Published On: Sunday, January 10, 2016
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ராஜீவ் காந்தி ஆதரவு
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆதரவு தெரிவித்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் ராமஜென்ம பூமி பற்றிய 2 நாள் கருத்தரங்கு தொடங்கியது. இதில், பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கலந்து கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான ஐக்கிய தேசிய மாணவர் அமைப்பு மற்றும் இடது சாரி மாணவர்கள் சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் சுப்பிரமணியசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவரை கண்டித்து எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தி இருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர்.
தில்லி பல்கலைக்கழகத்தில் ராமர் கோயில் தொடர்பாகத் தொடங்கியுள்ள 2 நாள் கருத்தரங்கில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது: நமது பாரம்பரியத்துக்கு புத்துயிர் கொடுப்பதற்கு அயோத்தியில் ராமர் கோயில் கட்டாயம் கட்டப்பட வேண்டும். அந்தப் பணியை நாங்கள் தொடங்குவோம். அங்கு கோயில் கட்டும்வரை ஓய மாட்டோம்.
வலுக்கட்டாயமாக செய்ய மாட்டோம்: அதேசமயம், எதையும் வலுக்கட்டாயமாகவோ அல்லது சட்டத்துக்கு எதிராகவோ செய்ய மாட்டோம். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு முழு ஆதரவு தெரிவித்தார். என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசியபோது, அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்றும், வாய்ப்பு கிடைத்தால் உதவி செய்வேன் என்றும் கூறினார். அதேபோல், கட்சியின் எதிர்ப்பை மீறி, ராமாயண நாடகத்தை அவர் ஒலிபரப்பச் செய்து முதல் உதவியைச் செய்தார். பிறகு, ராமர் கோயிலுக்கு அடித்தளமிட உதவி செய்வேன் என்றார். 1989ஆம் ஆண்டு தேர்தல்களில் பிரசாரத்தில் ஈடுபட்டபோதும், இதே கருத்தை ராஜீவ் காந்தி தெரிவித்தார்.
ஆதலால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் தானே முன்வந்து உதவி செய்யும் என்றும், எங்களுக்கு ஆதரவு அளிக்கும் என்றும் நம்புகிறேன். ஏனெனில், இது எங்களது கோரிக்கை மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவரின் கோரிக்கையும் இதுதான்.
நமது நாட்டில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. அந்தக் கோயில்கள் அனைத்தையும் மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என நாங்கள் தெரிவிக்கவில்லை. அதேசமயம், அயோத்தி ராமர் கோயில், மதுராவில் கிருஷ்ணர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் ஆகிய 3 விவகாரங்களிலும் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு விட்டால், பிற கோயில்களையும் கட்டுவது எளிதாகும் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
(திருச்சி - சாஹுல் ஹமீட்)
