Published On: Saturday, October 18, 2014
மு.கா. அரசுடன் சேர்ந்திருப்பது ஒரு விபத்து: ஹஸன் அலி எம்.பி.
கேள்வி: ஊவா தேர்தல் முடிவுகளை எவ்வாறு நோக்குகிறீர்கள்?
பதில்: ஊவா மாகாணத் தேர்தலானது நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தையும் சற்று உசுப்பிவிட்டுள்ளது. ஆளும்கட்சியினர் பின்னடைவை சந்தித்ததனால் தாங்கள் விட்ட தவறுகளைப் பற்றி தங்களுக் கிடையில் சாதகமாகவும், பாதகமாகவும் கருத்துக்களை வெளியிட்டுத் தர்க்கித்துக் கொள்கின்றனர். எதிர்க்கட்சியினர் தாங்கள் செய்த பிரசார உத்திகளுக்கு நல்ல பயன் கிடைத்துள்ளதாக இறுமாப்படைந்துள்ளனர். சிறுபான்மைக் கட்சிகள் தங்களது பேரம்பேசும் சக்தியைப் பாவிப்பதற்கான சந்தர்ப்பம் கனிந்துவிட்டதாக எண்ணிக் காத்துக் கொண்டிருக்கின்றனர். மொத்தத்தில் எல்லா தரப்பினரையும் ஊவா தேர்தல் உஷார் நிலைக்குக் கொண்டுவந்திருக்கின்றது.
கேள்வி: பதுளையில் முஸ்லிம் கூட்டணி குறைவான வாக்குகளைப் பெற்றதே, என்ன காரணம்?
பதில்: முஸ்லிம் காங்கிரஸ் சென்றமுறை பெற்றுக் கொண்ட வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தனிப்பட்ட முறையில் இது ஒரு பின்னடைவேயல்ல. ஆனால், ஏனைய கட்சிகளுடனும், மாவட்டத்திலுள்ள சில அமைப்புக்களுடனும் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட வகையில் பெற்றுக் கொண்ட வாக்குகள் மிகக் குறைவே. முஸ்லிம் வாக்காளர்கள் எமது கூட்டை அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவே பார்த்தார்கள். அந்த சந்தேகத்தைப் போக்குவதற்கான பிரசாரப் பணியில் உள்ளூர் அமைப்புக்கள் போதிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டன. வெளிமாவட்டங்களில் இருந்து சென்று பிரச்சாரங்களில் ஈடுபட்டவர்களினால் உள்ளூர் வாக்காளர்களை திருப்திப்படுத்த முடியாது போய்விட்டது.
பொதுவாக சொல்லப்போனால் அண்மைக் காலங்களாக நமது நாட்டில் இடம்பெற்றுவரும் முஸ்லிம் விரோத பிரசாரங்களைக் கட்டுப்படுத்த முடியாத அரசாங்கத்திடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குப் போதுமான ஒரு காவலரணாக எமது கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுதான் உண்மை. நீங்களும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சரியான வேறொரு காவலரணை அமைத்துக் கொள்ளுங்கள் என்ற ஒரு சேதியை அவர்கள் சொல்லியிருப்பதாகவே எனக்குப்படுகின்றது.
கேள்வி: மேல், ஊவா மாகாணத் தேர்தல் முடிவுகள் மு.காவின் செல்வாக்கைப் பாதிப்புறச் செய்துள்ளதா?
பதில்: முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் தளம் எப்போதும் பலமாக உள்ள ஏனைய மாகாணங்களிலும், மாவட்டங்களிலும் எமது செல்வாக்கு சரிந்துள்ளதாக ஊவா மாகாண தேர்தல் முடிவுகளால் அளவிடமுடியாது. மிகவும் குறைந்த முஸ்லிம் வாக்குகளைக் கொண்ட ஒரு மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பிரதிநிதித்து வத்தை உறுதிப்படுத்துவதற்காக ஊவா மாகாண மக்கள் அமைத்த ஒரு வியூகத்தில் மு.கா. ஒரு பங்காளி மட்டும்தான்.
