Published On: Monday, July 27, 2015
அமைச்சர் ரிஷாட் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் மீது கல் வீச்சு
அட்டாளைச்சேனை ஏ.ஆர்.எம்.மில் பிரதான வீதியின் அருகில் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில் சிலர் கூச்சலிட்டு கல்வீச்சு நடாத்தியதால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றதால் தேர்தல் பிரசாரக் கூட்டம் சற்று நேரம் தடைப்பட்டதுடன் பதற்றமமானதொரு நிலையும் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பாதுகாப்பு கடமையில் இருந்த அக்கரைப்பற்று பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்ந்தும் தனது உரையை தொடர்ந்தார்.
அங்கு அவர் உரையாற்றுகையில்,
காடைத்தனத்தின் மூலம் கல்லெறிந்து கூச்சலிட்டு கூட்டத்தை குழப்புவதனால் முஸ்லிம் காங்கிரஸ் காரர்களின் வங்குரோத்து அரசியலை இங்கு காட்ட முனைகின்றனர். இவர்கள் தங்களின் பழைய நிலைமைகளை மறந்துவிட்டு செயற்படுகின்றனர். இவர்கள் நினைப்பதுபோல் இனியும் மக்களை ஏமாற்ற நினைக்க முடியாது. இப்போ மக்கள் நல்ல தெளிவுடன் இருக்கின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் காரர்களின் எந்த ஏமாற்று வித்தைகளும் ஒரு போதும் மக்களிடத்தில் பலிக்கப் போவதில்லை. மக்களை உணர்ச்சியூட்டி பசப்பு வார்த்தைகளைப் பேசி முஸ்லிம் காங்கிரஸ் மக்களை தவறான பாதையில் கொண்டு சென்று அரசியல் செய்தகாலம் மலையேறிவிட்டது.
இன்று மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் உண்மை நிலையை உணரத்தொடங்கியுள்ளனர். இதனால் அம்பாறை மாவட்டம் பாரிய மாற்றம் கண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் மக்கள் அலை அலையாக வந்து கொண்டிருப்பதை பொறுக்க முடியாதவர்களே இவ்வாறு செய்து வருகின்றனர் என்றார்.
அபு அலா -
