Published On: Saturday, October 18, 2014
பொதுபல சேனா + 969 கூட்டு: இனவாதத்தின் பெருக்கல்
* மியன்மாரின் 969 இயக்கம் என்பது பெளத்தம், தர்மம், சங்கமம் என்பதை குறிக்கின்றது. 2013 மார்ச் 20ஆம் திகதி வாய்த்தகராறில் ஆரம்பமான சிறியதொரு கலவரத்தை பூதாகரமாக்கி இந்த அமைப்பு தலைமையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து சென்றனர். பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர்.
* பொதுபல சேனா என்பது பெளத்த அதிகாரப் படை என்று பொருள்படும். பொதுபல சேனாவின் கீழ் பல்வேறு இனவாத அமைப்புகள் வலைப்பின்னலாக இயங்குகின்றன. இராவண பலகாய (இராவணன் படை), மகாசென் 969 போன்ற அமைப்புகள் பிரபல்யமானவை. மகாசென் 969 என்ற அமைப்பு வன்முறைக்காகவே தயார்படுத்தப்பட்ட ஒரு அமைப்பென கருதப்படுகிறது.
பிரபல்யமான சர்வதேச சஞ்சிகையான டைம்ஸ் சஞ்சிகையினால் பயங்கரவாதியென சுட்டிக்காட்டப்பட்ட மியன்மார் 969 இயக்கத்தின் தலைவரான அஸின் விராது தேரர் இலங்கையின் கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவுடன் தேனிலைவைக் கொண்டாடிவிட்டுச் சென்றிருப்பது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மியன்மாரில் பெளத்த தேரர்களை ஒன்றுதிரட்டி மியன்மாரை ஒரு பெளத்த நாடாக பிரகனம் செய்து, அங்குள்ள முஸ்லிம்களை இனவழிப்பு செய்த ஒரு கொலைகாரர் இலங்கைக்கு ராஜமரியாதையுடன் அழைத்து வரப்பட்டு ஒரு பிரமாண்டமான கூட்டத்தை நடத்தியுள்ளார். இதற்கு இலங்கை அரசாங்கம் அனுசரைண வழங்கியிருப்பது முஸ்லிம்களின் இருப்பை மேலும் கிலிகொள்ளச் செய்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் தப்லீக் ஜமாஅத்தினர் இலங்கையில் மதப்பிரசாரம் செய்வததாகக்கூறி வெளிநாட்டு சமயத் தலைவர்கள் யாரும் நாட்டுக்குள் பிரசாரம் செய்யக்கூடாதென தடைவிதிக்கப்பட்டது. ஆனால், பெளத்தம் ஒரு சமயம் இல்லை என்றோ அல்லது அஸின் விராது தேரர் ஒரு சமயத் தலைவர் இல்லையென்று கருதியோ ஒருவேளை அரசாங்கம் இவருக்கு விசா வழங்கியிருக்கலாம்.
தீபெத் நாட்டின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவை ஹெலஉறுமய இலங்கைக்கு அழைத்துவர முயற்சித்தபோது இலங்கை அரசாங்கம் அவருக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. இவர் பயங்கரவாதியென யாராலும் அடையாளப்படுத்தப்படவில்லை. ஆனால், 969 அமைப்பின் தேரரான அஸின் விராது தேரர் சர்வதேச பயங்கரவாதிகளில் பட்டியலில் உள்ளவர். பொதுபல சேனாவுடனான தேனிலவுக்கு இவருக்கு விசா வழங்கி, பலத்த பாதுகாப்புடன் வரவவேற்றதன் மூலம் இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு அனுமதி வழங்குகின்றதா என்ற கேள்வி முஸ்லிம்கள் மாத்திரமின்றி அனைவர் மனதிலும் எழுகின்ற பொதுவானதொரு கேள்வியாகும்.
வெளிநாடுகளிலும், பொதுக்கூட்டங்களிலும் முஸ்லிம் மக்கள் எனது நண்பர்கள் என்று ஜனாதிபதி கூறிவருகின்றார். மறுமுனையில் முஸ்லிம்களுக்கு எதிரான இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இனியும் நடைபெறத்தான் போகின்றன. பொதுபல சேனாவை ஆசீர்வதித்துக்கொண்டு அரசாங்கம் தனது வாக்குவங்கியை பாதுகாத்துக்கொள்ளவே முயற்சிக்கின்றது. உதட்டளவில் கூறினாலும் முஸ்லிம் மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என்பதை வெளிப்படையான உண்மை.
