எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, August 14, 2015

கட்டுரை.....பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் முஸ்லிம்களுக்கான இறுதி அறிவித்தல்

Print Friendly and PDF

அபிவிருத்தி உரிமை என்பன நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்று  சமூக அரசியலில் மிகவும் இன்றியமையாததாகும்.  அபிவிருத்திக்கு மட்டும் முஸ்லிம்கள் அடிமையாகாமல் தமது சமூகத்தின் அரசியல் பேரம் பேசும் சக்தியினை பலப்படுத்தவும் முன்வர வேண்டும்.

இன்றைய அரசியல் சூழ் நிலையில் சிறந்த அறிவும் ஆளுமையும் அனுபவமும் பாராளுமன்றில் முழங்கும் தைரியமும் கொண்ட படித்தவர்களை இனம் கண்டு அவர்களை பாராளுமன்றுக்கு அனுப்ப வேண்டும். ஏனெனில் எதிர்காலத்தில் பெரும்பான்மையில் எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் இரண்டு விடயங்களை சர்வதேச அழுத்தத்தின் காரணமாக கட்டாயமாக செயற்படுத்தியே ஆக வேண்டிய நிலை காணப்படுகிறது. ஒன்று 20 வது திருத்தச்சட்ட மூலம் தொடர்பான விடயம் இரண்டு சிறுபான்மை தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் இவைகள் நடைமுறைப் படுத்தப்படும்போது முஸ்லிம்களுக்கான பங்குகள் என்ன என்பது தொடர்பான தெளிவுள்ள அரசியல் வாதிகளை அறிந்து அவர்களை தெரிவு செய்வதே இன்றுள்ள மக்கள் பொறுப்பொன்றாகும்.

மக்கள் பல முஸ்லிம் அரசியல் தலைமைகளில் நம்பிக்கை இழந்த நிலையில் நாம் இம்முறை தேர்தலை பகிஸ்கரிப்போம். எமது தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. இவர்களை புறம் தள்ளுவோம். என்று கோசங்கள் எழுப்பியதை கண்டோம். அது பிழையான ஒரு செயற்பாடாகும். ஜனநாயக உரிமையான வாக்குரிமையை நாம் பாவிக்காமல் இருப்பது எமது விரல்களாலே எமது கண்களை குத்திக் கொள்வதற்கு சமமானது. எனவே எந்தவொரு முஸ்லிமும் வாக்களிக்காமல் இருந்துவிடக்கூடாது.  இம்முறை எப்படியாவது முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை அதிகமாக பெற வேண்டிய தேவை இருக்கின்றது.   

எமது  நாட்டில் ஆட்சி செய்து வந்த சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் எப்போதும்  இந் நாட்டில் உள்ள சிறுபான்மை இனத்தின் பிரதிநிதிகளான முற்போக்கு அரசியல் சக்திகளை இல்லாதொழித்து சிறுபான்மை மக்களின் பேரம் பேசும் சக்தியினை சிதைத்து அம்மக்களை தங்களுக்கு அடிமைப்பட்டவர்களாக வைத்துக்கொள்வதற்காக பேரினவாதிகள் பயன்படுத்துகின்ற ஒரேயொரு சாதனம் அபிவிருத்தி என்ற மாயையாகும். 

முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏகபோக தனிப்பெரும் அரசியல் சக்தியாக வளர்ச்சியடைந்துவிட்ட முஸ்லிம் காங்கிரசை தலைவர் அஷ்ரபின் மறைவுக்கு பின்பு  பலவீனப்படுத்தி முஸ்லிம் மக்களின் பேரம் பேசும் சக்தியினை அழித்தொழிக்கும் நோக்கில்  அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா அதன் பின்னர் மஹிந்த என தொடராகவே அவர்களால்  பெரும் சதிகள் இடம்பெற்றன. அதற்கு சோரம் போன எமது அரசியல்வாதிகளும் எம்முள் இருக்கின்றனர். இவை கடந்தகால வரலாறாகும்.

இது  இன்று நேற்றல்ல சுதந்திரத்துக்கு முற்பட்ட காலம் தொட்டே அபிவிருத்தி எனும் சலுகைகளை காட்டி சிறுபான்மை மக்களின் முற்போக்கு சிந்தனையை மழுங்கடிக்க முற்பட்டதே வரலாறாகும்.

சுதந்திரம் என்ற போர்வையில் இந்நாட்டின் ஏகபோக உரிமைகளும் அதிகாரங்களும் சிங்களவர்களின் கைகளுக்கு கிடைத்த பின்பு எல்லாம் தலைகீழாக மாறியது. வடக்கின் அபிவிருத்தி பணிகள் அனைத்தும் இடை நடுவில் நின்றுபோனதுடன் மலையக தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஆகக் குறைந்த உரிமையான பிரஜா உரிமையும் பறிக்கப்பட்டது.

ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் எழுச்சி பெற்று வந்த முஸ்லிம் காங்கிரசை முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து திசை திருப்பும் பொருட்டு அன்றைய ஐ.தே.க.யின் முஸ்லிம் அமைச்சர்கள் மூலமாக ஏராளமான அபிவிருத்திபணிகள் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் மக்கள் அபிவிருத்திக்கு பின்னால் செல்லவில்லை. 

அந்தத் தொடரில் மகிந்த ராஜபக்சவின் பத்து வருட ஆட்சிக்காலத்தில் அதாஉல்லா ரிசாத் பதியுதீன் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களை தனது முகவர்களாக வைத்துக்கொண்டு முஸ்லிம் பிரதேசங்களில் ஏராளமான அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதன் மூலம் முஸ்லிம் காங்கிரசை முஸ்லிம் மக்களிடம் இருந்து ஓரம் கட்டுவதற்காக மகிந்த ராஜபக்ஸ தனது அனைத்து வளங்களையும் இம் மூன்று முகவர்கள் மூலமாக பயன்படுத்தினார்.

மகிந்தவின் அமைச்சரவையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்கள் இரண்டு தடவைகள் அமைச்சராக இருந்தும் பிரதி அமைச்சராக இருந்த ஹிஸ்புல்லாவுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தில் பாதியளவுக்கு கூட அமைச்சர் ஹக்கீமுக்கோ அமைச்சர் பௌசி போன்ற தெற்கின் முஸ்லிம் அமைச்சர்களுக்கோ வழங்கப்பட்டிருக்கவில்லை. 

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கும்போது டக்லஸ் தேவானந்தா கருணா அம்மான் பிள்ளையான் போன்றவர்கள் மூலமாக தமிழ் பிரதேச அபிவிருத்திகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்ட அதே வேளை முஸ்லிம் மக்களின் ஏக பிரதிநிதியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும்போது முஸ்லிம் பிரதேச அபிவிருத்திகள் அனைத்தும் அதாஉல்லா ரிசாத் பதியுதீன் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களின் மூலமாக அபிவிருத்தி பணிகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டது.

ஒரு நாடு அபிவிருத்தி அடைவதென்றால் அந்த நாட்டின் அனைத்து பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். அதில் பிரதேச ரீதியாகவோ இன ரீதியாகவோ புறக்கணிக்க முடியாது. எனவே அபிவிருத்தி என்பது ஒரு நாட்டு அரசாங்கத்தின் கடமையாகும். அந்தக் கடமையை அரசாங்கம் செய்தே ஆக வேண்டும்.  அதனை அடைவதற்கு எங்களது பேரம் பேசும் சக்தியான கட்சி மு.கா வை.  நாங்கள் பலப்படுத்த வேண்டும். அவ்வாறென்றால் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் நிலைமையை விளங்கி எதிர்கால ஆபத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பதற்காக விட்டுக் கொடுத்து முஸ்லிம் தலைமைகளை ஒன்றுபடுத்த வேண்டும்.

அன்று மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் காலத்திலிருந்த பேரம் பேசும் சக்தியை நாம் மீண்டும் பெற வேண்டுமானால் அமைச்சர் ஹவூப் ஹக்கீம் மற்றும் இதர தலைமைகள் கொள்கையளவில் ஒன்றிணைவதை தவிர வேறு வழியில்லை. வெறுமனே அபிவிருத்தி மட்டுமே எமது இலக்காக இல்லாமல் உரிமைகள் இருப்புடன் கூடிய அபிவிருத்திக்கு வழியமைக்கப்பட வேண்டும்.

இந்த கருத்தினை நாம் சொல்லி கிட்டத்தட்ட அலுத்துப்போய் விடும் அளவிற்கு நிலைமை இருக்கின்றது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் பெரும்பான்மை பேரினவாத சக்திகள் சிறுபான்மைகளுக்கு அநியாயம் செய்வதற்காகவும் சிங்கள பௌத்த நாடாக இலங்கையை கொண்டுவரவும் பெரும் திட்டத்துடன் களமிறங்கியிருக்கின்ற நிலையில் என்னதான் பிரயத்தனம் செய்தாகினும் முஸ்லிம்களிடம் இருக்கின்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட பொதுக் கூட்டமைப்பிற்குள் ஒன்று சேர்ந்து இணைத் தலைமையுடன் செயற்பட முன்வர வேண்டும்.

எமது சமூகத்தை இலங்கையில் அடையாளமில்லாமல் செய்ய அல்லது இருப்பினை கேள்விக்குள்ளாக்கும் பேரினவாத சதி வலையிலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பினை சுமந்தவர்களாக எமது முஸ்லிம் தலைமைகள் மாற வேண்டும். கட்சி ரீதியான போட்டியினை கை விட்டு இந்த பொதுத் தேர்தலின் பின்பு எத்தனை முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பாராளுமன்றுக்கு செல்கிறதோ அத்தனைபேரும் ஒன்றிணைவதன் மூலம் எமது சமூக காவலர்களாக மாற வேண்டும் என்பதே இப்போதைக்கு நாம் முன்வைக்கும் சிந்தனையாகும்.

(எஸ்.அஷ்ரப்கான்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2