எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, October 13, 2014

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முஹிந்த போட்டியிட முடியுமா?

Print Friendly and PDF

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாம் முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற சர்ச்சை அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பலமாகப் பேசுபொருளாக மாறியுள்ளது. அடுத்தாண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


1978ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டப்படி ஜனாதிபதி ஒருவருக்கு இரண்டு முறையே பதவி வகிக்க முடியும். அமெரிக்க முறையை முன்மாதிரியாகக் கொண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன இருமுறை பதவியிலிருக்க முடியும் என்பதனை அரசியல் யாப்பில் உட்படுத்தினார். ஆனால் இந்த அரசு 18ஆவது அரசமைப்பினை நிறைவேற்றி பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஒருவருக்கு இருமுறைக்கு மேல் எத்தனை முறையும் தேர்த லில் போட்டியிடலாம் என்ற ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. 

18ஆவது அரசமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள முறையற்ற முறை காரணமாக ஜனாதிபதி அவர்களுக்கு மூன்றாம் முறை போட்டியிடும் உரிமை இல்லை என முன்னாள். பிரதம நீதியரசர் சரத் என். சில்வா ஆணித்தரமாகக் கூறிவருகிறார். சரத் என். சில்வாவின் வாதத்துக்குப் பிறகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு போட்டியிட முடியாது என்ற கருத்து நாடளாவிய ரீதியில் ஓங்கத் தொடங்கியுள்ளது. ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரபல  சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு போட்டியிட முடியாதெனத் தெரிவித்துள்ளார். 

தேர்தல்கள் ஆணையாளர் ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்துக்கு முன் பிரகடனப்படுத் தினால் அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மூன்றாம் பதவிக் காலத்துக்கு போட்டியிடுவதாயின் தமது கட்சி அதற்கெதிராக நீதிமன்றம் செல்லும் என மக்கள் விடு தலை முன்னணி தெரிவித்துள்ளது. 

அரச சார்பு முன்னணி வழக்கறிஞர்களுள் ஒருவரான கோமின் தயாசிறி ஜனாதிபதிக்கு மூன்றாம் முறை போட்டியிடும் உரிமை இருப்பதாகவும், அது தொடர்பான விடயங்களை நீதிமன்றத்திலேயே வெளியிட முடியும் என்று தெரிவித்துள்ளார். எது எவ்வாறான போதிலும் வாதப் பிரதி வாதங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ள இந்த விடயம் நீதிமன்றத்தில் சென்று தீர்க்கப்பட வேண்டிய ஒரு விவகாரமாகவுள்ளது. அடுத்தசில மாதங்களில் ஒரு முக்கிய வழக்காக இந்த வழக்கு அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 

இரண்டாவது பதவிக் காலத்துக்குத் தெரிவானதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றொரு பதவிக் காலத்துக்கு போட்டியிடும் உரிமையற்றவராக இருந்தார். 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் 31 (2) ஷரத்தில் நீக்கப்பட்டுள்ளதோடு மற்றொரு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் உரிமையை இழந்திருந்த ஜனாதிபதிக்கு அத்தகைமையை வழங்கும் ஏற்பாடுகள் உட்படுத்தப்படவில்லை என்பதே சரத் என். சில்வாவின் வாதமாகும். 

இதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டியிட முடியாதென்பது குறித்து நீதிமன்றம் சென்று தானே வாதிடுவ தாகவும் சரத் என். சில்வா கூறுகிறார். நாட்டின் சாதாரண ஒரு பிரஜைக்குரிய உரிமையின் அடிப்படையில் தாம் நீதிமன்றம் செல்வதாகவும் அவர் கூறியுள்ளார். 

இது பொதுமக்களைப் பாதிக்கும் அரசியலமைப்புப் பிரச்சினையாகையால் அது மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை ஆகையால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாம் முறை  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதென பிரதம நீதியரசர் சரத் என். சில்வா கூறுகிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாம் முறை தேர்தலில் போட்டியிட முற்படுவது அவரது தேவைக்கன்றி பொதுமக்களது நடவடிக்கைகளுக்காக அல்லாததனால் அரசமைப்பின் 129ஆவது ஷரத்தின்படி இது தொடர்பாக நீதிமன்றத்துக்குச் சென்று அவரால் கருத்துக் கோர முடியாதென்றும் சரத் என். சில்வா கூறுகிறார். 

18ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டியிடமுடியும் என முன்னாள் நீதியரசர்களுள் ஒருவரும் பிரபல சட்டத்தரணியும் லங்கா சமசமாஜக் கட்சி முக்கியஸ்தருமான பெடி வீரகோன் கூறுகிறார். சரத் என். சில்வா இவ்வாறு கூறுவதற்கு விசேட காரணம் ஏதுமுண்டா என இதுகுறித்து தமிழர் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து குறிப்பிடத்தக்கது. சரத் என். சில்வாவின் வாதம் நல்லதுதான். ஆனால், அவர் இதனைச் செய் வது ஜனாதிபதியின் குடும்ப அங்கத்தவர் ஒருவருக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பினைப் பெற்றுக் கொடுப்பதற்கு அல்லது ஜாதிக ஹெல உருமயவின் தேவை க்கே என்று சுமந்திரன் கூறுகிறார். 

சட்டரீதியாக ஜனாதிபதித் தேர்தல் 2016ஆம் ஆண்டே நடாத்தப்படவேண்டும். ஆனால்,யுத்தத்தின் வெற்றி காரணமாக ஜனாதிபதிக்கிருந்த செல்வாக்கு குறைந்திருப்பதனால் உரிய காலத்துக்கு முன் தேர்தலை நடாத்த முற்படுகிறார் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். 18ஆவது அரசியமைப்புச் சட்டத் திருத்தத்துக்கு முன் இலங்கை அரசியலமைப்பில் ஜனாதிபதித் தேர்தல் பற்றி இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. 31 (2) மக்களினால் இருமுறை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட எவரும் அதன் பின் ஜனாதிபதி பதவிக்கு மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியற்றவராவார். இது அமெரிக்க அரசியல் யாப்பின் மாதிரியில் தயாரிக்கப்பட்டதாகும். அவர்களது யாப்பின்படி இருமுறை ஜனாதிபதியான ஒருவருக்கு மீண்டும் ஜனாதிபதி அபேட்சகராக முடியாது. ஆனால் 18ஆவது அரசியலமைப்பு திருத்தப்படி எத்தனை முறையும் போட்டியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மூன்று அரசமைப்புச் சட்டத்தின் 32ஆவது ஷரத்து பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளது. (1) அதன் (3) உபயாப்பு நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக பின்வரும் உபயாப்பு உட்படுத்தப்பட்டுள்ளது. (3) ஜனாதிபதி தமது பதவியின் அதிகாரப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பாராளுமன்றத்தில் பங்கு கொள்ள வேண்டும். இச்செயற்பாட்டின்போது வாக்களிக்கும் உரிமை தவிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ரிய சகல சலுகை மற்றும் அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு உரித்தாகுவதோடு பாராளுமன்றத்துக்கோ அங்குள்ள உறுப்பினர்களுக்கோ உரியசிறப்புரிமைகள் மீறப்பட்டால் அதற்கு பொறுப்புக்கூற வேண்டியதில்லை. 

அரசமைப்புச் சட்டத்தின் 31ஆவது ஷரத்து பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளது. 3 (அ) (ஆ) உபயாப்பின் படி தமது முதற் பதவிக் காலம் ஆரம்பித்து நான்கு வருடங்கள் கழிந்த பின் ஏதாவது சந்தர்ப்பத்தில் ஜனாதி பதித் தேர்தலை பிரகடனப்படுத்தலாம். ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின் உரிய காலத்துக்கு முன் ஜனாதிபதித் தேர்தலை அரசு நடத்துமாயின் அடுத்த சில மாதங்களில் இந்த அரசியல் சர்ச்சை நாட்டின் ஒரு முக்கிய விடயமாக அமையலாம். 

(நஸ்மீன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2