எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, October 18, 2014

முஸ்லிம்களின் வோட்டுகள் சுயநலவாதிகளுக்கு வேட்டுகள்

Print Friendly and PDF

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பற்றற்ற முறையில் ஜனாதிபதித் தேர்தல் சமிக்ஞையை விடுத்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் அதிரத் தொடங்கியிருக்கிறது. உடனடி ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீர்மானத்தை அரசாங்கத்திலிருக்கும் பெருந்தொகையான அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வன்மையாகக் கண்டிக்கும் ஒரு நிலை தற்போது உருவாகியிருக்கிறது. 


ஊவா தேர்தல் முடிவு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வலுத்துவரும் மூன்றாவது பதவிக்காலம் தொடர்பான சர்ச்சை, இனவாத செயற்பாடுகள் போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இவர்கள் இத்தேர்தல் தொடர்பில் தமது விசனத்தை வெளியிட்டு வருவதாக அறிய முடிகின்றது. 

ஜனாதிபதித் தேர்தலொன்றுக்குச் செல்லும் தீர்மானத்தை உடனடியாகக் கைவிட்டு அதற்குப் பதிலாக பாராளுமன்ற ஆட்சி முறையொன்றுக்கு செல்வதற்கு அவசியமான புனரமைப்பொன்றை மேற்கொள்ளாது போனால் எந்தவித முன்னறிவித்தலுமின்றி அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக ஆளும் கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அரசாங்கத் தரப்பில் இருந்து கொண்டு அரசாங்கத்துக்கெதிராக போராடுவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40ஐ அண்மித்துள்ளதாகவும் உள்ளக தகவல்களிலிருந்து அறியக் கூடியதாகவுள்ளது. 

பாப்பாண்டவரை சந்திக்கச் செல்வதற்கு முன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிரேஷ்ட அமைச்சர்களான டியுகுணசேகர, திஸ்ஸ விதாரண மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரோடு நீண்ட நேரம் கலந்துரையாடியிருக்கிறார். அந்தக் கலந்துரையாடலின்போது டியுகுணசேகர புள்ளி விபரங்களை முன்வைத்தவாறு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கிறார். இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்வது ஜனாதிபதிக்கு இலகுவான காரியமல்லவென்பதனை அவர் ஜனாதிபதிக்கு வலியுறுத்திக் கூறியிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு செல்லாது பாராளுமன்ற ஆட்சி முறையொன்றினை கட்டியெழுப்பக் கூடிய பின்புலமொன்றை உருவாக்கி அதற்கேற்றாற் போல் பாராளுமன்ற தேர்தலொன்றுக்குச் செல்லுமாறு அமைச்சர் டியுகுணசேகர ஜனாதிபதியை கோரியிருக்கிறார்.

இதற்கிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளோடு கலந்தாலோசிக்காமல் உடனடி ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு செல்ல முற்படுவதால் எதிர்பார்ப்பதென்ன என்ற கேள்வியை ஜனாதிபதியிடம் தொடுத்திருக்கிறார். இவ்வாறான இரண்டுங்கெட்டான் நிலைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கமும் தள்ளப்பட்டிருக்கிறது. 

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தோடு மிக நெருக்கமாக ஒட்டி உறவாடி வந்த ஜாதிக ஹெல உருமயவும் அண்மைக் காலமாக ஜனாதிபதியோடும், அரசாங்கத்தோடும் முரண்பட்ட நிலையிலே இருந்து வருகிறது. அண்மையில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களான அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷவும், டலஸ் அழகப்பெருமவும், ஜாதிக ஹெல உருமய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரைச் சந்தித்து அரசுடனிருக்கும் கருத்து முரண்பாடுகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். ஆனால் அவரோ அது தொடர்பில் இவர்களுக்கு காரசாரமான பதிலொன்றையே வழங்கியிருக்கிறார். அரசாங்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மனச்சாட்சிக்கு விரோதமான முறையில் தமது கட்சி செயற்பட்டிருக்கிறது. ஆனால் நாம் இனியும் ஏமாற ஆயத்தமானவர்களல்லர். நாம் வேண்டியிருக்கும் புனரமைப்பை மேற்கொள்ள முற்படாமலிருக்குமானால் தாம் அரசாங்கத்தை விட்டும் வெளியேறப் போவதாகவும் சிவப்பு சமிக்ஞை காட்டியிருக்கிறார் ரதன தேரர்.

இவ்வாறானதொரு நிலையில், எதிர்பார்த்த தினங்களில் அல்லாவிட்டாலும் எந்தவொரு நிலையிலும் ஜனாதிபதித் தேர்தலோ, பொதுத் தேர்தலொன்றோ இடம்பெறக்கூடிய சாத்தியக் கூறுகளே பெரும்பாலும் காணப்படுகின்றன. 

ஆனால் அரசாங்கத்திற்குள் பதுங்கியிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் இன்னும் நித்திரையிலிருந்து விழித்தெழுந்தது போன்று தெரியவில்லை. அவர்கள் இன்னும் நித்திரையில் ஆழ்ந்துள்ளதாகவே எண்ண வேண்டியிருக்கின்றது. இவர்கள் பொது வேட்பாளர் தொடர்பிலும், பொது முன்னணி தொடர்பிலுமே அவர்களது அவதானத்தை செலுத்தி வருகிறார்கள்.எமக்கு பொது வேட்பாளரோ பொது முன்னணியோ முக்கியமல்ல. ஆளப் போகின்றவர் மஹிந்த ராஜபக்ஷவா, ரணில் விக்கிரமசிங்கவா, பொது வேட்பாளரா என்பதும் எமக்கு பொருட்டல்ல. 

