சியல்ல. அது சகல இன, மதங்களுக்கும் பொதுவான சகலருக்கும் வாய்ப்புக்களை வழங்குகின்ற கட்சி. இந்தக் கட்சியின் கொள்கை செயற்பாடுகளுக்குத் தான் நான் மதிப்பளிக்கின்றேன். தனிப்பட்ட எவருக்கும் மதிப்பளிப்பதை விடுத்து கட்சி நலன்களையே பெரிதும் நேசிக்கின்றேன். ஐ.தே.க. இப்போது சரியான நிலையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

கேள்வி: இப்போது ஐ.தே.க. சீரான பாதையில் பயணிக்கின்றதா?

பதில்: சரியான பாதையில் பயணிக்க வேண்டும். அதற்கான சரியான செயற்பாடுகள் நடந்து வருகின்றன. ஐ.தே.க. பிரதான தேசியக் கட்சியென்ற வகையில் கொள்கை பிரச்சினைகள், கருத்து மோதல்கள் இடம்பெறலாம். தேசியக் கட்சியொன்றுக்குள் இவ்வாறான கருத்து மோதல்கள், கொள்கை விவகாரங்கள் குறித்த கலந்துரையாடல்கள், கருத்து முரண்பாடு கள் இடம்பெறவேண்டும். அப்போதுதான் கட்சியில் ஜனநாயகத் தன்மை காணப்படும். கட்சி முன்னேற்றத்துக்கும் உந்து சக்தியை, உத் வேகத்தைக் கொடுக்கும். 

கேள்வி: நீங்கள் ஐ.தே.க செயற்குழுவில் இணைவீர்களா? 

பதில்: கட்சியின் தேசியத் தலைவர் மீண்டும் செயற்குழுவில் இணைந்து பொறுப்புக்களை ஏற்று கட்சி நலனுக்காக உழைக்குமாறு எமக்கு வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து உத்தியோகபூர்வ கடிதமொன்றினையும் எனக்கு அனுப்பியிருந்தார். கட்சி நலன்கள், முன்னேற்றம் பாதுகாக்கப்பட்டு அடுத்துவரும் தேர்தல்களில் கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சொல்லும் நோக்குடன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் செயற்குழுவில் இணையும் தீர்மா னத்தை மேற்கொண்டுள்ளேன். 

கேள்வி: ஐ.தே.க.  செயற்குழுவில் மீண்டும் உங்களை இணைத்துக் கொள்வதற்கு யாரும் முயற்சி செய்தார்களா? 

பதில்: ஆம். அதிகமானவர்கள் இதற்காக உழைத்தார்கள். திஸ்ஸ அத்தநாயக்க, சரத் என். சில்வா, அஜித் சொய்சா உட்பட கட்சிக்கு ஆதர வளிக்கும் பலர் தலைவர் அழைப்பு பற்றி என் னோடு பேசினர். ஐ.தே.க. செயற்குழுவில் இணைந்து பணியாற்றுமாறும் அவர்கள் கேட் டுக் கொண்டனர். 

கேள்வி: சஜித்தும், கருவும் அழைப்பு விடுத் தார்களா? 

பதில்: ஆம். ஐ.தே.க. செயற்குழுவில் கௌரவமான முறையில் இணைந்து கொள்ள வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினார்கள். பாராளு மன்ற உறுப்பினர் தலதா அதுகோரள இதுகுறித்து பல தடவைகள் என்னோடு பேசினார். இதன்பின் செயற்குழுவில் இணையும் முடிவுக்கு நான் வந்தேன். 

கேள்வி: செயற்குழுவில் பொறுப்புகளை ஏற்குமாறு தலைமைத்துவம் கேட்டதா? 

பதில்: ஆம். என்றாலும் செயற்குழுவில் இணைந்து கொள்வது பற்றி அவர்களுக்குத் தெரிவித்தேன். பொறுப்புக்களை ஏற்கப் போவ தில்லையென்றும் அவர்களிடம் குறிப்பிட்டேன். 

கேள்வி: ஏன் பொறுப்புகளை ஏற்க மறுக்கிறீர்கள்? 

பதில்: நீண்ட காலத்துக்குப் பின் ஐ.தே.க. செயற்குழுவில் இணைந்து கொள்ளத் தீர்மானித் துள்ள நிலையில், பதவிகளை எதிர்பார்த்துக் கொண்டே ஐ.தே.க.வில் சேர்ந்துள்ளதாக மக்கள் என்னைக் குறை கூறுவர். இதனைக் கருத்திற் கொண்டே செயற்குழுவில் இணைந்து கொள்வ தற்கு தீர்மானித்தேன். 

