Published On: Sunday, October 19, 2014
யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலை அண்டிய பகுதிகளில் மீன் மழை
யாழ்ப்பாணம் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலை அண்டிய பகுதிகளில் மழையுடன் மீன்கள் வீழ்ந்ததாக வீரமாகாளி அம்மன் கோவிலின் பிரதமகுரு எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை கோவிலை திறப்பதற்காக வந்தபோது கோவிலில் தேங்கி நின்ற மழை நீரில் அசைவு தெரிந்ததால் அதனை அவதானித்ததாகவும் அதன்போது மீன்கள் தென்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கோவில் பகுதியை சுற்றிப் பார்த்தபோது கோயில் தேர் நிறுத்தி இருந்த கட்டடத்திற்கு அருகில் 30 தொடக்கம் 40 மீன்கள் வரை தென்பட்டதாக வீரமாகாளி அம்மன் கோவிலின் பிரதம குரு மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தென்பட்ட மீன்களில் சிலவற்றை ஆலய வழிபாட்டுக்கு வந்த மக்கள் எடுத்துச் சென்றிருந்ததாக தெரிவித்த வீரமாகாளி அம்மன் கோவிலின் பிரதம குரு ஆலய சூழலில் தென்பட்ட மீன்கள் மழை நீருடன் வீழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக மேலும் தெரிவித்துள்ளார்.
(பாறுக் சிகான்)
