Published On: Sunday, October 19, 2014
இறந்துபோன பாட்டி பேத்திக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்.
3 ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன பாட்டியின் செல்போனில் இருந்து "நான் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்று பேத்திக்கு வந்த எஸ்.எம்.எஸ். இங்கிலாந்தில் உள்ள ஒரு குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இது யாரோ ஒருவர் செய்த குறும்பு எனத் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தவர் லெஸ்லி எமர்சன் (59) என்கிற பெண் கடந்த 2011ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவருடன், அவர் பயன்படுத்திய செல்போன் உள்ளிட்ட பொருட்கள் எரிக்கப்பட்டன. இந்நிலையில் அவருடைய பேத்தி ஷெர்ரி (21), தனது பாட்டி இறந்து போனதை மறந்து, வழக்கம்போல நல்ல செய்திகளை தனது பாட்டியின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருந்தாள்.
இதேபோல் அவள் அனுப்பிய செய்திக்கு கடந்த வாரம் திடீரென உன்னுடைய செய்தியை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று பதில் வந்தது. உன்னுடைய செய்தியை படித்ததில் இருந்து எனக்கு உடல்நிலை சரியில்லை, உன்னுடைய முடிவு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று பேத்தியின் எஸ்.எம்.எஸ்.க்கு பதில் வந்து கொண்டிருந்தது. இதைக் கண்டதும் பேத்தி ஷெர்ரி அதிர்ச்சியடைந்தாள். இதுகுறித்து தனது மாமாவிடம் கூறினாள்.
பாட்டி பயன்படுத்திய செல்போன் நம்பரை அந்நிறுவனம் துண்டிக்காமல், மற்றொருவருக்கு கொடுத்துவிட்டது. அந்த நம்பரில் வந்த செய்தியைப் பார்த்ததும் குறும்பு வாலிபர் பதிலளித்தது துப்பறியும் நிறுவனத்தின் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து செல்போன் நிறுவனமும் அந்த குறும்பு வாலிபரும் நேற்று பாட்டியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டனர். இதனையடுத்து இந்த கலாட்டா முடிவுக்கு வந்தது.