கேள்வி: கட்சித் தலைவருக்கு இதுதொடர் பில் பதில் அளித்தீர்களா? 

பதில்: ஆம் 

கேள்வி: கடிதத்தில் ஏதாவது குறிப்பிட்டீர்களா? 

பதில்: ஆம். ஐ.தே.க.வின் வெற்றி, அதன் முன்னேற்றத்துக்காக பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டேன். தேசியக் கட்சிகளில் கொள்கை, கருத்து மோதல்கள் இடம்பெறுவது நல்லது. அதற்கு இடமளிக்கப்படவேண்டும். கட்சி முன்னேற்றத்துக்கும், ஜனநாயகம் தழைத்தோங்கு வதற்கும்  அது நல்லது என்பது பற்றியும், கருத்து மோதல்களுடன் தான் கட்சி முன்னேறிச் செல்ல வேண்டுமென்றும் கடிதத்தில் குறிப்பிட்டேன். 

கேள்வி: செயற்குழுவில் இணைத்து கொண்டமைக்கான கடிதம் கிடைக்கப்பெற்றதா?

பதில்: ஆம்

கேள்வி: ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தீர்களா? 

பதில்:இன்னும் சந்திக்கவில்லை. விரைவில் சந்திப்பேன். 

கேள்வி: ஊவா தேர்தலில் பிரசாரப் பணிகளை முன்னெடுத்தீர்கள். யாரும் அழைப்பு விடுத்தார்களா?

பதில்: பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார அழைப்பு விடுத்தார். மொனராகலையில் அவரது வேண்டுகோளை ஏற்றுப் பிரசாரப் பணிகளை முன்னெடுத்தேன்.

கேள்வி: ஐ.தே.க. வெற்றியை நோக்கி முன்னேறுகிறதா? 

பதில்: ஐ.தே.க. வென்பது இந்த நாட்டினை, சமூகங்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்ற கட்சியாகும். இந்தக் கட்சி வெற்றிப்பாதையில் பயணிக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புக்கள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து மக்களும் ஒத்துழைப்பு தந்தால் இலக்கை நோக்கிப் பயணிக்கலாம். 

கேள்வி: மஹிந்தவுக்கு சவாலாக ஐ.தே.க விளங்குகிறதா? 

பதில்: ஐ.தே.க. என்ற ஆல விருட்சம். எப்போதும் வெற்றிப் பாதையில் பயணிக்கும். தனிப்பட்டவர்கள் என்பது கட்சிக்கு முக்கிய மல்ல. கட்சிக் கொள்கைகளும் முன்னேற்றப் பாதைக்கு நாட்டை இட்டுச் செல்லக்கூடிய வேலைத்திட்டங்களுமே முக்கியமானவை. மஹிந்த ராஜபக்ஷ என்பவரைத் தோற்கடிப்ப தற்கான வியூகம் விடுக்கப்பட வேண்டும். அதற்காக ஐ.தே.க. மற்றும் சகலரும் கை கோர்த்துச் செயற்படவேண்டும். 

கேள்வி: மஹிந்த ராஜபக்ஷ உங்களையும் தன் வலைக்குள் திணிக்க முயற்சித்தாராமே... உண்மையா? 

பதில்: ஆம். ரோஹித போகொல்லாகம வெளிவிவகார அமைச்சராக இருக்கும் காலப் பகுதியில் என்னொடு மஹிந்த ராஜபக்ஷ பேசினார். பல தடவைகள் என்னோடு தொடர்புகொண்டார். சவூதி தூதுவராக என்னை நியமிப்பது குறித்தும் பேசினார். சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவைக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பினை ஏற்றுச் செயற்படுமாறும் கேட்டுக் கொண்டார். 

கேள்வி: உங்கள் பதில் எப்படி அமைந்திருந்தது?

பதில்: அவரின் வேண்டுகோளை நான் நிராகரித்தேன். ஐ.தே.க. என்ற கட்சியோடு கருத்து மோதல்கள் இருந்தாலும் அந்தக் கட்சிக்கு என்றும் விசுவாசமுள்ளவனாக இருப்பேன். கட்சி மாறி கட்சிக்கு துரோகமிழைக்க விரும்பவில்லையென்றும் ஆணித்தரமாக தெரிவித்து விட்டேன். 

