எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, October 18, 2014

பிழைப்புக்காக சென்றவர்கள் பிணமாக திரும்பும் அவலம்

Print Friendly and PDF

தமது குடும்ப வறுமையை போக்கிக் கொள்ளவும், சகோதரியின் உயர்கல்விக்கு ஒத்தாசை புரிவதை நோக்கமாகவும் கொண்டு மலேசியாவில் தொழில்வாய்ப்புக்கு சென்ற 26 வயது டைய முஸ்லிம் இளைஞரொருவர் அந்நாட்டு தொழில் வழங்குனர் உள்ளிட்ட குழுவொன்றினால் ஒரு வாரகாலமாக கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மலேசியாவில் இயங்கும் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 


இற்றைக்கு ஒன்றரை வருட காலங்களுக்கு முன் கலேவெல, புவக்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் சப்ரின் என்ற இளைஞனே மலேசியாவில் தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்று இந்த அவல நிலைக்கு ஆளாகியுள்ளார். 

கடந்த மே மாதம் 22ஆம் திகதி தமது உறவினர்க ளோடு இறுதியாக தொலை பேசியில் தொடர்பு கொண்ட சப்ரின், அதன்பின் ஐந்து மாத காலமாகி யும் அவர் தொடர்பிலான எந்தவொரு தகவலையும் அறிந்துகொள்ள முடியாதிருந்தது. இந் நிலையில் அவரது தந்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்குச் சென்று முறையிட்டிருக்கிறார். இது தொடர்பில் ஆராய்ந்த பணியக அதிகாரியொருவர் சப்ரினின் தந்தைக்கு வழங்கிய தகவல் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

இதற்கு சில மாதங்களுக்கு முன் சப்ரின் அந்நாட்டு தொழில் வழங்குனரொருவர் உட்பட குழுவொன்றினால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் நிலவுவதாகவும் அந்த அதிகாரி கூறியிருக்கிறார். சப்ரினோடு மலேசியாவில் பணியாற்றிய இளைஞரொருவர் அண்மையில் இலங் கைக்கு வந்தபோது அவர் கூறியிருந்த கருத்துகள் மிகவும் பாரதூர மானவை. சுய விபரங்களை வெளியிட விரும்பாத அந்த இளைஞன் கூறியதாவது; 

நாங்கள் பணிபுரியும் வாகனங்களை கழுவி சுத்தம் செய்யும் நிறுவனத்திற்கு அன்றைய தினம் பல்வேறுபட்ட வாகனங்கள் வந்திருந்தன. சப்ரின் கழுவி சுத்தப்ப டுத்திக் கொண்டிருந்த வாகனத்தை அவர் சற்று பின்னோக்கி நகர்த்திய போது அங்கிருந்த சுவரொன்றில் மோதி வாகனம் சேதத்திற்குள்ளாகியது. அந்த சந்தர்ப்பத்தில் வாகனத்தின் உரிமையாளருக்கும் சப்ரினுக்குமிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. பின்னர்தொழில் வழங்குநர் வாகன உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபா பணத்தை வழங்கி சமாதானப்படுத்தியுள்ளார். 

இதனால் கோபமுற்ற தொழில் வழங்குநரான கிருஷ்ணன் மூன்று வாரங்களுக்குப் பின் மதுபோதை தலைக்கேறிய நிலையில் சப்ரினோடு இச்சம்பவம் தொடர்பில் அடிக்கடி வாக்குவாதப்பட்டுள்ளார். அத்துடன் சப்ரினுக்கு உணவு வழங்காது துன்புறுத்தியுள்ளார். சுமார் ஒரு வாரகாலமாக இந்த வாக்கு வாதம் இடம்பெற்றுவந்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணன் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து சப்ரினை கடுமையாக தாக்கியபோது, கடந்த மே மாதம் 28ஆம் திகதி சப்ரின் மரணித்துள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்  குறித்த இளைஞன் அவனது கையடக்கத் தொலைபேசியில் அந்த காட்சியை பதிவு செய்துள்ளதோடு, மலேசியாவிலிருக்கும் இலங்கை தூதுவராலயத்திற்கு சென்று இச்சம்பவம் தொடர்பாக முறையிட்டிருந்தார்.