பதுளை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் வட, கிழக்கிலுள்ள முஸ்லிம்களுக்குமிடையில் நிறைய கொள்கை கோட்பாடுகளில் வேறுபாடுகள் உள்ளன. முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள், இன ரீதியான அரசியல் தனித்துவம், தேசிய மட்ட, மாகாண மட்ட இனப்பிரச்சினைத் தீர்வுகள் என்பன போன்ற பாரிய கோட்டுபாடுகளை உள்வாங்கிக் கொண்ட மு.கா.வின் வீரியத்தை பரீட்சித்துப் பாக்கக்கூடிய விளை நிலமல்ல ஊவா.
கேள்வி: மஹிந்த ஆட்சியை முஸ்லிம்கள் வெறுக்கிறார்கள் என்பது முஸ்லிம் கூட்டின் தோல்வியிலிருந்து விளங்குகிறதா?
பதில்: ஆம். இந்த வெறுப்பு மஹிந்த என்ற தனிமனிதன் மீதானதல்ல. அவரின் ஆட்சியி லுள்ள அதிகாரமிக்க பலர் சிறுபான்மை மக்களுக்கெதிரான செயற்பாடுகளைத் தடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்ற ஆதங்கத்தின் விளைவே அது. அண்மைக் காலங்களில் நடந்த மாகாண சபைத் தேர்தல்களின் முடிவுகள் அனைத்திலும் இந்த ஆதங்கம் வெளிப்பட்டி ருந்ததை நாம் கண்டுள்ளோம். தேர்தல் பிரசாரங்களின்போது இந்த உண்மையை நேரடியாக சிலர் எம்மிடம் குறிப்பிட்டுவிட்டு "சொல்வதற்காக எம்மை மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று தாழ்மையுடன் வேண்டி நின்றார்கள்.
கேள்வி: முஸ்லிம்களின் கட்சியான மு.கா. ஏன் இன்னும் அரசுடன் ஒட்டிக் கொண்டி ருக்கிறது?
பதில்: மு.கா. மட்டும்தான் முஸ்லிம் கட்சியுமல்ல. மு.கா. மட்டும்தான் முஸ்லிம் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள் என்பதுமல்ல. ஒட்டு மொத்தமாக எல்லா முஸ்லிம் உறுப்பினர்களிடமும் கேட்க வேண்டிய ஒரு கேள்வி இது. மு.கா. அரசுடன் சேர்ந்தது ஒரு விபத்து என நான் பல முறை கூறியுள்ளேன். 18ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவளிக்கச் சென்ற அந்த விபத்திலிருந்து இன்னும் என்னை சுதாகரித்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றேன். விபத்துக்குக் காரணமாக இருந்தவர்கள் எதுவுமே நடக்காதது போல் வீறுநடைபோட்டுக் கொண்டு திரிகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் சில முக்கிய விடயங்கள் சார்ந்த வாக்குறுதிகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. அந்த விடயங்களுக்கான விடைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய காலம் கனிந்து வருகின்றது. சரியான விடைகள் கிடைக்காவிட்டால் நாமே விடை கொடுக்க வேண்டிய காலமாகவும் அது மாறலாம். விடை கிடைப்பதற்கு முன் நாம் விடை கொடுத்தால் "நல்ல விடை கொடுக்கத்தான் நாம் காத்திருந்தோம். வீணாக அவசரப்பட்டு எமக்கு விடை கொடுத்துவிட்டீர்களே' என்று அவர்கள் வெட்டிப் பேச்சுப் பேசத் தொடங்கிவிடுவார்கள். அதற்கு ஒத்து ஊதுவதற்குக் காத்திருப்பவர்கள் "அதுதானே பாருங்கள். கொஞ்சம் தாமதித்துப் பார்த்திருக்கலாமே. அவசரப் புத்திக்காரர்கள். வெண்ணெய் திரளும்போது தாழியை உடைத்துவிட்டார்களே' என்று பாடுவதற்குக் காத்திருப்பார்கள். எனவேதான் மு.கா. கனிந்துவரும் காலத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றது.
கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பீர்கள்?
பதில்: எமது கட்சியின் அரசியல் உச்சபீடம் எடுக்கும் முடிவுக்கு நாம் கட்டுப்படுவோம். அரசாங்கத்தில் இருக்கின்@றாம் என்பதற்காக அரசு தரப்பு வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற கடப்பாடு எமக்கு இல்லை. அதேபோல் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சி வேட்பாள ருக்கு ஆதரவளித்து ஆத்திரத்தைக் கொட்டித் தீர்க்க வேண்டும் என்பதும் எமது நோக்கமல்ல.
கிழக்கு மாகாண சபை ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியபோது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் சுய நிர்ணய உரிமை, இருப்பு, அதிகாரப்பகிர்வு சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக எமக்கு சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அவற்றை மையமாக வைத்தும், வடகிழக்கிற்கு வெளியில் வாழும் முஸ்லிம்களின் தனித்துவம், கலாசாரம், மத சுதந்திரம், தேசிய அடையாளம், பாதுகாப்பு என்பன பற்றியும் வலுவான பேச்சுவார்த்தைகளில் கட்சி ஈடுபடவேண்டும்.
ஏற்கனவே தரப்பட்ட வாக்குறுதிகள் நிறை வேற்றப்பட்டும், ஏனையவற்றிற்கு உறுதியான உத்தரவாதமும் தரப்படவேண்டும். இதே கருப்பொருள்களை அளவுகோலாக வைத்தே எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு வழங்கவுள்ள ஆதரவும் அளவிடப்படவேண்டும். இந்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகத்தினர் என்றுமே இல்லாதவாறு ஒரு ஆபத்தான நிலையை நோக்கி விரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சரியான ஒரு முடிவை அவர்கள் ஒன்றிணைந்து எடுக்காவிட்டால் மீளமுடியாத துயருக்குள் சிக்கித் தவிர்க்க நேரிடும். எனவேதான் யார் வேட்பாளராக வந்தாலும் அவர் எமது ”பீட்சமான நிம்மதியான எதிர் காலத்துக்கு உறுதியான நேர்மையான உத்தரவாதத்தை உறுதிப்படுத்தக் கூடியவராக தன்னை ஐயம் திரிபற அடையாளப்படுத்திக் காட்ட வேண்டும். அவருக்கே நமது வாக்குகள்.
கேள்வி: பொதுபல சேனாவுடன் அரசு உறவு வைத்துள்ளதா?
பதில்: பொதுபல சேனா போன்ற ஒரு அமைப்பு இவ்வளவு வீரியத்துடன் தனது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதென்பது அதற்கு அரசின் அனுசரணை ஏதோ ஒரு வகையில் இருப்பதனால்தான் என பலரும் வெளிப்படையாகவே கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். சட்டம், ஒழுங்குகளுக்கு அமைவாக தமக்குப் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நப்பாசையுடனும், நம்பிக்கையுடனும் களமிறங்கி யவர்களெல்லாம் தற்போது தளர் நிலையடைந்து பின்வாங்கிக் கொண்டுள்ளனர்.
முஸ்லிம்களை எப்பாடுபட்டாவது வம்புக்கு இழுத்து உணர்வுகளைச் சீண்டி அவர்களை தெருவுக்கு இழுத்து வந்து சர்வதேச பயங்கரவாதிகள் என முத்திரை குத்த வேண்டுமென்ற நோக்கு மட்டும் இன்னும் நிறைவேறவில்லை என்ற நிலையில் பல்லைக் கடித்துக் கொண்டு தொடர்ந்து திட்டங்களை தீட்டிக் கொண்டேயிருக்கின்றார்கள் அவர்கள் உச்சகட்ட பொறுமை நிலையை நாம் கடைப்பிடிப்பதைக் கண்ட அரசாங்கமோ அதனை தமது பலவீனம் என தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டு தொட்டிலை ஆட்டிக் கொண்டிருக்கின்றது. இதுதான் நமது இன்றைய நிலை. முஸ்லிம் பாராளுமன்ற ஒன்றியம் ஆழ்ந்த உறக்கத்தில் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்கின்றது. அதன் தூக்கத்தை தயவு செய்து குழப்பிவிடாதீர்கள்.
