Published On: Tuesday, August 11, 2015
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மது விலக்கை அமல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் (திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில், சோழிங்கநல்லூர் சிக்னல் பழைய மகாபலிபுரம் சாலை - கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் உள்ள கலைஞர் தெருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமையில், சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார். சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமையில், மாதவரம் பஜார் சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி வேணு தலைமையில் பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகிலும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் தாம்பரம் சண்முகம் சாலையிலும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர்கள் எ.வ.வேலு, சிவானந்தம் தலைமையிலும், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமையிலும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையிலும், திருச்சி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர்கள் கே.என்.நேரு, தியாகராஜன் தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வீரபாண்டி ராஜா தலைமையில் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகிலும், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் காந்திசெல்வன் தலைமையில் நாமக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகிலும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுகவனம் தலைமையில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை முன்பும், சிவகங்கை மாவட்ட செயலாளர் பெரிய கருப்பன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமையிலும், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையிலும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.






