Published On: Friday, August 14, 2015
ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த 22,942 குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்
ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த 22,942 குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் இதுவரை 44 ஆயிரத்து 596 குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளும் 7,106 பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை (வார்டு-39) தண்டையார்பேட்டை (வார்டு-38) பகுதிகளைச் சேர்ந்த 24,942 குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படுகிறது. இதன் அடையாளமாக, ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவான முதல்வர் ஜெயலலிதா, 10 குடும்பங்களுக்கு தலைமைச் செயலகத்தில் இப்பொருட்களை வழங்கினார்.
மேலும் படேல் நகர், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, புத்தா தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளிகள், தண்டையார்பேட்டையில் உள்ள முருகதனுஷ்கோடி மற்றும் சவுந்திர சுப்பம்மாள் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளிகள் என 5 பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 1,518 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டி வழங்கப்படுகிறது. இதன் அடையாளமாக 5 மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதா மிதிவண்டிகளை வழங்கினார்'' என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
(திருச்சி - சாகுல் ஹமீது)