கேள்வி: பொதுபல சேனா, விராது தேரர் கூட்டு தொடர்பில் கருத்து?
பதில்: அண்மைக் காலங்களில் கடந்த 2 வருடங்களாக நமது நாட்டில் முஸ்லிம்களுக்கெ திராக கட்டவிழ்த்து விடப்பட்ட வெறுப்புச் சம்பவங்கள் எல்லாம் உள்நாட்டு விவகாரம் தான் என்று நாம் நினைத்தவை எல்லாம் தப்புக் கணக்கு என்ற உண்மை தற்போது வெளிப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் திட்டமிட்டு பர்மாவில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டு நம் நாட்டில் அந்த அனுபவம் கச்சிதமாக அரங்கேற்றப்பட்டுள்ளது என்ற உண்மை இப்போது வெளிப்பட்டுள்ளது. அண்மையில் அளுத்கம பிரதேசங்களில் ஒத்திகை பார்க்கப்பட்ட உச்ச கட்ட நாடகம் 2015இல் பிரமாண்டமாக கொட்டகை நிறைந்த காட்சிகளாக நாடெங்கும் அரங்கேற்றப்படலாம். சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு மட்டும்தான் உள்ளகத் தீர்வு, வெளிநாட்டுத் தலையீட்டுக்கு இடமேயில்லை என்று அடித்துக் கூறுபவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்படும் வன்முறைகள் மட்டும் வெளிநாட்டுத் தொடர்போடு செயற்படலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளதோ என யார் அறிவார்?
கேள்வி: 28ஆம் திகதி பொதுபல சேனா கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்கள் பற்றி...?
பதில்: அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமல்ல. இந்நாட்டில் வாழும் ஏனைய சிறுபான்மை சமூகங்க ளுக்கெதிராகவும் நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு எதிராகவும் எடுக்கப்பட்ட தீர்மானங்களாகும். முஸ்லிம்களுக்கெதிராக சொல்லப்பட்ட வைக்கு நான் பதில் சொல்ல இப்போது தயாரில்லை. ஏனெனில் எமது பதிலை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் திரித்துக்கூறி "இதோ இந்நாட்டில் இஸ்லாமிய பயங்கர வாதிகள் காலூன்றிவிட்டனர். கிளர்ந்தெழுங்கள்' என்று அளுத்கம பாணியில் அறப்போருக்கான அழைப்பை விடுவார்கள்.
ஆனால் அங்கு எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள் இறைமைமிக்க இந்நாட்டின் அரசியல் யாப்பையும், அரசாங்கத் தையும் சவாலுக்குட்படுத்தக் கூடியவையாகும். இலங்கை ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடல்ல. அதன் தேசியக் கொடியில் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறக்கோடுகள் நீக்கப்படவேண்டும். ஸ்ரீலங்கா என்பது "சிங்ஹலே' என மாற்றப்படவேண்டும். சிறுபான்மையாக வாழும் மக்கள் சிங்கள முஸ்லிம், சிங்கள இந்து, சிங்கள கிறிஸ்தவர்கள் என்று வகைப்படுத்தப்படவேண்டும், ஷரீஆ சட்டங்கள் முற்றாக நீக்கப்படவேண்டும் என்ற விடயங்கள் இலங்கையின் அரசியல் யாப்பு சம்பந்தப் பட்ட விடயங்களாகும்.
இதுபற்றி அரசாங்கம் தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். பொதுபலசேனாவின் எல்லா விடயங்களையும் தட்டிக் கழிப்பது போல் இந்த விடயங்களை அரசு தட்டிக்கழிக்க முடியாது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் இந்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்களின் மத்தியில் பாதுகாப்பற்ற வெறுமையையும், அச்சத்தையும் தோற்றுவிக்கும். எனவே அரசாங்கம் உடனே இதுபற்றி அதன் நிலைப்பாட்டினை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்த வேண்டும்.