கேள்வி: அப்படியானால் ஐ.தே.கவை விட்டும் கட்சி மாறமாட்டீர்களா? 

பதில்: நான் என்றும் கொள்கைகளை விட்டுக் கொடுப்பவனல்ல. அப்படி கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தியும் அல்ல. எனக்கென்று ஒரு கொள்கை கோட்பாடு செயற்பாடு ஒன்று உள்ளது. அதில் எப்போதும் சரியாகவே பயணிப்பேன். பிழையான தீர்மானங்களை மேற்கொள்ள மாட்டேன்.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடாத்தப்படும் என்கிறீர்கள். ஐ.தே.க. அதற்குத் தயாரா? 

பதில்: கட்சி சரியான பாதையில் செல்கின்றதா என்பது முக்கியமல்ல. இந்த நாடு பல்வேறு துறைகளிலும் மிக மோசமான வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தூரநோக்கற்ற, குறுகிய இலக்கினைக் கொண்டபொருளாதார நலன்களையே பின்பற்றுகிறார்கள். தேசிய ஐக்கியம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாடு எங்கும் சட்டத்தை மதிக்காது அராஜகம் தலை விரித்தாடுகின்றது. எனவே இந்த நாட்டை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டுமாயின், இந்த நாட்டின் எதிர்கால நலனை முன்னேற்றத்தினை கருத்திற்கொண்ட அனைவரும் மஹிந்த அரசை தோற்கடிக்க ஐ.தே.கவுடன் இணைந்து கொள்ள வேண்டும்.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகர் ஒருவர் போட்டியிட்டால் கள நிலவரம் எவ்வாறிருக்கும்?

பதில்: ஐ.தே.க. என்பது மிகப் பெரும் ஜனநாயகக் கட்சி. இந்தக் கட்சிதான் எதிர்க்கட்சியிலிருக்கும் மிகப்பலம்வாய்ந்த கட்சி. இந்த நிலையில் இக்கட்சியின் வேட்பாளர் மஹிந்தவை எதிர்த்துக் களமிறங்குவதில் எந்த தவறுமில்லை. என்றாலும் சகல கட்சிகளையும் இணைத்து அவரைப் பொது அபேட்சகராக ஏற்றுக் கொள்வதா அல்லது சகல கட்சிகளினதும் அங்கீகாரத்துடன் வேறொருவரைப் பொது அபேட்சகராக நிறுத்துவதா என்பதை அந்தக் கட்சிகளின் பிரமுகர்கள் சுமுகமாகக் கலந்துரையாடி தீர்மா னத்துக்கு வரவேண்டும். 

கேள்வி: முஸ்லிம்களுள் அதிகமானோர் ஏன் ஐ.தே.க. என்ற கட்சியை விரும்புகின்றனர்? 

பதில்: முஸ்லிம்கள் மட்டுமல்ல. இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையினருள் அதிகமானோர் ஐ.தே.க.வையே ஆதரித்து வந்துள்ளனர். இலங்கை அரசியல் வரலாற்றினை எடுத்துக் கொண்டால் முஸ்லிம்கள் ஐ.தே.க.வினை ஆதரித்து வந்துள்ளமை தெளிவாகிறது. 

கேள்வி: சிறுபான்மையினர் என்ன காரணத்துக்காக ஐ.தே.கவினை ஆதரித்தனர்? 

பதில்: ஐ.தே.க. என்ற கட்சி சகலருக்கும் பொதுவான கட்சி. சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை சலுகைக ளைக் பெற்றுக் கொடுத்த கட்சி. ஐ.தே.க. ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினர் மதிக்கப்பட் டார்கள். அவர்களுக்கு கட்சியில் சம அந்தஸ்தும், வாய்ப்புக்களும் வழங்கப்பட்டிருந்தன. இதனால் தான் தமிழ், முஸ்லிம் மக்கள் ஐ.தே.க.வின் பக்கம் அணி திரண்டனர். 

கேள்வி: அப்படியானால் ஐ.தே.க. காலத்தில் சிறுபான்மையினர் விவகாரங்கள் முழுமையாக தீர்த்து வைக்கப்பட்டதா? 

பதில்: அவ்வாறு சொல்ல வரவில்லை. பிரச்சினைகளை முழுமையாக தீர்த்து வைக்க எந்தவொரு அரசியல் கட்சிக்கும் முடியாது. என்றாலும் ஐ.தே.கட்சி ஏனைய பதவியிலிருந்த கட்சிகளை விட சிறுபான்மையினர் விவகாரங் களை சிறப்பாகக் கையாண்டுள்ளது. அவர்களுக்கான உரிமைகளை, சலுகைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

கேள்வி: சிறுபான்மையினருக்கு அதிக வாய்ப்புக்களை ஐ.தே.க. எதிர்காலத்திலும் வழங்குமா?

