Published On: Tuesday, December 22, 2015
பாலம் புனரமைக்கப்பட வேண்டும் - மக்கள் கோரிக்கை
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரத்தின் ஊடாக அட்டன் செல்லும் பிரதான பாதையில் கல்மதுரை தோட்ட மார்க்கத்தில் உள்ள பாலம் வெடிப்புற்று காணப்படுவதுடன் இப்பாலத்தில் பொருத்தபட்டிருந்த பாதுகாப்பு கம்பிகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. இப்பாலத்தின் ஊடாக கனரக வாகனங்கள் அரச மற்றும் தனியார் பஸ் சேவை இடம்பெறுகின்றது.
இப்பாதை 2007 ம் ஆண்டு மத்திய மாகாண வீதி அதிகாரசபையால் காபட் பாதையாக புணரமைக்கபட்டது. இதன் போது இப்பாலம் புணரமைக்கபடாமல் கைவிடப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் இப்பாலத்தினை புணரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் மலையக அரசியல் வாதிகளிடம் தெரிவித்தபோதும் இதுவரை எவறும் நடவடிக்கை எடுக்கவில்லையென இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் இடம்பெறும் வாகன விபத்துகள் தொடர்பாக அக்கரபத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்தசிரி அவரிடம் வினவியபோது இப்பாலத்தில் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெறுகின்றது. இதனால் வாகனங்கள் சேதமடைவதுடன் வாகனங்களில் செல்லும் பயணிகளும் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இப்பாலத்தில் காணப்படும் குறைப்பாடுகளை இப்பகுதி மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள். இதுதொடர்பாக நாங்களும் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக இவர் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)