ஆட்சியமைக்கப் போகின்றவரை அதிரச் செய்யக்கூடிய  ஐக்கிய, பலமான அரசியல் கட்டமைப்பொன்றை உருவாக்குவதே இன்றைய காலத்தின் தேவையாகும். பூனைக்கு யார் மணி கட்டுவதென்ற குறுகிய எண்ணத்தை கைவிட்டு அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து இறுக்கமான கட்டமைப்பொன்றை உருவாக்க உடனடியாக முன்வரவேண்டும். அவற்றில் உள்ளடக்கப்படவேண்டிய ஆக்கபூர்வமான பல விடயங்கள் இருக்கின்றன. அவை தொடர்பாக புத்திஜீவிகள், நீதித்துறை சார்ந்தோர், சமூக நிறுவனங்களின் தலைவர்கள், மார்க்க அறிஞர்களை உள்ளடக்கிய கருத்தாடலொன்றுக்கு வழிவகுக்க வேண்டும். இதற்கு சமூக நலனில் கரிசனையோடு செயல்படுகின்ற முஸ்லிம் கவுன்சில் உட்பட சமூக நிறுவனங்கள் வழிசமைக்க வேண்டும். காலம் கடந்த பின் ஞானம் பிறக்கும் தலைவர்களாக எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இருக்கக் கூடாது. 

பேருவளை, தர்காநகர் சம்பவங்கள் இந்த நாட்டு முஸ்லிம் தலைவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பல பாடங்களை போதித்திருக்கிறது. அதனால் பல்வேறுபட்ட உரிமைகளைக் கூட நாம் இழந்து விட்டோம். இருவரது கால்கள் பலியெடுக்கப்பட்டு நிரந்தர அங்கவீனராக்கப்பட்டுள்ளார்கள். இருவரது உயிர்கள் பலியெடுக்கப்பட்டிருக்கிறது. எந்த நோக்கங்களுக்காக இவ்விரு இளைஞர்களும் தமது உயிரை பலிகொடுத்தார்களோ அந்த நோக்கம் தொடர்பில் முஸ்லிம் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும். நீதித்துறை மறுசீரமைக்கப்படவேண்டுமென்ற செய்தியை பேருவளைச் சம்பவங்கள் விடுத்துச் சென்றிருக்கிறது. 

நீண்ட காலமொன்றுக்கு அரசாங்கமொன்றை ஆட்சியிலிருத்தக் கூடிய தேர்தலொன்றை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகிறது. தேர்தல்கள் தொடர்பில் கடந்த காலங்களைப் போலன்றி முஸ்லிம் வாக்காளர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். இதனை நடந்து முடிந்த ஊவாத் தேர்தலில் முஸ்லிம்கள் ஒப்புவித்துக் காட்டியிருக்கிறார்கள். 

கடந்த காலங்களில் மரத்துக்கு மரம் தாவும் குரங்குகளைப் போன்று குரங்குச் சேட்டை விடும் முஸ்லிம் தலைவர்கள் அவ்வப்போது அவர்களது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு அரசியல் மதமல்ல எனக் கூறினார்கள். ஆனால் முஸ்லிம் வாக்காளர்களோ ஊவாவில் அதனை செயலில் காட்டியிருக்கிறார்கள். 

மதவிரோதிகள், கொலைஞர்கள் என முஸ்லிம் மூதாதையர்களால் முத்திரை குத்தப்பட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியை நோக்கியும் முஸ்லிம் சமூகம் அணிதிரண்டிருக்கிறது. இதனை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நன்கு புரிந்து கொள்ளவேண்டும். மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃபின் காலத்தில் முஸ்லிம்களுக்கென்று பலமான அரசியல் கட்டமைப்பொன்று இருந்தது. அதற்கான ஆளுமையும் துணிவும் கூட அவரிடமிருந்தது. அப்போதிருந்த கட்சி முக்கியஸ்தர்கள் தலைவருக்கு மதிப்பளித்து பெட்டிப் பாம்பாகியிருந்தார்கள். ஆனால், இப்போது அவ்வாறான சூழல் இருப்பதாகத் தெரியவில்லை. 

கலிமா, தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் போன்ற ஐந்து விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட முடியுமென கதையளக்கும் சில முஸ்லிம் தலைவர்கள் அவர்களது வெட்டிப் பேச்சுக்களையும் வீராப்பு வார்த்தைகளையும் ஒரு புறமாக வைத்துவிட்டு சமூகத்தை அணைத்து, இணைத்து செல்லக்கூடிய ஆக்கபூர்வமான முன்முயற்சிகளில் ஈடுபட முயற்சிக்க வேண்டும். எது எவ்வாறான போதிலும் எதிர்வரும் தேர்தல்களின்  போது முஸ்லிம்கள் பிரயோகிக்கவுள்ள வோட்டுகள் இனவாதம் கலந்த அரசியல் தலைவர்களின் எச்ச சொச்சங்களுக்கும், எலும்புத் துண்டுகளுக்கும் சோரம் போகின்ற சுயநல அரசியல்வாதிகளின் அரசியல் முகவரிக்கும், இருப்புக்கும் விடுக்கப்படும் வேட்டுகளாகவும் கூடும் என்பதை சம்பந்தப்பட்ட தலைவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். 

(எம்.எச்.அமீர் ஹம்ஸா)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2