Published On: Thursday, January 14, 2016
உலகில் 182 மில்லியன் சிறுவர்கள் இன்னமும் இரண்டாம் நிலைக் கல்வியினை பெறமுடியாதுள்ளனர்
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் இவர்கள் சமுதாயத்தின் கண்களாகவும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகவும் இருக்கும் இவர்களை நாம் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எமக்கெல்லோரும் உள்ளது என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தெரிவித்தார்.
அக்ஃஅல்-ஹிக்மா வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா அதிபர் எம்.எச்.அப்துர் றஹ்மான் தலைமையில் இன்று வியாழக்கிழமை (14) இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை போன்ற நாட்டில் பலதரப்பட்ட அனர்த்த சூழ்நிலைகளிலிருந்து மீட்சியடையாத நிலையில் யுத்தம் முடிவுக்கு வந்தாலும் சிறுவர் துஷ்பிரயோகம் என்பது மிகவும் பூதாகரமாக உருவெடுத்து நாட்டின் கண்களையே குருடாக்கி விடுமோ என்றளவுக்கு ஒரு அச்ச நிலையை தற்போது தோற்றுவித்துள்ளது.
குடும்ப சமூக, சமுதாய ரீதியாக பலவிதமான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதுடன் வெகுசன தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அதிக சீரழிவுகள் இச்சிறுவர்களுக்கு ஏற்படுகின்றன. யுனிசெப்பின் 2015 ஆம் ஆண்டின் தரவுகளின்படி உலகில் 9 மில்லியன்களுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் குறைந்த வயதிலேயே இறக்கும் அபாயத்துக்குள் அவதிப்படுவதாகத் தெரிவிக்கின்றது. 182 மில்லியன் சிறுவர்கள் இன்னமும் இரண்டாம் நிலைக் கல்வியினை பெறமுடியாதுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு வன்முறையினால் 1.5 பில்லியன் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதில் 2 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட 85 வீதமான சிறுவர்கள் உலகில் உளரீதியான தண்டனைகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகின்றனர். உலகில் 150 மில்லியன் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன் ஒரு பில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் பயங்கரவாதத்தினாலும் ஆயுத மோதலினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலும் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்றார்.
இந்நிகழ்வின் பிரதம அதிதி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும், பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
அபு அலா –



