எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, October 18, 2014

பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அல்குர்ஆன் பிரதிகள் எதற்கு?

Print Friendly and PDF

ஒரு முனையில் பொதுபல சேனா தற்போதைய பேசுபொருளாக இருந்தாலும் மறுமுனையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மீதும் பலவகையான விமர்சனங்கள் அன்றாடம் முன்வைக்கப்பட்டே வருகின்றன. அந்தவகையில் அண்மையில் அதன் தலைமையகத்துக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அங்கு குர்ஆன் பிரதிகளை பெற்றுக்கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து பல எதிர்மறையான கருத்துகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணமுள்ளன.


உலமா சபையின் தலைமையகத்துக்குள் பலவந்தமாக நுழைந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அங்குள்ளவர்களுக்கு ஏசிவிட்டு குர்ஆன் பிரதிகளை கைப்பற்றிச் சென்றதாக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. அத்துடன் அல்குர்ஆனை அவர்கள் கைதுசெய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இவ்வாறான குற்றச்சாட்டுகளை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முற்றாக மறுத்துள்ளது.

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சிங்கள மற்றும் ஆங்கில மொழிமூலமான அல்குர்ஆன் பிரதிகளைக் கேட்டு உத்தியோகபூர்வ கடிதமொன்றை கொண்டுவந்து நேரடியாக கையளித்தனர். கைவசம் குறித்த குர்ஆன் பிரதிகள் இல்லாமையால் அவை கிடைத்தவுடன் அறிவிப்பதாக கூறினோம். கடிதம் கிடைத்து இரண்டு நாட்களின் பின்னர், குர்ஆன் பிரதிகளை பெற்றுக்கொண்டு செல்லுமாறு அவர்களுக்கு அறிவித்தோம். அதன்பேரிலேயே அவர்கள் வந்து குர்ஆன் பிரதிகளை எடுத்துக்கொண்டு சென்றனர்.

உலமா சபை காரியாலயத்துக்கு வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் எங்களுடன் தவறான முறையில் நடந்துகொள்ளவில்லை. அல்குர்ஆனை கேட்டு வருபவர்களுக்கு கொடுக்க மறுப்பது பொறுத்தமற்ற செயலனெக் கருதியே குறித்த குர்ஆன் பிரதிகளை வழங்கியதாக உலமாசபை தனது ஊடக அறிக்கையில் திட்டவட்டமாக சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளிவந்தமைக்கு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

ஆனால், "இரும்புக் கடையில் நாய்க்கு என்ன வேலை?" என்பதுபோல பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஏன் அல்குர்ஆன் பிரதிகளை வாங்கிச் சென்றனர் என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழவே செய்கிறது. இதற்கு பிரதான காரணங்களாக இரண்டை சுட்டிக்காட்டலாம். பொதுபல சேனா அல்குர்ஆன் குறித்து விவாதம் நடாத்துவதற்கு அழைப்பு விடுத்து வருகிறது. மற்றையது, பொதுபல சேனாவுக்கு ஆதரவளிக்கும் கோத்தாபய ராஜபக்ஷவின் கீழ் இயங்கும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரே குறித்த குர்ஆன் பிரதிகளை வாங்கிச் சென்றுள்ளனர்.

அல்குர்ஆன் சகருக்கும் பொருந்தக்கூடிய ஒரு நூல் என்றாலும், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஏன் குர்ஆன் பிரதிகளை ஏன் வாங்கிச் சென்றார்கள் என்பது குறித்த பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியோ அல்லது அதன் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷவோ தெளிவுபடுத்த வேண்டுமென மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார். 

அண்மைக்காலமாக பொதுபல சேனா அல்குர்ஆனை பகிரங்கமாக அவமதித்து வருகின்றனர். இதற்கெதிராக எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குர்ஆனை வைத்து என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் தொக்கி நிற்கவே செய்கிறது. 

