Published On: Friday, August 14, 2015
சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.14 லட்சம் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு சிங்கப்பூரில் இருந்து டைகர் ஏர்வேஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து வந்த 2 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது அவர்கள் தங்கள் உடமைகளுக்குள் மறைத்து 200 கிராம் தங்கத்தை கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல மலேசியாவில் இருந்து சென்னை வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்த போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து வந்த 4 பயணிகளை பிடித்து வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களது உடமைகளை சோதனை செய்த போது அதில் மறைத்து 4 பேரும் சேர்ந்து 350 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.