Published On: Tuesday, October 07, 2014
சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிக்க பெற்றோரும் ஒரு காரணமே
சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கெதிரான வன்முறை, கடத்தல், கொலை போன்ற கோரக் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்பதற்காக பல்வேறு ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வருவதுடன், எவ்வாறு இவற்றைத் தீர்ப்பது தொடர்பான கருத்துக்களையும் தெளிவுபடுத்தி வந்தாலும் கூட, நாளுக்கு நாள் அக்கோரக் கொடுமைகள் அதிகரிக்கின்றதே தவிர, இதற்கான முடிவுகளில் ஒரு சிறு பிடியைக் கூட எட்டமுடியாத நிலை நம் நாட்டு நாகரிகத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.
குறைந்தது வாரத்திற்கு மூன்று கற்பழிப்புச் செய்திகளோ, துஷ்பிரயோகச் செய்திகளோ ஊடகங்களை அலங்கரிக்கத்தான் செய்கின்றது. இதனை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்ற கருத்துக்கள் வெளியாகுமுன்னமே அடுத்த துஷ்பிரயோக நாடகம் அரங்கேற்றப்பட்டுவிடுகின்றது. உண்மையில் இதற்கெல்லாம் யார் தான் காரணம், என்ன தான் முடிவு என யோசித்து யோசித்து களைப்பெறுகிறதே தவிர, முடிவு கிடைத்தபாடில்லை.
கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் பதுளையில் 15 மாணவி தனது தாத்தாவினால் கர்ப்பமாக்கப்பட்டு ஆண் குழந்தையை பிரசவித்த சம்பவம் பதுளையை மட்டுமல்ல முழு இலங்கையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தாய், தந்தையரின் கண்காணிப்பில் பராமரிக்க வேண்டிய பெண் பிள்ளைகளை, கல்வி, பாதுகாப்பு, குடும்ப வறுமை, தொழிலின்மை போன்ற பொய்யான காரணங்களை முன்வைத்து பெற்றோர்கள் தமது பிள்ளைகளை குறிப்பாக பெண் பிள்ளைகளை பாட்டன், பாட்டிகளிடம் விட்டுச் செல்வதால் நடந்த கோரச் சம்பவமே இது.
இதேபோன்ற இன்னுமொரு சம்பவம் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ஒரு பகுதியில் இடம்பெற்றது. பாட்டியின் பாதுகாப்பில் விட்டுச் சென்ற பெண் குழந்தையை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் பாட்டி வல்லுறவுக் காரனிடம் ஒப்படைத்த சம்பவம் இது. அதேபோன்றே கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியாவில் தந்தையின் பராமரிப்பில் விட்டு தாய் வெளிநாடு செல்ல, தன் குழந்தையையே மனைவியாக்கிய கோரத் தந்தையின் கதையும் ஊடகங்களை அலங்கரித்தது. இவ்வாறு ஈனச் செயல்களை தொடர்ந்து கொண்டே போகலாம். இவற்றுக்கெல்லாம் காரணம் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்கள் தான்.
என்ன வறுமையாக இருந்தாலும், குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்கள், குடும்ப வறுமையென்றால், ஏதோ உள்ளூரில் தொழில் செய்து தமது குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, தமது குழந்தைகளை மற்றவர்களின் பாதுகாப்பில் விட்டுச் செல்வது அந்தக் குழந்தைகளின் வாழ்க்கையையே சிரழித்து விடுகின்றது. இது போன்றே பெண் பிள்ளைகளை கல்வி, தொழில் மற்றும் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக பெற்றோர் தமது பிள்ளைகளை உறவினர் வீடுகளில் தங்க வைத்துவிட்டு, குழந்தை படிக்கின்றது, அல்லது தொழில் புரிகின்றது, குழந்தைக்குப் பாதுகாப்பு கிடைத்துவிட்டது என்ற பூரிப்போடு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் “வேலியே பயிரை மேய்கின்ற நிலை’ ஏற்படும் போது எந்தக் குழந்தைக்கு பாதுகாப்புக் கிடைக்கின்றது என்ற சந்தோஷத்தில் இருந்தார்களோ அந்தக் குழந்தையின் வாழ்க்கையையே பாழாக்கிய கொடுமையை அவர்களே சந்திக்கின்றார்கள்.
இவ்வாறு தாம் பெற்ற பிள்ளைகளை மற்றவர்களின் பாதுகாப்பில் விட்டுச் செல்வது நியாயமா? பெண் பிள்ளைகள் பெரிதாக கற்கவில்லை, சிறந்ததொரு தொழிலைப் பெற்றுக் கொள்ள வில்லை என்பது பெரியதோர் விடயமல்ல. ஆனால் அவளது கற்பு பறிபோய்விட்டால், பெண் என்ற பெயருக்கே அர்த்தமற்றுப் போய்விடுமென்பதை அனைத்து பெற்றோர்களும் புரிந்து கொள்ளவேணடும்.
என்னதான் வறுமையாக இருந்தாலும் தனது பிள்ளைகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டுமே தவிர, மற்றவர்களின் பாதுகாப்பில் விட்டுவிடுவதோ, அல்லது வளர்ந்து விட்டார்கள். இனி அவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை என்ற எண்ணம் கொண்டு அவர்களை கண்காணிப்பதை விட்டு தூரமாகிவிடுவதோ சிறந்த பெற்றோருக்கு அழகான விடயமல்ல. பெற்றோர் என்றால் குழந்தையை பெற்றெடுப்பது முதல் அவளை வளர்த்து ஆளாக்கி, அவளது நடவடிகைகளை முழுமூச்சாகக் கண்காணித்து, நல்லது கெட்டதை எடுத்துக்கூறி அவளுக்கு சிறந்ததொரு துணையைப் பெற்றுக் கொடுப்பதோடு, அந்தத் துணையால் தனது பிள்ளைக்குக் கிடைக்கும் பாதுகாப்பு, கண்ணியம் தொடர்பிலும் அக்கறை கொள்ளவேண்டும்.
அது மட்டுமல்லாது தனது பிள்ளை கருவுற்றால் அவளுக்கான ஆலோசனைகளை வழங்கி சிறப்பாக பிள்ளையைப் பெற்றெடுக்க உதவுவதுடன், பாட்டன் பாட்டி என்ற உறவுக்குக் களங்கம் ஏற்படாதவாறு அந்தக் குழந்தைகளை சிறந்த முறையில் வளர்த்தெடுத்து இந்த சமுதாயத்திற்கு ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்தாலே பெற்றோர்கள் “சிறந்த பெற்றோர்கள்’ என்ற அந்தஸ்த்தை அடைவர். அதை விடுத்து ஏதோ ஒரு சில காரணங்களை முன்வைத்து தாம் பெற்ற பிள்ளைகளை கைவிடுவது அந்தக் குழந்தைகள் மனதால் தம் பெற்றோரை சபிக்கின்ற நிலைக்கு ஆளாக்கப்படுவார்களென்பதை புரிந்து நடந்து கொள்ளவேண்டும்.
இனிவரும் காலங்களிலாவது பெற்றோர்கள் தமது பிள்ளைகளை குறிப்பாக பெண் பிள்ளைகளை பாதுகாப்பதற்காக தம்மை முழுமையாக அர்ப்பணிப்பதினூடாக சிறந்த பெற்றோர்கள் என்ற கௌரவத்தைப் பெற்றுக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