கடந்த மார்ச் மாதம் 04ஆம் திகதி மியன்மாருக்குச் சென்ற பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரர் அஸின் விராது தேரரை சந்தித்துள்ளார். இதன்போது ஞானசார தேரருக்கு பிறந்தாள் பரிசும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின் பின்னர் பொதுபல சேனாவின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. இதன் பின்னணியிலேய ஜூன் மாத்தில் அளுத்கம, தர்காநகர் இனக்கலவரங்கள் அரங்கேற்றப்பட்டன.
அஸின் விராது தேரர் தனது கன்னி வெளிநாட்டுப் பயணயமாக 4 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பை வந்தடைந்தார். கறுப்பு உடை தரித்த விசேட பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட விராது தேரர், அன்று பிற்பகல் சுகதாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற "சங்க சமுலுவா" எனப்படும் மகாசங்க மாநாட்டில் விசேட அதிதியாக கலந்துகொண்டு 8 நிமிடங்கள் உரையாற்றினார்.
இம்மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிக்குகள் சுமார் 5 ஆயிரம் பேரும், ஆயிரக்கணக்கான பெளத்த மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த உரையின்போது 969 அமைப்பும், பொதுபல சேனாவும் இணைந்து பெளத்தத்தை பாதுகாப்பதற்காக இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார். உலகளாவிய ரீதியில் செயற்பட்டுவரும் முஸ்லிம் ஜிஹாத் தீவிரவாதிகளிடமிருந்து அஹிம்சாவாதியான பெளத்தர்களை பாதுகாப்பதற்காக இரு அமைப்புகளும் இனிவரும் காலங்களில் இணைந்து செயலாற்றவுள்ளதாகவும், தனக்கு விசா வழங்கியமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அஸின் விராது தேரர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரர் காரசாரமான உரையொன்றை நிகழ்த்தினார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பெளத்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தனது அமைப்பு செயற்படும். ஷரீஆ வங்கிமுறைக்கு தடைவிதிக்க வேண்டும். அத்துடன் அடிப்படைவாத அமைப்புகளான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, தவ்ஹீத் ஜமாஅத், சூரா சபை, முஸ்லிம் கவுன்சில் போன்ற அமைப்புகளை தடைசெய்யவேண்டும் என்று ஞானாசார தேரர் தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம் உரிமைகளுக்காக குரல்கொடுத்துவரும் முஸ்லிம் கவுன்சில் 969 அமைப்பின் தலைவருக்கு விசா வழங்கக்கூடாதென ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. ஆனால், குறித்த கடிதத்தை அனுப்பிய அமைப்பின் கணக்கை தீர்க்கப்போவதாக ஞானசார தேரர் குறித்த கூட்டத்தில் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.
ஞானசார தேரர் தங்களது அமைப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முஸ்லிம் கவுன்சில் மீண்டும் ஜனாதிபதிக்கு இன்னுமொரு கடிதத்தை அனுப்பியுள்ளது. பொதுபல சேனாவுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுத்ததில்லை. இனியும் எடுக்கப்போவதில்லை. ஆகவே, இந்தக் கடிதங்கள் குப்பைத்தொட்டிகளைத்தான் நிரப்பப்போகின்றன என்பது வெள்ளிடைமலை.
அளுத்கம, தகர்காநகர் கலவரத்தை தமது அமைப்புடன் தொடர்புபடுத்தி இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டதாகவும், அதனை சபையின் காண்பித்த ஞானசார தேரர் இதற்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்தார்.
இலங்கையின் தேசியக் கொடியில் பல மதங்களில் அடையாளங்கள் இருப்பதானால், அதனை முழு சிங்கள தேசத்தை பிரதிபலிக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டுமென பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டிலந்த விதானகே மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.