கேள்வி: பலசேனா அச்சுறுத்தல் பற்றி ஜனாதிபதியுடன் பேசுவீர்களா?
பதில்: பலமுறை பேசியாகிவிட்டது. பேச வேண்டிய காலம் வரும்போது எல்லோரும் பேச வேண்டும். ஒரு கை ஓசை ஒலியாகாது, வக்காலத்து வாங்குபவர்கள் கொஞ்சம் ஓய் வெடுத்தால் நல்லது.
கேள்வி: இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கும் வியூகமுண்டா?
பதில்: மு.கா. மட்டும் தனியாக வியூகம் அமைக்க முடியாது. அதற்கான பலமும் பக்கத் துணையும் கிடையாது. ஒரு சிறுபான்மை அரசியல் கட்சி இவ்வாறான விடயங்களில் எடுக்கக் கூடிய உச்சகட்ட முயற்சிகளை மு.கா. ஏற்கனவே எடுத்துள்ள விடயம் எல்லோருக்கும் தெரியும். "தேசத்துரோகிகள், காட்டிக் கொடுப்பவர்கள்' என்றெல்லாம் நமது சகோதரர்களே எம்மீது முத்திரை குத்திய காலத்தையும் நாம் சந்தித்துள்ளோம். மு.கா. அதனால் முடிந்த அளவு துணிவுடன் எதனையும் எதிர்கொள்ள எப்போதும் தயார் நிலையிலேயே உள்ளது.
கேள்வி: தமிழ் கூட்டமைப்பு, மு.கா. பேச்சுவார்த்தை பற்றி?
பதில்: தமிழ் கூட்டமைப்புடன் மு.கா. பேசுவது இது முதல் தடவையல்ல. மறைந்த எமது ஸ்தாபகத் தலைவர் ஆரம்பித்து வைத்த ஒரு சம்பிரதாயம் அது. இன்றைய காலகட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் என்ற அகன்ற வரையறைக்குள் தீர்வுத் திட்டங்களை நகர்த்தத் தேவை ஏற்பட்டுள்ளது. தமிழ் முஸ்லிம்களுக்கிடையிலுள்ள சிறு சிறு பிரச்சினைகளுக்கான தீர்வுகள்
வழங்கும் நாட்டாமைகளாக பேரினவாத கடும் போக்காளர்களின் கைக்கூலிகள் ஊடுருவல் செய்வதற்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள். அவர்களின் உதவிகள் இரு சமூகங்களுக்கிடையிலுள்ள விரிசல்கள், பூதாகரமாக்கப்படும் திட்டங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படுகின்றன.
கல்முனையில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த ஒரு பிரதேச செயலகப் பிரச்சினையைப் பேசித் தீர்ப்பதற்கு நாம் முயற்சிக்கையில் இடையில் புகுந்த சிலர் தீர்வாக ஒரு பெரும்பான்மையைச் சேர்ந்தவரை கல்முனை பிரதேச செயலாளராக அமர்த்தி ஒரு "சுமுகமான தீர்வை' திணித்துள்ளனர். இவ்வாறான "திடீர் தீர்வுகள்' பல வடகிழக்கில் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளன. குரங்குகள் அப்பம் பங்கிட நமது பூனைகள் வழியமைத்துக் கொடுக்கத் தயாராகின்றன. எனவேதான் தமிழ், முஸ்லிம் மக்கள் மனம் விட்டுப்பேசி அவர்களுக்கிடையில் உள்ள பிரச்சினைகளுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு தீர்வுகளைக் காணவேண்டும்.
தேசியமட்ட இனப் பிரச்சினை தீர்வில் இரு சமூகங்களும் மிகவும் உயிரோட்டத்துடனும் அர்ப்பணிப்புடனும் மனம் விட்டுப் பேசவேண் டும். சர்வதேச சமூகங்களும் அதனையே எதிர்பார்க்கின்றன. இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றி ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் திட்டமிட்டு முஸ்லிம் காங்கிரஸ் ஓரம் கட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு ஒரு நியாயமான கௌரவமான தீர்வை இந்த அரசாங்கம் ஒருபோதும் தரப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. தான் விரும்பும் தீர்வுக்குத் தலை வணங்கக் கூடிய சிறுபான்மையினப் பிரதிநிதி களை அடையாளம் கண்டு அவர்களின் எண்ணிக்கைகளை காரணம் காட்டி தனது தீர்வுத் திட்டத்தை எம்மீது திணிப்பதற்கு அரசு தீர்மா னித்துவிட்டது.
