Published On: Sunday, July 26, 2015
ஐ.எஸ். அமைப்பில் இணைந்துகொண்ட இரண்டாவது இலங்கையர் (EXCLUSIVE)
ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ள இரண்டாவது இலங்கையர் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சிலோன் டுடே பத்திரிகை இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
தௌஹீர் அஹமட் தாஜூதீன் என்பவரே ஐ.எஸ். அமைப்பில் இணைந்துகொண்டு ஷிரியாவில் போராடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், கடந்த 12ஆம் திகதி ஷிரியாவில் கொல்லப்பட்ட இலங்கையரான முஹம்மத் நிலாமின் மைத்துனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஹம்மத் நிலாம் கண்டி கலேவலையை சேர்ந்தவர். இந்நிலையில் தற்போது கண்டறியப்பட்டுள்ள இரண்டாவது இலங்கையரும் கண்டி அலதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஹம்மத் நிலாம் ஷிரியாவில் கொல்லப்பட்டதாக அஹமட் தாஜூதீனே என்பவரே தனது பேஸ்புக்கில் செய்தி வெளியிட்டிருந்தார். அவரின் பேஸ்புக் தகவல்களை பார்த்தபோது அவர் மலேஷியாவில் வசிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஷிரியாவில் இடம்பெற்ற உண்மையை அறிந்து கொள்வதற்காக வினவியபோது, அவர் தமது முகநூலில் இருந்து விலகியதுடன், நண்பர்களின் கணக்குகளையும் அழித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொல்லப்பட்ட முஹம்மத் நிலாமின் குடும்பத்தினர் மீது புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நிலாமின் குடும்பத்தினர் ஏற்கனவே வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையிலேயே தற்போது ஐ.எஸ். அமைப்பின் இரண்டாவது போராளி பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
