Published On: Tuesday, August 11, 2015
மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தில் தினமும் 10 ஆயிரம் பேர் அஞ்சலி
மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், மேகாலயா ஷில்லாங் நகரில் ஜூலை 27ல் உயிரிழந்தார். அவரது உடல் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் தேசிய சாலை அருகே உள்ள பேக்கரும்பு என்னுமிடத்தில் ஜூலை 30 அடக்கம் செய்யப்பட்டது.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் திரண்டு வந்த லட்சக்கணக்கான மக்கள் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்றும் கலாம் சமாதிக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தவறாமல் கலாம் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு செல்கின்றனர்.
இந்து அமைப்பினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், கல்லூரி மாணவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். இங்கு வாகனங்கள் நிறுத்த வசதியின்றி, ராமேஸ்வரம், மதுரை தேசிய சாலை இருபுறமும் நிறுத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கார் "பார்க்கிங்' வசதி ஏற்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து அப்துல்கலாம் சமாதிக்கு அஞ்சலி செலுத்திய உசிலம்பட்டி கல்லூரி மாணவர் சரவணன் கூறியதாவது: "தூங்கும்போது வருவது கனவு அல்ல, உன்னை தூங்க விடாமல் செய்வது தான் உண்மையான கனவு' என கூறிய அப்துல்கலாம் மாணவர்கள், இளைஞர்களுக்கு விடிவெள்ளியாக திகழ்ந்தார். அவர் மறையவில்லை, கோடிக்கணக்கான மாணவர்கள் மனதில் வாழ்கிறார். அவர் வழிகாட்டிய லட்சிய பயணம் வெற்றி பெறவும், இந்தியா வல்லரசு நாடாக உருவாக நாங்களும் அயரது உழைப்போம் என அவரது சமாதியில் உறுதி மொழி எடுத்துள்ளதாக தெரிவித்தார்.ஒரு நாளைக்கு சாராசரியாக 10 ஆயிரம் பேர் வீதம் இது வரை 2 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.