எனவேதான் "தமிழ் பேசும் மக்கள்' என்ற அகன்ற வரையறையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. பெரும்பான்மையினருக்கெதிராக போராடுவதற்காக தமிழர்களும், முஸ்லிம்களும் அமைத்துக் கொள்ளும் ஒரு புதிய எதிர்ப்பு அரணாக இந்த முயற்சியை நாம் பார்க்கக் கூடாது. பெரும் தேசிய கடும் போக்குவாதிகளிடமிருந்து வரும் அரசியல் ரீதியான நெருக்குதல்களிலிருந்து ஒரு பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய சாதாரணமான வியூக மாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.
கேள்வி: கூட்டமைப்புடன் கூட்டணி அமைக்கப்படுமா?
பதில்: காலம்தான் இதற்கான பதிலைச் சொல்லவேண்டும். இரு சமூகங்களின் இதய சுத்தியான பேச்சுவார்த்தைகளில் தான் இந்தக் கேள்விக்கான பதில் அடங்கியிருக்கின்றது. விட்டுக் கொடுப்புடன் இரு சமூகங்களும் தங்களுக்கிடையில் போடப்பட்டிருக்கும் நூல் வேலியைப் பிரித்துவிட்டு அரசியல் தீர்வில் ஒத்த கருத்தைப் பிரதிபலிக்க முடியுமானால் இது சாத்தியப்படலாம். அடம்பன் கொடியும் திரண்டால்தான் மிடுக்கு.
கேள்வி: கரையோர மாவட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவீர்களா?
பதில்: ஏற்கனவே இவ்விடயம் ஜனாதிபதியிடம் எமது தலைவரால் வலியுறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபை ஆட்சியமைப் பதற்கு முன்னர் நாம் அரசுடன் செய்து கொண்ட கடிதப்பரிமாற்றத்தில் இவ்விடயம் தெட்டத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதப் பரிமாற்றத்துக்கு முன்னர் நேரடிப் பேச்சுவார்த்தைகளின்போது இணக்கம் காணப்பட்ட ஒரு விடயமாகும். முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரையில் இந்த விவகாரம் எவ்விதமான விட்டுக் கொடுப்புக்கும் அப்பாற்பட்டதாகும். தலைவர் அஷ்ரப் காலத்திலும் முஸ்லிம் காங்கிரஸுக்கும், வேறு கட்சிகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு ஒப்பந்தங்களிலும் இவ்விடயம் தொடர்ச்சியாக உள்ளடக்கப்பட்டுள்ளதாகும்.
இந்நாட்டிலுள்ள பெரும்பான்மை அரசியல் கட்சித் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்றவர் களால் பேச்சுவார்த்தைகளின்போது ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்னர் எழுத்தில் உறுதிப் படுத்தப்பட்ட ஒரு விடயம் இதுவாகும். முஸ்லிம் காங்கிரஸ் உள்நாட்டிலும் மற்றும் சர்வதேச மட்டங்களிலும் சமர்ப்பித்த ஆவணங் களில் காலாகாலமாக தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவரும் ஒரு வேண்டுகோள் இதுவாகும்.