பதில்: ஐ.தே.க.வின் கட்சிக் கோட்பாட்டில் சிறுபான்மை விடயங்களுக்கு உயரிய இடம், அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வேறுபாடு காட்டாது அவர்களை என்றும் சமமாக மதிக்கும் கட்சி ஐ.தே.க. தான் என்பதை சிறுபான்மையினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஐ.தே.கட்சியின் கட்சிக் கொள்கைகளில் சிறுபான்மையினருக்கு அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்திலும் ஐ.தே.க. சிறுபான்மையினருக்கு அதிக வாய்ப்புக்களை வழங்கும். 

கேள்வி: ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டி னால் இதே நிலையப் பேணுவாரா?

பதில்: ரணில், சஜித், கரு போன்ற தலைவர் கள் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதல்ல பிரச்சினை. ஐ.தே.க. என்ற கொள்கைக்கு உயிரூட்டவேண்டும். அந்தக் கட்சியை பதவியில் அமர்த்த வேண்டுமென்பதே என் முன்னால் உள்ள முக்கியமான பிரச்சினையாகும். எனவே இதற்குத் தீர்வுகாண அனைவரும் ஒன்று படவேண்டும். 

கேள்வி: இனவாத செயற்பாடுகள் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளதே? 

பதில்: இனவாத செயற்பாடுகள் மிகைத்திருப் பது அதற்குரியவர்களைத் தண்டிக்காதிருப்பது ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல. அவ்வா றான நிலைமைகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும். இனவாத செயற்பாடுகளை முன்னி றுத்தி அரசியல் செய்வதை கட்சிகள் உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இன்றேல் நாடு அழிவுப் பாதைக்குள் செல்வதை எவருக்கும் தடுத்து நிறுத்த முடியாது போய்விடும். இன, மத, குலம் என்ற மனோபாவத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். இந்த நாடு அனைவருக்கும் பொதுவானது. எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு நாட்டினை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வதே இப்போதுள்ள மிக முக்கிய தேவையாகும். 

கேள்வி: இனவாத செயற்பாடுகளை இந்த அரசு தடுத்து நிறுத்தவில்லையே?

பதில்: தற்போதைய அரசாங்கம் இனவா தத்தை, இனவாதிகளை கட்டுப்படுத்துவதற்கு அல்லது தடுத்து நிறுத்துவதற்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இது தான் உண்மையான நிலை. இனவாதத்தினை பரப்புவோரை, அதற்கான ஊக்குவிப்புக்களை வழங்குவோரை அரசாங்கம் தடுத்து நிறுத்தாது விடின், அல்லது சட்டத்தினை சரிவர நிறைவேற்றாது விடின் சிறுபான்மை மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். 

கேள்வி: இனவாதத்தின் பின்னணியில் இரும்புகளும் ஏதாவது உள்ளதா?

பதில்: பலர் பல்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். அரசியல் இலாபம் பெறுவதற்காகவும், அடுத்த தேர்தலை இலக்கு வைத்தும் சிலரைப் பயன்படுத்தி இனவாதத்தைக் கட்டவிழ்த்து வருவதாக குற்றஞ்சாட்டுப்படுகிறது. சர்வதேச மட்டத்திலிருந்து நிதியுதவி பெற்று இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மற்றும் சிலர் கூறுகின்றனர். வர்த்தகத் துறையோடு தொடர்புடையவர்கள் இருப்பதாகவும் சொல்கின்றனர். எந்தவிதமான சக்திகள் இருந்தாலும் நாட்டை மற்றொரு நெருப்புக்குள் தள்ளி மீண்டும் அராஜக நிலைக்கு நாட்டை இட்டுச் செல்லவே முயற்சிக்கின்றனர். 

கேள்வி: அரசு இனவாதிகளை ஊக்குவிப்பதாகக் கூறுகிறீர்களே? 

பதில்: இனவாத செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தி இனவாதத்தைப் பரப்புவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காததன் விளைவினால் தான் இன்று பாரிய பிரச்சினையாக இது உருவெடுத்திருக்கிறது. எனவே அரசாங்கம் உடனடியாக இனவாதிகளைக் கட்டுப்படுத்தி சிறுபான்மை சமூகங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கேள்வி: செயற்குழுவில் இணைந்துள்ள நீங்கள் இனவாத செயற்பாடுகள் குறித்து ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசுவீர்களா? 

