Published On: Sunday, August 16, 2015
சம்மாந்துறை மாஹிர் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்
கிழக்கு மாகாண சபைக்கு புதிய உறுப்பினராக சம்மாந்தறையைச் சேர்ந்த ஐ.எல்.எம்.மாஹிர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் கட்சியின் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் அதி உயர்பீடக் கூட்டம் (15) கண்டி ஓக்றீன் ஹோட்டலில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சியின் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தனது மாகாணசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்ததன் காரணமாக அதன் வெற்றிடத்திற்கு சம்மாந்துறையைச் சேர்ந்த சவூதி அரேபிய தூதரக பொதுஜன அதிகாரி ஐ.எல்.எம்.மாஹிருக்கு வழங்குமாறு உயர்பீட உறுப்பினர்கள் கோரிக்கொண்டமைக்கு அமைவாகவே இந்த மாகாண சபை உறுப்பினர் பதவியை வழங்குவதற்கு மு.கா கட்சியும் அதன் தலைவரும் அவருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது.
குறிப்பிட்ட விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுணருக்கு உடனடியாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவரின் மாகாண சபைப் பதவியை எதிர்வரும் கிழக்கு மாகாண சபையின் அமர்வின்போது பெற்றுக்கொள்வதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கட்சியின் தலைமை கட்சியின் செயலாளர் எம்.ரீ.ஹஸன் அலிக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின்போது மு.காவின் சார்பில் போட்டியிட்டவர்களின் தரவரிசையில் ஐ.எல்.எம்.மாஹிர் அடுத்த நிலையில் உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அபு அலா –