இலங்கை என்ற பெயரை அழித்துவிட்டு "சிங்ஹலே" என்று மாற்றவேண்டும். அத்துடன் இந்நாட்டில் சிங்கள இனம் மாத்திரமே தேசிய இனமாக இருக்கவேண்டும். இங்கு வாழும் பெளத்தர்கள் தவிர்ந்த ஏனையவர்களை சிங்கள தமிழர்கள், சிங்கள முஸ்லிம்கள், சிங்கள கிறிஸ்தவர்கள் என்றே அழைக்கப்படவேண்டும். அத்துடன் இங்கிருப்பவர்களை சிங்கள மொழியைக் கற்பது அனைவருக்கும் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்று டிலந்த விதானகே மேலும் தெரிவித்தார்.
பொதுபல சேனா அமைப்பு சரியான பாதையில் பயணிக்கவில்லை என்றும், தான் அந்த அமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாகவும் ஊடகங்களுக்கு அறிக்கை விட்ட அதன் தலைவர் கிரம விமலஜோதி, இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உலமா சபையை கடுமையாக சாடினார். சில வருடங்களுக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு பயங்கரவாத அமைப்பாகுமென விமலஜோதி தேரர் தெரிவித்தார். இதேவேளை, பொதுபல சேனா ஒரு பயங்கரவாத அமைப்பென கூறப்படுவதில்லை எவ்வித உண்மையும் இல்லையென மறுத்துள்ளார்.
தங்களது அமைப்பு குறித்து தெரிவிக்கப்பட்ட விசமப் பிரசாரத்துக்கு பதலளிக்கும் வகையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது. பொதுபல சேனா போன்று மதநிந்தனையில் ஈடுபடும் எந்தவொரு அமைப்பும் இல்லை. 1500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட, உலகில் 162 கோடிக்கு மேற்பட்ட மக்களால் உயிரோட்டமாக பின்பற்றப்படும் இஸ்லாத்தை கொச்சைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், உலமா சபை 90 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்துக்கு முன்னரும், பின்னரும் நாட்டுக்கு பல பங்களிப்புகளை செய்துவரும் உலமாசபை மீதான பொதுபல சேனாவின் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்களாக இலங்கையில் தங்கியிருந்த அஸின் விராது தேரர் பல்வேறு பெளத்த நிகழ்வுகளில் கலந்துகொண்டார். செவ்வாய்க்கிழமை பொதுபல சேனா தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் 969 அமைப்புக்கும் பொதுபல சேனாவுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தீவிரவாதமற்ற ஆசியப் பிராந்தியமொன்றை உருவாக்குவதற்காக ஞானசார தேரரும், விராது தேரரும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
புத்தசாசனத்தை பாதுகாப்பதற்கும், சமாதானத்தை விரும்பும் ஏனைய மதத்தினரையும் ஒன்றுசேர்த்து புதிய குழுவொன்றை நிறுவுவதற்கு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு அஸின் விராது தேரர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அழைப்பு விடுத்தார். தாங்கள் இஸ்லாத்துக்கோ ஏனைய மதங்களுக்கோ எதிரானவர்கள் அல்ல. நாங்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள். புத்த சமயத்தைப் காப்பாற்றுவதற்காக நாங்கள் எதையும் செய்வோம் என்று விராது தேரர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது மியன்மாரில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதலளித்த அஸின் விராது தேரர், குறித்த கலவரம் முஸ்லிம்களுக்காக ஏற்படுத்தப்பட்டதல்ல. கலவரத்தின் முடிவுகளின் பின்னணியில் இராணுவத்தின் தலையீடே இருந்தாகவும் தெரிவித்தார்.
பொதுபல சேனாவும் 969 அமைப்பும் இணைந்து செயற்படவுள்ளமை மற்றும் கொழும்பில் நடைபெற்ற மாநாடு குறித்து சவூதி கெஸட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஏற்கனவே முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் 969 அமைப்பு பற்றி கவனயீனமாக இருப்பதாகவும், இதனால் முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுபல சேனாவுடன் இந்து மன்றமும் இணைந்து தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. அதன் தலைவர் அருணாகாந்த் மன்றத்தின் சார்பாக அதன் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றி வருகின்றார்.
