Published On: Tuesday, December 22, 2015
எதிர்காலத்தை தீர்மானிப்பது எவ்வாறு என்ற மனதாக்கத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள் வலப்பனை மகாஊவா தோட்ட மக்கள்
இந்த நவீன காலத்திலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வரும் சமூகத்தில் எதிர்காலத்தை தீர்மானிப்பது எவ்வாறு என்ற மனதாக்கத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள் மதுரட்ட பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வலப்பனை மகாஊவா தோட்ட மக்கள். இந்த தோட்டம் இராகலையிலிருந்து 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. இத்தோட்டத்தில் 250ற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழும் குடியிருப்புகள் வெள்ளையர்களின் காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளாக இருந்தாலும் இம்மக்களின் உழைப்பால் மிச்சப்படுத்திய பணத்திலும் ஊழியர் சேமநல நிதியிலும் செலவு செய்து தங்களின் இருப்பிடங்களை சீர் செய்துள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
இங்கு ஒரு வருடங்களுக்கு முன்பு தோட்ட நிர்வாகத்தால் காணி பகிர்ந்து தேயிலை செடிகளின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் 800 தொடக்கம் 1500 தேயிலை செடிகள் ஒரு குடும்ப ரீதியாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பராமரிக்கும் பொறுப்பு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இதேவேளை இதற்கான பராமரிப்பு பணத்தையும் தொழிலாளர்கள் செலவு செய்ய வேண்டும். இத்தோட்ட தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதோடு இங்கு பறிக்கபடும் தேயிலை கொழுந்துகளை வேறு பிரதேசத்தில் உள்ள தோட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றது. மேலும் இத்தோட்டத்தில் முன்னர் தோட்ட நிர்வாகத்திற்கு கீழ் தேயிலை செடிகள் இருந்தபோது தேயிலை மலைகளை மேற்பார்வை செய்வதற்கு உத்தியோகத்தரகள் மற்றும் கங்காணிமார்கள் இருந்தபோதிலும் தற்போது உத்தியோகத்தர்கள் இல்லை. இதனால் தேயிலை செடிகளை எதிர்காலத்தில் பராமரிப்பது சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது.
இத்தோட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் பாதைஇ குடிநீர்இ வீடுகள் பற்றாக்குறைஇ வடிக்காண்கள்இ மலசலகூடம் என சுகாதார அடிப்படை வசதிகளை எவரும் செய்து கொடுக்காத நிலைகளில் மிகவும் மோசமான நிலையில் தங்களது வாழ்க்கையை நகர்த்துவதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்ட நிர்வாகத்தால் இங்கு வாழும் மக்களை அடிமை தனமாக நினைப்பதோடு இங்குள்ள மக்களை மனிதர்களாக கருத்தில் கொள்ளாது தோட்ட நிர்வாக அதிகாரிகளால் இவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதோடு அதனை மீறும் பட்சத்தில் அவர்களை நசுக்கி வேலை வாங்குவதாகவும் இவர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு நின்றுவிடாமல் சில தொழிற்சங்க தலைவர்களுடன் சமரச பேச்சவாரத்தைகளை நடத்திக்கொண்டு அவர்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை செய்துக்கொடுத்து விட்டு தங்களது தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் தோட்ட நிர்வாகம் செயல்படுவதாகவும் இவர்களால் குற்றம் சுமத்தப்படுகின்றது. இத்தோட்டத்தில் 300 பேர் தொழில் செய்தபோதும் எல்லா தோட்ட தொழிலாளர்களிடமும் காணி பகிரந்து கொடுப்பதாக ஒப்பந்தங்களில் பலவந்தமாக கையொப்பங்களை தோட்ட நிர்வாகம் பெற்றுக்கொண்டுள்ளது. இதில் 60 தொழிலாளர்கள் மாத்திரே இத்திட்டத்தை எதிர்த்து போராடியதோடு சகல தொழிற்சங்கத்துக்கும் இபபிரச்சினை குறித்து தெரிவித்தபோதிலும் எந்த ஒரு தொழிற்சங்க அதிகாரிகளும் முறையாக பேச்சுவார்த்தை மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் தோட்ட அதிகாரியின் காரியாலயத்திற்கு வந்து அதிகாரியுடன் கலந்துரையாடி விட்டு தொழிலாளர்களை ஏமாற்றி சென்றதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஏனையவர்கள் மௌனமாக இருந்தாலும் 60 பேர் மாத்திரமே நாங்கள் போராடி வருகின்றோம். இதன் காரணமாக தோட்ட நிர்வாகம் எங்களை பயமுறுத்தி பழிவாங்கும் முயற்சிகளை மேற்கொள்வதாக இவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எத்தனை தொழிற்சங்கத்துக்கு எங்களுடைய மாதாந்த சம்பளத்திலிருந்து சந்தா பணத்தை வழங்கியும் எவ்விதமான நன்மையும் எட்டப்படவில்லை என்பதே எங்களுடைய வேதனையாகும்.
எனவே நாங்கள் படும் வேதனைகளை புரிந்து கொண்டு மலையக அரசியல்வாதிகள் மௌனம் சாதிக்காமல் இப்பிரச்சினைக்கு விடிவினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாகும்.
தாங்கள் படும் வேதனைகளை எங்களின் பிள்ளைகளும் படக்கூடாது என நினைத்தாலும் இத்தோட்டத்தில் தற்போது காணப்படும் நிலைமையை பார்க்கும்போது எங்களது பிள்ளைகளும் எங்களை போன்று வாழ வேண்டிய சூழ்நிலையே அதிகமாகவுள்ளது. இத்தோட்டத்திலிருந்து மகாஊவா தமிழ் மகா பாடசாலைக்கு சுமார் 5 கிலோமீற்றர் நடந்தே செல்ல வேண்டும். இப்பாதை போக்குவரத்து வசதிக்கு உகந்ததாக இல்லை. மிகவும் மோசமான நிலையில் உடைந்து குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இப்பாதையினை செப்பணிட்டுதர எந்தவொரு அரசியல்வாதிகளும் வரவில்லை. தற்போது எங்களுடைய பிள்ளைகள் பால் லொறிகளிலும் மிக சிரமத்துடன் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பும் அவலமான நிலை இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
எத்தனை தொழிற்சங்கங்கள் இருந்தபோதிலும் எங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு கிட்டியதாக இல்லை. தற்போது நல்லாட்சியில் அமைச்சராக இருக்கின்ற பழனி திகாம்பரம் அவர்கள் இப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கையோடு எங்களுடைய பிரச்சினைகளை ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
(க.கிஷாந்தன்)




