Published On: Friday, August 14, 2015
இலங்கையிலிருந்து காய்கறிகளை இறக்குமதி செய்யும் நோக்கில்தான் தமிழக விவசாயிகளின் காய்கறிகளை புறக்கணிக்கும் செயலை செய்கின்றன பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு
தமிழர்களை அழிக்க கேரள அரசு, இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக தமிழர் தேசிய விடுதலை முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் காய்கறிகளில் அதிகமான அளவு நச்சுத்தன்மை இருப்பதாக கூறி, கடந்த இரண்டு மாதங்களாக தமிழகப்பகுதிகளிலிருந்து காய்கறிகளை கேரளாவிற்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் காய்கறிகளுக்கு தடை விதிக்கும் கேரள அரசின் போக்கை கண்டித்து, தமிழர் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் தேனி மாவட்டம் கம்பத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களிடையே பேசிய பழ.நெடுமாறன், " முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை பெறும் தமிழக விவசாயிகள் , தமிழகத்தில் விளையும் காய்கறிகளையும், இறைச்சிகளையும் கேரளாவிற்கு தொடர்ந்து அனுப்பி வருகின்றனர். எங்களுக்கும், கேரள மக்களுக்கும் எவ்வித மனக்கசப்பும் இல்லை. ஆனால் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் நியாயமாக வந்த தீர்ப்பினை அடுத்தும் கேரள அரசியல்வாதிகள், தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்படும் காய்கறிகளில் 95 சதவிகிதமான காய்கறிகள் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றன என்ற பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.
டெல்லியிலிருக்கும் கேரள உயர் அதிகாரிகள், இலங்கை அரசோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, இலங்கையிலிருந்து காய்கறிகளை இறக்குமதி செய்யும் நோக்கில்தான் தமிழக விவசாயிகளின் காய்கறிகளை புறக்கணிக்கும் செயலை செய்கின்றன என நான் பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறேன். பிரதமர் மோடி, இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு தமிழக விவசாயிகளுக்கு நியாயம் வழங்க முன்வர வேண்டும்.
கேரள அரசும் தங்களுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு உடனடியாக கேரளாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, காய்கறிகளை கொண்டு செல்வதை தடுக்கும் செயலுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக முதற்கட்டமாக தேனி, கம்பம் பகுதி விவசாயிகளை அழைத்து போராட்டம் நடத்தியுள்ளோம்.அடுத்துவரும் காலங்களில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கம், தமிழர் நலன் விரும்பும் அமைப்புகளையும் கூட்டி கேரளாவை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" என்றார்.
ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக பகுதிகளில் விளைந்த காய்கறிகள் சாலைகளில் கொட்டப்பட்டன. முதலில் தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ள லோயர் கேம்ப் பகுதியில்தான் போராட்டத்தை நடத்துவதாக இருந்தது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்து விடக்கூடாது என்பதற்காக கம்பத்திலேயே ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
(திருச்சி - சாகுல் ஹமீது)
