Published On: Wednesday, October 15, 2014
கொழும்பு ஊடகவியலாளர் ஒன்றுகூடலுக்கு கொலை அச்சுறுத்தல்
ட்ரான்ஸ் பெரன்ஸி இன்டர் ஜெஷனல் அமைப்பினால் நடாத்தப்பட்ட புலனாய்வு ஊடகத்துறை தொடர்பான பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளக் கூடாதென அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புக்களும், குறுந்தகவல்களும் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து குறித்த நிகழ்வு பெரும் குழப்ப நிலைக்கு உள்ளாகியுள்ளது.
புலனாய்வு ஊடகத்துறையில் பயிற்சியைப் பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு டிரான்ஸ்பெரன்ஸி இடன்டர்நெஷனல் அமைப்பினால் கடந்த 15ஆம் திகதி கொOம்பிலுள்ள ஜானகி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டவர்களில் சிலருக்கு ரட பேராகத் தேஷப்பிரேமி பலகாய எனும் பெயர் குறிப்பிடப்பட்ட அமைப்பினால் குறித்த நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்றும், இந்நிகழ்வில் கலந்து கொள்ளக் கூடாதெனறும், நீங்கள் தாக்கப்படுவீர்கள் என்றும் குறுந்தகவல் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதேவேளை டிரான்ஸ் பெரன்ஸி இன்டர் நெஷனல் அமைப்பின் ஊழியர்களுக்கும் இந்தக் குறுந்தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வருகை தந்த பிராந்திய ஊடவியலாளர்களுக்கு தொடர்ந்தும் பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.
இலக்கத்தகடு இல்லாத வாகனங்களில் வந்த இருவர் அங்கு பொதியொன்றை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். குறித்த பொதியை பிரித்துப் பார்த்தபோது, ஜானகி ஹோட்டல் எல்.ரி.ரி.ஈக்கு இடமளிக்க வேண்டாம். இது கடைசி எச்சரிக்கை என்று அதிலுள்ள காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
ஜானகி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வினை வேறொரு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டது. புதிய இடத்தில் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வின்போது அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளன.
எனினும் ஏற்பாடு செய்யப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு புதிய இடத்தில் இடம்பெற்றது. ஏ.எப்.பீ.பீயுரோ தலைவர் அமல் ஜயசிங்க, சுதந்திர ஊடக அமைப்பின் அமைப்பாளர் ஜயசேகர, ராவல பத்திரிகை ஆசிரியர் விக்டர் ஐவன் உட்பட ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.
டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.ரனுக்கே தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் புலனாய்வு ஊடகத்துறையில் பயிற்சி பெற்றவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் பலரும் கருத்துக்களை அங்கு முன்வைத்தனர். சுதந்திரமாக செயற்படும் எமக்கு இன்று கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. எம்மை அச்சுறுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக ஜனாதிபதி, அரசாங்கம், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அறிவித்து இது தொடர்பாக அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.
