Published On: Thursday, January 07, 2016
சுயதொழில் கடன், பயனாளிகளின் பங்களிப்புக்களுடனான 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் கையளித்து
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம், சுயதொழில் கடன் மற்றும் பயனாளிகளின் பங்களிப்புக்களுடனான 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் கையளித்து வைக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று மாலை (06) இடம்பெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோர் கலந்துகொண்டு இந்த சுயதொழில் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட 26 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் 127 மிக வறிய குடும்பங்களை திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களினூடாக இத்தெரிவு இடம்பெற்று 25 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் வரையிலான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 127 பயனாளிகளின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் முகமாக அவர்களின் வருமானத்தை ஈட்டும் வன்னம் தையல் இயந்திரங்கள், மா அரைக்கும் இயந்திரங்கள், நெற்குத்தும் இயந்திரங்கள், தச்சுத் தொழில் உபகரணங்கள், ஆழ்கடல் மீன் பிடி வலைகள், நீர் பம்பிகள், அப்பம் விற்பனை செய்பவர்களுக்காக கேஸ் அடுப்புக்கள், போன்றவை வழங்கி வைக்கப்பட்டன.