Published On: Monday, October 20, 2014
அடை மழையினால் ஐந்து மாவட்டங்களில் 2500 பேர் பாதிப்பு
நாட்டின் பல பாகங்களிலும் பெய்துவரும் அடை மழையினால் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2500க்கு மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத்லால் குமார தெரிவித்தார்.
மாத்தறை, குருணாகலை, காலி, புத்தளம், களுத்துறை ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் கடும் மழை காரணமாக சுமார் 700 குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக பெய்து வரும் அடைமழையினால் காலி மாவட்டமே பெரியளவில் பாதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை கடுங்காற்று காரணமாக 16 வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன. மாத்தறை நில் வளாகங்கை, காலி கின்கங்கை களுத்துறை மாவட்டத்திலுள்ள களு கங்கை ஆகியவற்றின் நீர்மட்டங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதனால் அதனையண்டிய பகுதிகளில் வாழ்வோர் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
புதிய தெதுறு ஓய நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக எட்டு வான் கதவுகள் திறக்கப்பட்டும் பிங்கிரிய மற்றும் சிலாபத்தில் தாழ் நில பிரதேசங்களில் வாழ்வோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் நேற்று முன்தினம் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். எனினும் நேற்று முதல் அப்பகுதியில் கிடைத்த மழையினளவு குறைவடைந்துள் ளமையால் நிலைமை வழமைக்கு திரும்பியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
அடை மழை காரணமாக குருநாகலை மாவட்டத்தில் 144 குடும்பங்களைச் சேர்ந்த 550 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 131 குடும்பங்களைச் சேர்ந்த 329 பேரும் காலி மாவட்டத்தில் 372 குடும்பங்களைச் சேர்ந்த 1601 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை கடந்த 42 மணித்தியாலயங்களுக்குள் வவுனியா மாவட்டத்திலேயே வீழ்ச்சி 106.5 மில்லி மீற்றர் ஆகக்கூடிய மழை பெய்திருப்பதாக வானிலை அதிகாரி லக்ஷ்மி லத்தீப் தெரிவித்தார். வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகவே அடை மழைபெய்து வந்ததாகவும் இந்த குழப்ப நிலை தற்போது விலகிச் சென்றிருப்பதனால் அடை மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
எனினும் தற்போது நிலவும் இடைப்பருவப் பெயர்ச்சி மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் ஓரளவு மழையை எதிர்பார்க்கலாமெனவும் அவர் குறிப்பிட்டார்.