இதுகுறித்த விபரங்கள் எதுவும் அறியாத நிலையில் தனது ஒரே மகன் மே 22ஆம் திகதிக்குப் பின் தொடர்பற்றுப்போன கவலையில் இருந்த தந்தை அண்மையில் ஒக்டோபர் 9ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை அணுகிய பின்னரே இவ்வாறு ஒரு பெயருள்ள ஒரு நபர் மரணித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணித்து ஐந்து மாதங்களின் பின்னரே சப்ரின் இறந்ததை குடும்பம் அறிந்துகொண்டது.

அதன் பின்னர் சப்ரினுடன் பணியாற்றி அவ்விடத்தை விட்டுத் தப்பிச்சென்ற
சிங்கள சகோதரர் ஒருவரின் தொடர்பினை மலேசியாவில் இயங்கும் இலங்கை தூதரக ஊழியர் ஒருவர் ஊடாக பெற்றுக்கொண்டு விசாரித்ததிலேயே அனைத்து உண்மைகளும் தெரியவந்துள்ளதுடன் குறித்த இளைஞன் சர்வசாதாரணமாக கொல்லப் பட்டு குப்பை லொறி யில் ஏற்றி வீசப்பட்ட விபரமும் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது தப்பியோடிய நபர், மீண்டும் நாடு திரும்புகையில் குறித்த நிறுவன உரிமையாளரதும் சப்ரினது இறுதி நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்க ளையும் தூதரகத்தில் ஒப்படைத்து விட்டு வந்துள்ளார். மலேசிய பொலிஸாரிடம் இதில் நீதியை எதிர்பார்க்க முடியாதெனவும் தனக்கு உயிராபத்து நேரும் என்பதால் தன்னால் எதுவுமே செய்ய முடியாதிருந்ததாக வும் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் குவைத்தில் வைத்து படுகொலை செயப்பட்டுள்ளார். கந்தளாய கொளனியைச் சேர்ந்த 33 வயதுடைய றிசானா என்பவரே இவ்வாறு படுகொலை செயப்பட்டுள்ளார். மூதூர் றிசானாவின் மரணத்தை இன்னும் மறக்காத நிலையிலயே இவ்வாறானதொரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

றிசானா ஒரு அழகான பெண். பார்ப்பவர்களை வசீகரிக்கும் குணமுடையவள். றிசானா பணிப்பெண்ணாக குவைத்துக்குச் சென்றபோது அங்கு வேலைபார்க்கும் பாகிஸ்தான் பிரஜை ஒருவருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாடு சென்ற றிசானா காதல் மயக்கத்தில் மூழ்கிக்கிடந்தார்.

இவ்வாறு இவர்களது வாழ்க்கை சென்றுகொண்டிருக்கும்நிலையில்,  பாகிஸ்தான் பிரஜை றிசானாவை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளான். குவைத்திலுள்ள பஹாஹி எனுமிடத்தில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

றிசானா மரணித்து சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் சந்தேதகத்தின் பேரில் குறித்த பாகிஸ்தான் நாட்டு பிரஜை கைதுசெய்யப்பட்டான். தனது காதலியான றிசானாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாலேயே அவளை கொலை செய்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் குவைத் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாடு செல்பவர்கள் அங்கு படுகொலை செய்யப்படுவதை தடுக்க கடுமையான திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம் சகோதரிகள் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதைத் தடுப்பதற்கு காத்திரமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எத்தனை றிசானாக்கள் மரணித்தாலும் வறுமைப்பிணியை காரணம்காட்டி பணிப்பெண்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது.

(அமீர் ஹம்ஸா, பிறவ்ஸ் முஹம்மட்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2