Published On: Sunday, October 26, 2014
கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக அப்துல் மஜீத் நியமனம்
கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீத் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுள்ளார்.
இது தொடர்பான விசேட வைபவம் வியாழக்கிழமை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் இடம்பெற்றது.
இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எல்.எம்.நஸீர், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.எம்.பரக்கத்துல்லாஹ், ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர் அலி, எம்.நசார்தீன், எம்.சாலிதீன், மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கணக்காளர் எச்.எம்.ரஷீத், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அசுஹர், சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம், மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் ஆகியோர் புதிய பிரதி முதல்வர் மஜீதை வாழ்த்தி உரை நிகழ்த்தியதுடன் அவரை பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புடைசூழ பிரதி முதல்வர் அலுவலகத்திற்கு வரவேற்று அழைத்துச் சென்று கடமைகளை பொறுப்பேற்க செய்தனர்.
(அஸ்லம் எஸ்.மௌலானா)
