Published On: Friday, August 14, 2015
சமஷ்டி முறை தான் சிறந்த அரசியல் முறை என அரசியல் அறிஞர்கள் சொல்லியிருக்கின்றார்கள் - கி.துரைராசசிங்கம்
பல்லினம் வாழுகின்ற நாட்டிற்கு சமஷ்டி முறை தான் சிறந்த அரசியல் முறை என அரசியல் அறிஞர்கள் சொல்லியிருக்கின்றார்கள். இதனையே நாம் எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
அம்பாறை நாவிதன்வெளியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி என்று சொல்லி நாட்டைப் பிரிக்க எண்ணுகின்றது என தென்னகத்தில் எதிர்த்தரப்பினர் மக்களைக் குழப்பிக் கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு மக்களைக் குழப்புகின்றவர்களை அரசியல் ஞானம் அற்றவர்களாகவே எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில் பல்லினம் வாழுகின்ற ஒரு நாட்டிற்கு சமஷ்டி முறை தான் சிறந்த அரசியல் முறை என மொன்டஸ்கியூ போன்ற அரசியல் அறிஞர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.
1949ம் ஆண்டிலிருந்து இதனைத் தான் நாம் சொல்லிக் கொண்டு வருகின்றோம் கால ஓட்டத்திற்கு ஏற்ற விதத்தில் சில மாற்றங்களை அடைய வேண்டும் என்ற அந்த அடிப்படையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இப்பொழுதும் நாங்கள் தனித்துவமான இத்தகைய இயல்புகளை ஐக்கிய நாடுகள் சமவாயத்திலே இருக்கின்ற பொருளாதார சமுக கலாச்சார சமவாயம் என்பதும் குடியியல் உரிமை அரசியல் உரிமை பொருளாதார உரிமை என்பன தொடர்பான சமவாயமும் தனித்துவமான பண்புகளைக் கொண்டவர்கள் ஒரு மக்கள் கூட்டம் என்றும் அந்த மக்கள் கூட்டம் தங்களைத் தாங்களே ஆளுகின்ற உள்ளக அல்லது வெளிய சுய நிர்ணய உரிமையைக் கொண்டது.
இதனையே நாம் எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம். இத்தகைய சுய நிர்ணய உரிமையத் தான் நாம் சமஷ்டி என்ற கோட்பாட்டில் கூறிக்கொண்டிருக்கின்றோம்.
எனவே இன்று தென்னகத்தில் விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இனத்துவேசம் என்பது எங்களை அடையாளம் இல்லாமல் அளிக்கின்ற ஒரு விடயம். நாம் எமது தற்பாதுகாப்பைக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். இதனை எமது மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கும் பெருவாரியான வெற்றியின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையில் மக்களும் என்றும் உறுதுணையாக இருக்கின்றார்கள் என்பதை தென்னகத்திற்கு மட்டு மல்லாது முழு உலகிற்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்