Published On: Wednesday, August 12, 2015
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் நினைவிடம்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் நினைவிடம் அமைக்கும் பணிக்காக மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் உடல் தங்கச்சிமடம் பஞ்சாயத்துகுட்பட்ட பேய்க்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு, 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸார் காவல் பணியில் ஈடுபடுத்தப்ப்பட்டுள்ளனர். மேலும், கண்காணிப்பு கேமராவும் பொறுத்தப்ப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதிலும் இருந்து ராமேஸ்வரம் வரும் யாத்திரைவாசிகள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நாள்தோறும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.
கலாமின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த இரவு நேரத்தில் வரும் பொதுமக்களின் வசதிக்காக பொதுப்பணி துறையினர் சோடியம் விளக்குகள் அமைத்திருப்பதுடன் அவரது நினைவிடத்தில் தற்காலிக கொட்டகை ஒன்றையும் அமைத்துள்ளனர். கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கவும், நூலகம், கண்காட்சி கூடம், ஆய்வு கூடங்கள் போன்றவை ஏற்படுத்த கலாம் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். இதேபோல், கலாம் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் முக்கிய பிரமுகர்களும் இந்த கோரிககையினை வலியுறுத்தி செல்கின்றனர்.
இதையடுத்து, கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைப்பது தொடர்பான ஆரம்ப கட்ட பணிகளை மத்திய பொதுப்பணி துறையினர் மேற்கொண்டுள்ளனர். கலாம் நினைவிடத்திற்கு மதூரையில் இருந்து மத்திய பொதுப்பணி துறை நிர்வாக் பொறியாளர் கணேசன், இளநிலை பொறியாளர் பைசர்கான் ஆகியோர் தலைமையிலான் குழுவினர் வந்திருந்தனர்.
இந்தக்குழுவினர், கலாம் நினைவிடம் அமைய உள்ள இடத்தின் மொத்த அளவு மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்கும் நினைவிடத்திற்கும் இடையேயான உயரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இவர்கள் தங்கள் அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் அளித்தபின் நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
அவரது நினைவிடத்தை பார்ப்பதற்கு தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் தினமும் வந்து செல்கின்றனர். ஒரு சிலர் கலாமின் நினைவாக அந்த பகுதியில் மரக்கன்றுகளை நட்டுச்செல்கின்றனர்.
இந்த நிலையில் அப்துல்கலாமின் நினைவிடம் மற்றும் சுற்றுப்புறங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு போலீசார் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கலாமின் நினைவிடம் அடைந்துள்ள இடங்களின் அருகே கடைகள் வைக்க கூடாது என்றும், நினைவிடத்தில் வியாபார நோக்கில் யாரும் புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது என்றும், இடத்தை முழுமையாக சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்றும், மரக்கன்றுகளை யாரும் நடக்கூடாது என்றும் காவல் துறை மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அப்துல் கலாம் நினைவிடத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேய்க்கரும்பு பகுதியில் விரைவில் மத்திய-மாநில அரசுகள் சார்பில் அப்துல்கலாமிற்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவரது நினைவிடத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
(திருச்சி - சாகுல் ஹமீது)