அல்குர்ஆனை புலனாய்வு செய்ய வேண்டிய தேவை ப‌ங்கரவாத தடுப்பு பொலிஸாருக்கு இருக்குமேயானால், அதன் பிரதிகளை தாராளமாக இஸ்லாமிய புத்தக கடைகளில் பெற்றிருக்க முடியும். அதைவிடுத்து அதனை முஸ்லிம் பிரதிநிதிகளிடம் கடிதம் கொடுத்து கேட்டிருப்பதன் உள்நோக்கம் என்ன? இவ்விடயத்தினை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டில் இருந்தாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் வசித்துவரும் முஸ்லிம் சமூகத்தால் இதனை ஏற்றுக்கொள்ள‌ முடியாதென மேல் மகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.எம். பைரூஸ் தெரவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரது இச்செயலுக்கு ஜம்மியதுல் உலமா நியாயம் கற்பிக்க முயற்சி செய்துள்ளமை இவர்களின் செயற்பாடுகள் குறித்து முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு தெரிந்தவரை உலக வரலாற்றில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் உத்தியோகபூர்வமாக கடிதம் கொடுத்து அல்குர்ஆன் பிரதிகளை பெற்றுக்கொள்வது இதுவே முதல் தடவை என்று எம்.எஸ்.எம். பைரூஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜம்மியத்துல் உலமா சபைக்கு எதிராக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பயங்கரவாத தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டின் காரணமாகவே அல்குர்ஆன் பிரதிகள் பெறப்பட்டதாக தனியார் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டித்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத், இதுவரை எந்தவொரு இஸ்லாமிய அமைப்புக்கு எதிராக யாரிடமும் முறைப்பாடு செய்யவில்லை என்றும், அதற்கான தேவை எங்களுக்கு இல்லையெனவும் தெரிவித்துள்ளது.

உலமா சபை குர்ஆன் அடிப்படையில் இயங்கக்கூடியவர்கள் அல்ல என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறிய காரணத்தினாலேயே உலமா சபையின் குர்ஆன் பிரதிகளை பெற்றுக்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கூறியதாக மேற்கோள் காட்டியே குறித்த செய்தியை அப்பத்திரிகை பிரசுரித்திருந்தது.

பயங்கரவாத தடுப்பு பிரிவின்கீழ் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினர் சிறிது காலத்துக்கு முன்னர் 3 நாட்களாக விசாரிக்கப்பட்டனர். இதன்போது, தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் உலமா சபைக்கும் இடையிலான வித்தியாசம் குறித்து பொலிஸார் கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த தவ்ஹீத் ஜமாஅத், நாங்கள் குர்ஆன், ஹதீஸை மாத்திரம் அடிப்படை மூலாதாரங்களாக கொண்டு செயற்படுகிறோம். உலமா சபை உள்ளிட்ட ஏனைய அமைப்புகள் குர்ஆன், ஹதீஸுடன் வேறுசில மூலாதாரங்களையும் சேர்த்துவைத்துள்ளதாக பதிலளித்துள்ளனர்.

இந்த விசாரணையின்போது, உலமா சபை அல்குர்ஆனுக்கு எதிராக செயற்படுவதாக நாங்கள் எந்த இடத்திலும் கூறவில்லை. விசாரணைக்கு சென்ற நாங்கள் வாக்குமூலம் கொடுத்தோமே தவிர, எவ்வித முறைப்பாடுகளை செய்யவில்லை. இதனை வைத்து இஸ்லாமிய அறிவுக்கு அப்பால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கமளித்துள்ளதாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துல் றாசிக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அல்குர்ஆன் குறித்து விவாதிப்பதற்கு பொதுபல சேனா அறைகூவல் விடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த விவாதத்துக்கு ஜம்மியத்துல் உலமா சம்மதிக்குமானால், உலமா சபையின்கீழ் இணைந்துகொள்வதற்கு தயாராகவிருப்பதாக தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது. 

இனநல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு மேற்கொள்ளப்படும் சதித்திட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் புத்திஜீவிகள், உலமாக்களைக் கொண்ட குழுவொன்று செயற்பட்டு வருகின்றது. பெரும்பான்மை மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள தப்பபிப்பிராயங்களை களைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்வந்துள்ளனர். தேவையேற்படும் பட்சத்தில் விவாதங்களை நடாத்துவதற்கும் இக்குழு திட்டமிட்டுள்ளது. 

(பிறவ்ஸ் முஹம்மட்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2