Published On: Friday, January 01, 2016
நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு புத்தாண்டில் தீர்மானம் எடுங்கள் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு
நாடாளுமன்றத்தை ஒழுங்காக நடத்துவதற்கு புத்தாண்டிலாவது தீர்மானம் எடுங்கள் என காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி. நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவதால் சரக்கு-சேவை வரி உள்ளிட்ட முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படாததால், நாட்டின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது என்றார் மோடி.
நோய்டாவில் நடைபெற்ற டெல்லி - மீரட் நகரங்களை இணைக்கும் 14 வழி எக்ஸ்பிரஸ் சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி பேசியதாவது:கடந்த 60 ஆண்டுகளாகப் பதவியை அனுபவித்த காரணத்தாலேயே நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவதற்கு எந்த உரிமையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியை மறைமுகாக தாக்கினார். மேலும், அரசியல் காரணங்களால் நாட்டின் வளர்ச்சியை முடக்கக் கூடாது .சட்டம் இயற்றும் நாடாளுமன்றம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் துரதிர்ஷ்டம். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தற்போது நாடாளுமன்ற செயல்பாட்டை முடக்கியுள்ளனர்.
நாளை ஜனவரி முதல் நாள். புத்தாண்டை கொண்டாடும் இந்நேரத்தில்,த நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவதற்கு தீர்மானம் எடுங்கள். நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக இருக்காதீர்கள்.அனைத்து அரசியல் கட்சிகளையும் வேண்டுவது என்னவென்றால், நாடாளுமன்றத்தை சமூகமாக நடத்துவதற்கு ஒத்துழையுங்கள். அங்கு எனக்குப் பேச வாய்ப்பு கிடைக்காததால், மக்கள் மன்றத்தில் பேசுகிறேன். நாடாளுமன்றத்தில் பேசவும், விவாதிக்கவும், முடிவெடுக்கவும்தான் மக்கள் எங்களை அங்கு அனுப்பிவைத்துள்ளனர்.
ஆட்சி அதிகாரத்தைப் பறிகொடுத்தவர்களின் கோபம் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். அதேநேரத்தில் 60 ஆண்டுகள் பதவியை அனுபவித்தவர்கள் நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு அதிகாரம் இல்லை.வரும் புத்தாண்டு முதல் மத்திய அரசின் மூன்றாம் மற்றும் நான்காம் பிரிவு பணிகளுக்கான தேர்வுகளில் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மக்களுக்கான புத்தாண்டு பரிசாகும். இந்த உத்தரவை மாநில அரசுகளும், மாநிலப் பணிகளுக்கான தேர்வுகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார் பிரதமர் மோடி.



