Published On: Thursday, January 21, 2016
கேரளாவில் சங்கீத அகாடமி தொடங்க இளையராஜாவுக்கு 5 ஏக்கர் நிலம் முதல்வர் உம்மன் சாண்டி அறிவிப்பு
நிகழாண்டுக்கான (2016) நிஷாகந்தி புரஸ்காரம் என்ற கேரள அரசின் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.
நிஷாகந்தி விழாவின் தொடக்க விழாவில், இளையராஜாவுக்கு இந்த ஆண்டுக்கான நிஷாகந்தி புரஸ்காரம் விருது வழங்கப்பட்டது. அவருக்கு, கேரள முதல்வர் உம்மன் சாண்டி இந்த விருதை அளித்தார்.
விழாவில் உம்மன் சாண்டி பேசும் போது கூறியதாவது: ‘இளையராஜாவுக்கு நிஷாகந்தி விருதை வழங்குவதன் மூலம் கேரளா பெருமை கொள்கிறது. கேரளாவில், இளையராஜா சங்கீத அகாடமி தொடங்க, அரசு சார்பில் நிலம் தருவதாக 1990-ம் ஆண்டு வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி 25 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றப்பட உள்ளது. கேரளாவில், இளையராஜா சங்கீத அகாடமி தொடங்குவதற்கு 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் உடனே வழங்கப்படும்’ என்றார்.
‘இந்திய நாட்டுப்புற இசையுடன் மேற்கத்திய இசையின் பல்வேறு அம்சங்களை இணைத்து புதிய வகையில் இசை வகையை இளையராஜா உருவாக்கினார். அந்த இசை, பிரதேசங்களையும், தலைமுறைகளையும் கடந்து பிரபலமாக விளங்குகிறது. அதைப் பாராட்டும் வகையில், அவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது’ என்று மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் சுனில்குமார், விருது பற்றி அறிவித்தபோது இவ்வாறு கூறினார்.
ஆண்டுதோறும் நடைபெறும் நிஷாகந்தி திருவிழா, 20-ம் தேதி தொடங்கி, 8 நாள்களுக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில், இசை, நடனம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், 20-ம் தேதி முதல் ஏழு நாள்களுக்கு கேரளத்தின் பாரம்பரிய கதகளி நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
திருச்சி – சாகுல் ஹமீது
