Published On: Sunday, January 10, 2016
பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
பாகிஸ்தான் எல்லையையொட்டி பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில் அமைந்துள்ள இந்திய விமானப்படை தளத்தை தகர்க்க வேண்டும் என்று சதி செய்து, பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் , முகமது இயக்க தீவிரவாதிகள் கடந்த 2-ந் தேதி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்ட அவர்களை எதிர்த்து நமது பாதுகாப்பு படையினர், உயிரை துச்சமெனக்கருதி வீரமுடன் சண்டை போட்டனர். 4 நாட்கள் நீடித்த இந்த சண்டையின்போது, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நமது பாதுகாப்பு படையினர் 7 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பதன்கோட் விமானப்படை தளத்துக்கு வந்தார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவலும் வந்தார். விமானப்படை தளத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். முதலில் தீவிரவாதிகளை எதிர்த்து நமது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திய ராணுவ பொறியியல் சேவைப்பிரிவு பகுதியை அவருக்கு அதிகாரிகள் காட்டினர். கடைசி 2 தீவிரவாதிகள் பதுங்கியிருந்த உணவுக்கூடத்தின்மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி, அது உருக்குலைந்து போய் இருப்பதையும் அவர் பார்த்தார். தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் பார்த்து, ஆய்வு செய்தார். பாதுகாப்பு படைகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையும் நடத்தினார்.
பிரதமர் மோடியிடம் தீவிரவாதிகள் தாக்குதல் பற்றியும், அந்த தாக்குதலை நமது பாதுகாப்பு படையினர் துணிச்சலுடன் எதிர்கொண்டு, தீரமுடன் முறியடித்த விதம் குறித்தும் ராணுவ தளபதி தல்பீர் சிங், விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அருப் ராஹா மற்றும் தேசிய பாதுகாப்பு படை மற்றும் தேசிய புலனாய்வு முகமை, எல்லை பாதுகாப்பு படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் விளக்கினர். அதை அவர் கவனமுடன் கேட்டார். அங்கு அவர் 90 நிமிடங்கள் இருந்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் தகவல்கள் வெளியிட்டார். அதில் அவர், “பதன்கோட் விமானப்படை தளத்துக்கு சென்றேன். ராணுவம், விமானப்படை, தேசிய பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் (பதன்கோட் தாக்குதலின்போது நடந்தவற்றை) விளக்கமாக கூறினார்கள். அத்தகைய கடுமையான தீவிரவாத தாக்குதலை எப்படி முறியடித்தனர் என்பதையும் விளக்கமாக சொன்னார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
(தீவிரவாத தாக்குதலை முறியடிப்பதில்) முடிவுகள் எடுத்து, அவற்றை செயல்படுத்தியவிதம், தந்திரமாக பதிலடி தந்தது ஆகியவற்றில் பிரதமர் மோடி திருப்தி அடைந்துள்ளதாகவும், களத்தில் பல்வேறு படை பிரிவுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதை கவனத்தில் கொண்டதாகவும், களத்தில் நமது வீரர்களும், வீராங்கனைகளும் வீரத்துடனும், உறுதியுடனும் செயல்பட்ட விதத்தை பாராட்டியதாகவும், அவர்கள் நமது தேசத்தின் பெருமைக்குரியவர்கள் என குறிப்பிட்டதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ‘டுவிட்டர்’ தகவல்கள் கூறுகின்றன.
(திருச்சி - சாஹுல் ஹமீட்)