பதில்: நிச்சயமாக. ஏனைய சிறுபான்மையின உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு இனவாத செயற்பாடுகளைப் பற்றி தலைவருடன் பேசுவேன். ஐ.தே.க. அரசு காலத்தின் இனவாதமற்ற நாடொன்றைக் கட்டியெழுப்ப தலைவர் நடவடிக்கை எடுப்பார். 
கேள்வி: அளுத்கம சம்பவத்தினைப் பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்? 

பதில்: நீதி செத்துவிட்டதையே அந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. சட்டம் சரியான முறையில் செயற்பட்டிருந்தால் இத்தகைய விபரீதம் ஏற்பட்டிருக்காது. 

கேள்வி: ஐ.தே.க ஆட்சிக் காலத்தில் இவ்வாறான வன்முறைகள் தடுத்து நிறு த்தப்படுமா? 

பதில்: முதலில் சகல இன, மத, மக்களினதும் மனங்களில் தூய எண்ணங்களை விதைக்க வேண்டும். சகல மதங்களுக்கும், இனங்களுக்கும் அந்தஸ்தினை வழங்கவேண்டும். சகலருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படவேண்டும். ஐ.தே.க. இதனைச் சரியாகச் செய்யும். அதன் பிற்பாடே வன்முறைகளுக்கு வாய்ப்பு இல்லாது போய்விடும். 

கேள்வி: அப்படியானால் சிறுபான்மையினருக்கு ஐ.தே.க.வினை நம்ப முடியுமா?

பதில்: எதிர்பார்ப்புக் கொள்ளக் கூடிய வேரொரு தேசியக்கட்சி கிடையாது. 

கேள்வி: ஓ.ஐ.ஸி. செயலாளர் மதனியைச் சந்தித்தபோது முஸ்லிம்களை சகோதரர்கள் போல் பார்த்துக் கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறாரே? 

பதில்: மிகச் சிறந்ததொரு கருத்து. என்றாலும் இந்த வாக்குறுதி செயலில் இருக்கின்றதா என்பதுதான் பிரச்சினை. 

கேள்வி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலஸ்தீன மக்களுக்கு இரண்டு மில்லியன் டொலர் உதவியாக வழங்கினாரே? 

பதில்: 60 வருடங்களுக்கும் மேலாக இஸ்ரேலின் இரும்புக் கரங்களால் நசுக்கப்பட்டு வரும் பலஸ்தீன மக்களுக்கு எவராவது உதவி செய்வார்களாயின் அதனை நான் வரவேற்கின்றேன். இது நல்லதொரு விடயம். எல்லாவற்றையும் பிழையாக நோக்கக் கூடாது. ஜனாதிபதி நல்லதொரு விடயத்தினைச் செய்துள்ளார். அதனை வரவேற்கின்றேன், பாராட்டுகின்றேன். 

கேள்வி: ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் பலஸ்தீன மக்களுக்காக நீங்கள் குரழெழுப்புவீர்களா? 

பதில்: நிச்சயமாக. ஐ.தே.க.வின் கொள்கையும் அது தான். பலஸ்தீன மக்களின் உரிமை, விடுதலைக்காக ஐ.தே.க. என்றும் குரலெழுப்பும். ஐ.தே.க.வுக்கு இதிலிருந்து விலகிச் சொல்ல முடியாது. 

கேள்வி: எதிர்பார்ப்புக்களை வைத்திருக்கும் ஐ.தே.க. ஆதரவாளர்களுக்கு ஏதாவது கூறுவீர்களா? 

பதில்: கட்சி ஆதரவாளர்களுக்கு மாத்திரமல்ல. நாட்டிலுள்ள சகலரும் தற்போதைய அரசுக்கெதிராக கிளர்ந்தெழ வேண்டும். கட்சி, இன, மத, குல பேதங்களைப் பார்க்க வேண்டாம். நாடு அராஜக நிலைக்குச் செல்கின்றதென்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதற்காகக் குரல் கொடுங்கள். ஐ.தே.க.வின் பக்கம் அணிதிரளுங்கள். உங்கள் நம்பிக்கை ஒருநாளும் வீண்போகாது. 

(நேர்காணல்: சிராஜ் எம். சாஜஹான்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2