Published On: Tuesday, August 11, 2015
மாணவர்களுக்கான 05 வது பற்சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பாடசாலை மாணவர்களுக்கான சகல வசதிகளையும் கொண்ட ஐந்தாவது பற்சிகிச்சை நிலையம் அட்டாளைச்சேனை அல் - முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் திறந்துவைக்கப்பட்டது.
பாடசாலையின் பிரதி அதிபர் ஐ.எம்.பாஹிம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்கடர் ஏ.எல்.அலாவுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மற்றும் அதிபர் எம்.ஐ.எம்.அப்துல் சலாம், மாவட்ட பற்சிகிச்சை வைத்திய நிபுணர் ஏ.எல்.லத்தீப், வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம், சுகாதார வைத்திய அதிகாரி பறூஸா நக்பர், பிரதி அதிபர் எம்.எச்.எம்.றஸ்மி மற்றும் பல்வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பதினைந்து இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இந்த பற்சிகிச்சை நிலையம் பிராந்தியத்தின் ஐந்தாவது நிலையமாகவுள்ளதுடன் அட்டாளைச்சேனை கோட்டத்திற்குட்பட்ட 25 பாடசாலை மாணவர்களுக்கும் இதன் மூலம் சேவை வழங்கப்படவுள்ளதாக வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம் தெரிவித்தார்.
ஒரு மனிதனின் வாழ்வில் பற்சுகாதாரம் பிரதான இடத்தை வகிக்கின்றது. பாடசாலை மாணவர்களின் பற்சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலேயே சுகாதார திணைக்களம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இதனை மேலும் விருத்தி செய்வதற்காகவும், அதற்கான வசதிகளையும், தேவைப்பாடுகளையும் அமைப்பதற்கான உதவிகளையும், நிதிவசதிகளையும் கல்வி வலயம் வழங்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தர்.
அபு அலா -