Published On: Tuesday, August 11, 2015
மொகிதீன் ஆய்வு செய்து எழுதிய தமிழருக்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்த மதமா?
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவரும் மணிச்சுடர் நாளேட்டின் ஆசிரியருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நீண்ட நாட்கள் ஆய்வு செய்து எழுதி வந்த தமிழருக்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்த மதமா? என்ற ஆய்வின் தொகுப்பாக வெளிவந்துள்ள மணிச்சுடர் நாளேடு 29ஆம் ஆண்டு ரமளான் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.
கே.நவாஸ் கனி தலைமையில் பேராயர் எஸ்றா சற்குணம் வெளியிட டாக்டர் மஸ்தான் முதல் பிரதி பெற்றுக்கொண்டார். தமிழக முஸ்லிம்களின் ஒரே நாளிதழான மணிச்சுடர் கடந்த 29 ஆண்டுகாலமாக வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்நாளிதழின் சார்பில் ஆண்டு தோறும் ரமளான் சிறப்பு மலரை வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டு மலரும் ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் மற்றும் செய்திகளை தாங்கி வெளியிடப்படும் மலரின் இந்த ஆண்டு தமிழருக்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்த மதமா? என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகதீன், தாருல் குர்ஆன் என்ற பெயரில் மாதம் இருமுறை ஏடு நடத்தி வந்தபோது 1981 பிப்ரவரி 18-19ல் நிகழ்ந்த மீனாட்சிபுரத்தில் தேவேந்திர குல வேளாலர் சமூக மக்கள் ஏராளமானோர் இஸ்லாத்தில் இணைந்ததை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்ட நேரத்தில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இந்த ஆய்வை நடத்தி அதை கட்டுரையாக வெளியிட்டார். கோவையில் தமிழக அரசு 2010 ஜுன் 23-27 தேதிகளில் செம்மொழி மாநாடு நடைபெற்ற போது தமிழும் உலக செம்மொழிகளும் என்ற தலைப்பில் நிகழ்ந்த அமர்வில் செம்மொழி தமிழும், அரபியும் ஓர் ஆய்வு எனும் தலைப்பில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஒரு ஆய்வை சமர்ப்பித்தார்.
அந்த அரங்கில் அமர்ந்த அறிஞர் பெருமக்கள் இந்த அற்புதமான ஆய்வு நூல் வடிவில் வரவேண்டுமென ஆர்வப்பட்டனர். அதன் வெளிப்பாடாக இந்த ஆண்டு மணிச்சுடர் நாளிதழ் இதே தலைப்பில் ரமளான் சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது. மலர் வெளியீட்டு விழா சென்னை மரைக்காயர் லெப்பைத் தெரு, அன்னை ஆயிஷா மஹாலில் இன்று காலை 11 மணிக்கு இம்மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. எஸ்.டி. கூரியர் நிர்வாக இயக்குநர் கே.நவாஸ் கனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேராயர் எஸ்றா சற்குணம் இம்மலரை வெளியிட தி.மு.க சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மஸ்தான் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். மணிச்சுடர் நாளேட்டின் சேர்மன் எம். அப்துர் ரஹ்மான் (முன்னாள் எம்.பி) நிர்வாக இயக்குநர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர், ஆலிம் முஹம்மது சாலிஹ் கல்வி குழுமங்களின் தாளாளர் கவிஞர் எஸ். சேகு ஜமாலுதீன், மௌலானா கே.எஸ். சாகுல் ஹமீது ரஹ்மானி ஆகியயோர் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நிறைவு பேரூரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழருக்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்த மதமா? என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த மலர் பலருக்கு மகிழ்வை தரும். சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு எரிச்சலை தரலாம். ஆனால் உலக மக்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஒரே தாய் தந்தை வழியில் இருந்து வந்தவர்கள்.
அந்த அடிப்படையில் நாம் ஒரே குடும்பம் என்ற கருத்தை நாம் பதிய வைத்திருக்கின்றோம். இந்த மலரில் இடம் பெற்றிருக்கக்கூடிய கருத்துக்களை, ஆய்வை உலகம் தழுவிய அளவில் பரப்ப செய்ய வேண்டும். அதற்கு நான் துணையாக இருப்பேன் என்று இங்கே மஸ்தான் குறிப்பிட்டார். அதற்காக நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். இந்த தலைப்பில் மணிச்சுடர் மலர் வெளிவருவதற்கு மாநில துணைச்செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தான் மூலக் காரணம். அவரை நான் பாராட்டாமல் இருக்க முடியாது. இம்மலரின் பொறுப்பாசிரியராக பொறுப்பேற்று பேராசிரியர் கே.டி கிசர் முஹம்மது மிகச் சிறப்பாக உருவாக்கி தந்துள்ளார். அவருக்கு மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கி உறுதுணை புரிந்துள்ளார். வடிவமைப்பாளர் பால் சார்லஸ் மிகச் சிறப்பாக வடிவமைத்து தந்துள்ளார். அவர்கள் அத்தனை பேருக்கும் நான் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மணிச்சுடர் நாளிதழின் சேர்மன் எம்.அப்துர் ரஹ்மான், நிர்வாக இயக்குநர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர், செய்தியாசிரியர் காயல் மகபூப் உள்ளிட்ட மணிச்சுடர் குழுமத்தை சார்ந்த அத்தனை பேருக்கும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறேன். இவ்வாறு பேராசிரியர் காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.
முன்னதாக சுதந்திர தொழிலாளர் யூனியன் பொதுச்செயலாளர் கே.எம். நிஜாமுதீன் வரவேற்று பேசினார். கே.எம் இஸ்மாயில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாநில துணை செயலாளர் ஆப்பனூர் ஜெபருல்லாஹ், எம். ஜெய்னுல்ஆபதீன், குலாம் முகம்மது யூசுப், பூவை எம்.எஸ் முஸ்தபா, எம்.எச். ஹைதர் அலிகான், படூர் அல்லாபக்ஷ் உள்ளிட்ட மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிற்சங்கமான சுதந்திர தொழிலாளர் யூனியன் சார்பில் பன்மொழி புலவர் எம்.ஏ. லத்தீப் சாஹிப் நினைவாக புனித ரமளானை முன்னிட்டு ஏராளமானோருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
(திருச்சி - சாகுல் ஹமீது)
