Published On: Friday, August 14, 2015
திருச்சி அரசு கல்லூரி விடுதியில் பல்லி விழுந்த சட்னியை சாப்பிட்ட 32 மாணவர்களுக்கு வாந்தி–மயக்கம்
திருச்சி காஜா மலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் அரசு விடுதி உள்ளது. இங்கு திருச்சியில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் நேஷனல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, ஈ.வே.ரா. கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் படிக்கும் 120 மாணவர்கள் தங்கி படிக்கிறார்கள். இவர்களுக்கு காலை டிபன், மதியம் உணவு, இரவு சாப்பாடு வழங்கப்படுகிறது. விடுதி வார்டனாக நெப்போலியன் உள்ளார்.
காலை 8 மணிக்கு மாணவர்களுக்கு காலை உணவாக இட்லி, சட்னி வழங்கப்பட்டது. அப்போது திடீரென மாணவர்களுக்கு குமட்டல் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் சாப்பிடுவதை நிறுத்தினர். திடீரென ஒரு மாணவர் சட்னியில் பல்லி வால் போல் தெரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை எடுத்து பார்த்த போது சட்னிக்குள் பல்லி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் சட்னிக்குள் பல்லியின் முட்டைகளும் கிடந்ததை கண்டு ஆவேசம் அடைந்தனர். அதற்குள் உணவை சாப்பிட்டிருந்த மாணவர்கள் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனே பாதிக்கப்பட்ட மாணவர்கள் மணிகண்டன் செல்வராஜ், பிரபு உள்பட 32 பேரையும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பல்லி விழுந்த உணவை மாணவர்களுக்கு வழங்கிய விடுதி நிர்வாகத்தை கண்டித்து 50 மாணவர்கள் திடீரென டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் திரண்டனர். பின்னர் அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்களுடன் திருச்சி மாநகர போக்குவரத்து உதவி கமிஷனர் விக்னேஸ்வரன், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விடுதியில் சமையல் மற்றும் சுகாதாரம் மிக மோசமாக இருப்பதாகவும், சுகாதாரமற்ற முறையில் உணவு சமைப்பதால் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் சரியான முறையில் கவனிக்காததால் பல்லி, பல்லியின் முட்டைகளுடன் கிடந்ததை பார்க்காமல் பரிமாறி உள்ளனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கூறினர்.
இது குறித்து அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். அதன்பிறகு மறியல் கைவிடப்பட்டது. இதனால் இன்று காலை ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே விடுதி நிர்வாகம் சார்பில் கூறும் போது, 120 மாணவர்கள் தங்கி இருக்க வேண்டிய விடுதியில் அனுமதியில்லாமல் மேலும் 30 மாணவர்கள் தங்கி உள்ளனர். 150 மாணவர்களுக்கு உணவு சமைத்து வழங்க கூறுகிறார்கள். கூடுதலாக தங்கி உள்ள மாணவர்கள் குறித்து கேள்வி கேட்ட போது இது போன்று பிரச்சனை செய்கிறார்கள் என்றனர்.
திருச்சியில் அரசு மாணவ–மாணவிகள் விடுதிகளில் பராமரிப்பு குறைபாடு, உணவு தயாரித்தலில் தரமின்மை, குடிநீர் பற்றாக்குறை என தொடர் பிரச்சனைகள் நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூழ் போன்ற சாதத்தை தயாரித்து கொடுத்ததால் அவற்றை தட்டுகளுடன் எடுத்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதே போன்று தற்போது சட்னியில் பல்லி கிடந்தது, மாணவர்கள் விடுதியிலும் பாம்பு தொல்லை என பல தொல்லைகளும் நிலவுகிறது. எனவே மாணவர்கள் கல்வியை கற்க வசதியாக நல்ல வசதிகளை விடுதிகளில் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.