இலங்கையில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் ஒரு மாவட்டம் அடையாளத்துக்காக அமைய வேண்டும் என நாம் வேண்டுவதில் என்ன தவறு இருக்கின்றது? 1961ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து புதிய அம்பாறை மாவட்டம் பிரிக்கப்பட்டபோது கல்முனை, சம்மாந்துறை, பொத்து வில் தொகுதிகளுடன் அம்பாறைத் தொகுதி சேர்க்கப்படும்போது அதனுடன் அண்டை மாவட்டங்களிலிருந்த பாரிய நிலப்பரப்பும் பெரும்பான்மையின சனத்தொகையும் சேர்க்கப்பட்டு புதிய திகாமடுள்ள மாவட்டம் உருப்பெற்றது. வேண்டுமென்றே முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாவட்டம் உருவாகக்கூடாது என்று திட்டமிட்டு ஒரு சதியை நிறைவேற்றினார்கள். சிங்கள மேலாதிக்கத்துக்கு சாமரை வீசும் அன்றிருந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் தட்டிக் கேட்கத் தவறியதால் இந்த உரிமையை நாம் இழந்தோம். முஸ்லிம் கிராமங்கள் மிகக் குறுகிய நிலப்பரப்பிற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு ஆறுதலளிக்கும் உரிமை வழங்கப்பட்ட நிலங்கள் கூட இன்று அம்பாறை கச்சேரியின் பொடுபோக்குத் தன்மையால் பறிபோய்க் கொண்டிருக்கின்றது.
கேள்வி: மு.கா.வின் அடுத்த இலக்கு என்ன?
பதில்: எதிர்கொள்ளவுள்ள இரண்டு முக்கியமான தேசிய மட்டத் தேர்தல்களுக்கு வாக்காளர்களை நெறிப்படுத்துவதாகும். எடுப்பார் கைப்பிள்ளைபோல பாவிக்கப்பட்ட முஸ்லிம் வாக்காளர்களும், கட்சியும் தங்களது வாக்குப் பலத்தால் மீண்டும் பேரம் பேசும் சக்தியை சரியாகப் பயன்படுத்துவதற்கான உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் வலிமையைப் பெறவேண்டும். அதற்கான திட்டங்கள் தீட்டப்படவேண்டும். ஏற்கனவே ஏமாந்து, படுகுழிக்குள் வீழ்ந்து விட்ட நிலைமையிலிருந்து பாதுகாப்பைத் தேடிக் கொள்ளும் பக்குவம் கட்சிக்குள் வளர்க்கப்படவேண்டும். வேட்பாளர்கள் "பைஅத்' செய்யும்போது கட்சித் தலைமைத்துவமும் பைஅத் செய்து கொள்ளவேண்டும்.
வெற்றியீட்டும் பக்கம் சாய்வதுதான் சிறந்த ராஜதந்திரம் என்ற பலவீனமான எண்ணம் மனதுக்குள் புகுந்து விடாமல் நம்மைத் திடப்படுத்திக் கொண்டு நிலையான கொள்கையுடன் வெற்றியையும் தோல்வியையும் இறைவன் பக்கம் சாட்டிவிடும் அசையாத நம்பிக்கையை வாக்காளர்கள் மத்தியில் ஊட்டவேண் டும். வெற்றிக்குள் மறைந்து கிடக்கும் தோல்வியையும், தோல்விக்குள் மறைந்து கிடக்கும் வெற்றியையும் பகுத்தறியும் பக்குவத்தை வாக்காளர்கள் மத்தியில் வளர்க்கவேண்டும்.
கேள்வி: ஊவா கூட்டணி தொடருமா?
பதில்: ஊவா கூட்டணி பதுளை மாவட்டத்திற்கு மட்டும் வேண்டப்பட்டதொன்றாகும். கொள்கை கோட்பாடுகளுக்கப்பால் ஒரு தனித்துவமான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளும் ஒரே நோக்கை மையமாகக் கொண்டு வகுக்கப்பட்டது. இது ஏனைய தேர்தல்களுக்குப் பொருந்தாது. ஏனெனில் எமது கொள்கை கோட்பாடுகளுடனும், நீண்டகால அபிலாசைகள், பிராந்திய ரீதியான அதிகாரப் பகிர்வு, சுயநிர்ணயம், தனித்துவ அடையாளம், கலாசார மத விழுமியங்களின் பாதுகாப்பு என்பவற்றில் ஒத்த கருத்தை அடைவதற்கு பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
(நேர்காணல்: சிராஜ் எம். சாஜஹான்)
