Published On: Thursday, January 21, 2016
மக்கள் நலக் கூட்டணி சார்பில் கடலூர், நாகையில் 7–ந்தேதி தேர்தல் பிரசாரம் வைகோ அறிவிப்பு
மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர்கள் வைகோ (ம.தி.மு.க.), திருமாவளவன் (விடுதலை சிறுத்தை), ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு) ஆகியோர் சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை கூட் டாக பேட்டி அளித்தனர்.
அப்போது வைகோ கூறியதாவது: மக்கள் நலக்கூட்டணி சார்பாக மாற்று அரசியல் எழுச்சி மாநாடு மதுரையில் 26–ந்தேதி நடக்கிறது. இந்த மாநாடு தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். நுழைவு வாயிலாக அமையும் என்று நம்புகிறோம். லட்சக்கணக்கான தொண்டர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. 4 கட்சிகளும் இணைந்து பல்வேறு கட்டங்களாக கூட்டங்களை நடத்தி ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளோம். இதுவரை இல்லாத அளவுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்தும். பல கேள்விகளுக்கு இந்த மாநாடு விடை கொடுத்து விடும்.
தேர்தலுக்கு முன்பு இந்த 4 கட்சிகளும் இணைந்து இருக்குமா? என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. நாங்கள் இதுவரை இணைந்து செயல்படுகிறோம். வெள்ள நிவாரணப் பணி மற்றும் பல்வேறு போராட்டங்களை இணைந்து நடத்தி இருக்கிறோம். இது கொள்கை கூட்டணியாக உருவாகி உள்ளது.
இந்த மாநாட்டுக்கு பிறகு பிப்ரவரி 6–ந்தேதி புதுச்சேரியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் பொதுக் கூட்டம் நடக்கிறது. அதில் 4 கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகிறோம். அதன் பிறகு எங்களது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறோம். 7–ந்தேதி கடலூர், நாகை மாவட்டங்களில் 4 பேரும் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறோம். 8–ந்தேதி திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும், 9–ந்தேதி புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும், மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பிரசாரம் நடக்கிறது.
மதுரையில் நடைபெறும் மாநாடு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும். இந்த மாநாட்டில் கூட்டணி ஆட்சி, நேர்மையான ஆட்சி, ஊழல் இல்லாத ஆட்சி, மது இல்லாத ஆட்சி போன்றவற்றை மையமாக வைத்து பிரசாரப்படுத்துவோம்.
மக்கள் நலக்கூட்டணி பற்றி 65 சதவீதம் பேச தொடங்கிவிட்டனர். எங்களது அமைப்பு இளைய தலைமுறையினரிடம் வேகமாக பரவி வருகிறது. ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மிகுந்த நம்பிக்கையுடன் மக்களை சந்திக்கிறோம். எங்களுக்கு நம்பகத்தன்மைதான் பலம்.
ஐதராபாத் மாணவர் தற்கொலை தொடர்பாக மத்திய மந்திரிகள் ஸ்மிருதி இரானி, பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் 161–வது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் ரவிக்குமார், சிந்தனை செல்வன், பாலசிங்கம், வன்னிய அரசு, சேகுவாரா, ஆதவன் மற்றும் மல்லை சத்யா (ம.தி.மு.க.) ஆகியோர் உடன் இருந்தனர்.
திருச்சி – சாகுல் ஹமீது
