Published On: Saturday, October 18, 2014
ராஜபக்ஷவை சிறையில் அடைக்காமைக்கு வருந்துகிறேன்: முன்னாள் நீதியரசர்
இலங்கை நீதித்துறையில் பக்கச்சார்புகள் இருக்கின்றது என்பதை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஆற்றிய உரை ஒன்று தெளிவுபடுத்தியுள்ளது. ஹெல்பிங் அம்பாந்தோட்டை ஊழல் குற்றச்சாட்டில் மகிந்த ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட வேண்டியவராக இருந்தார்.
ஆனால், அவரை சிறையில் அடைக்காமல் நான் தடுத்தேன் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கூறுவதில் இருந்து இலங்கையின் நீதித்துறையின் போக்கு எத்தகையதாக இருந்துள்ளது என்பது நிரூபணமாகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கும் இடையே முரண்பாட்டு நிலைமை வலுவடைந்து வருகின்றது.
மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகைமை மகிந்த ராஜபக்சவுக்கு இல்லை என்று வெளிப்படையாகக் கூறி இருந்த ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, இப்போது தான் வழங்கிய தீர்ப்பு ஒன்றைச் சுட்டிக்காட்டி, மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு அவரை சிறையில் அடைக்கக் கூடியதான குற்றச்சாட்டு ஒன்று இருந்தது எனவும் எனினும்தான் அதனைச் செய்யாமல் விட்டதனாலேயே அவர் ஜனாதிபதி ஆனார் என்றும் கூறியுள்ளார்.