புத்தரின் பெயரால் தமிழர்களையும், முஸ்லிம்களையும் அடிமைப்படுத்துவதற்கு பொதுபல சேனா முயற்சித்து வருவதாக சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம்சாட்டி வருகிறார். நாட்டின் தேசியக் கொடியை மாற்றவேண்டும், நாட்டின் பெயரை மாற்றவேண்டுமென இதற்கு முன்னரும் சிங்கள கடும்போக்காளர்கள் கூறிவந்தனர். ஆனால், யாரும் வெற்றிபெறவில்லை. பொதுபல சேனாவும் விராது தேரரும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள். இவர்கள் ஒரே மேடையில் கைகோர்த்தது ஆச்சரியமில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எதிரிக்கு எதிரி நண்பன்போல, சர்வதேச தீவிரவாத அமைப்பான மியன்மார் 969 அமைப்பும், இலங்கையில் இயங்கும் கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவும் தற்போது பலமாக கைகோர்த்துள்ளன. ஆனால், நமது முஸ்லிம் தலைமைகளோ தேர்தலுக்காக மாத்திரம் ஒன்றுசேர்கிறார்கள். அதன்பின்னர் கலைந்துவிடுகின்றனர். சம்பிரதாயத்துக்காக அளுக்கொரு கண்டன அறிக்கைளை விடுகின்றனர். இதுவே நாம் மலைபோல் நம்பியிருக்கும் முஸ்லிம் தலைமைகள் காலாகாலமாக செய்துவருகின்ற தொண்டு.
மறுபக்கம் ஆளுக்கொரு கொள்கைகளை வகுத்துக்கொண்டு சமயத் தலைவர்கள் சிதறிக்கிடக்கின்றனர். பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்கள் முஸ்லிம் என்றுதான் குறிவைக்கின்றனர். ஆனால், நாம்தான் ஒவ்வொரு பிரிவாக நம்மை இன்னும் பிரித்துக் காட்டிக்கொண்டிருக்கிறோம். முஸ்லிம் உம்மத்தை பாதுகாப்பதற்காகவாவது இவர்கள் ஒன்றுபடவேண்டும். ஒருமித்த குரலில் சமூகத்தைப் பாதுகாக்க அனைவரும் முன்வரவேண்டும்.
5 ஆயிரம் தேரர்கள் இங்கு வந்திருக்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் கிராமத்திலுள்ள விஹாரைகளில் உபதேசம் செய்து ஆயிரம் பௌத்தர்களை இணைக்கவேண்டும். இவ்வாறு ஒவ்வொருவரும் ஆயிரம் பேரை இணைத்துக்கொண்டால், எமது இயக்கத்தில் 50 இலட்சம் பேர் இணைந்துகொள்வார்கள். எஞ்சியுள்ள 15 இலட்சத்துக்கு வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு சென்றால் 65 இலட்சம் மக்கள் சக்தி எமது கையில் இருக்கும். இதன்மூலம் நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி பொதுபல சேனாவிடம் இருக்கும். ஜனாதிபதியை தீர்மானிக்கும் பொறுப்பு பெளத்தர்களின் கைக்கு வந்து சேருமென்று ஞானாசார தேரர் மாநாட்டில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஊவா தேர்தலில் சரிவைக் கண்டுள்ள அரசாங்கம், சிறுபான்மையினரின் வாக்குகளை நம்பியிருக்காது ஒட்டுமொத்த சிங்கள வாக்குகளையும் மொத்தமாக சுருட்டிக்கொள்வதற்கு பொதுபல சேனாவை கேடயமாகப் பயன்படுத்துகின்றதா என்ற கேள்வியும் எழுகின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டும் இரு அமைப்புகள் ஒன்றுசேர்வதை அனுமதி வழங்கியதன் பின்னணியும் இதிலேயே தங்கியுள்ளது. அரசின் பாதுகாவலர்களாக பெளத்தர்களையே இன்னும் நம்பியிருக்கின்றது.
பொதுமக்களாகிய நாங்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்குளை கவனமாக கையாளவேண்டும். நாட்டில் சமாதானத்தையும், இன நல்லிணக்கத்தையும் ஆதரிக்கும் ஒரு தலைவரை தெரிவுசெய்யவேண்டிய கடமைப்பாட்டில் இருந்துவருகிறோம். அரசின் அருவருடிகளாக இருந்துகொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளென தங்களை அளையாடப்படுத்திக் கொள்பவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு ஏமாந்துவிடமால் உங்கள் பொன்னான வாக்குளை சமூகத்தின் நலனுக்காகப் பயன்படுத்துங்கள்.
(பிறவ்ஸ் முஹம்மட்)
