Published On: Friday, January 15, 2016
நடக்க இருக்கின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கட்சி சார்பாக அதிகமான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வென்றெடுப்பது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கிய நோக்கமாக உள்ளது
நடக்க இருக்கின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கட்சி சார்பாக அதிகமான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வென்றெடுப்பது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கிய நோக்கமாக உள்ளது. அதற்காக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்டையும் இணைத்துகொண்டு கட்சியினை வழி நடாத்தி செல்வதே சிறந்த விடயமாகும் என வர்த்தக வாணிபத்துறை நிபுணத்துவ ஆலோசகரும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வருமான சிராஸ் மீராசாஹிப் குறிப்பிட்டார்.
கட்சிக்குள் எழுந்துள்ள உட்கட்சிப் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது
செயலாளர் நாயகமான வை.எல்.எஸ்.ஹமீட் அம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்லாது தேசிய ரீதியாகவும் வியாபிப்பதற்கு அளப்பெரிய சேவையாற்றியுள்ளார் என்பதனை யாரும் மறுக்க முடியாது. அதனால் கட்சிக்குள் செயலாளர் நாயகத்திற்கும், தலைமைக்கும் இருக்கின்ற கருத்து முரண்பாடுகளை களைந்து ஒன்றுபட்டு இக்கட்சியினை வழி நடாத்திச் செல்வதற்கு நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அரசியல் ரீதியாக கட்சி என்றால் அங்கு கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அதனை வெற்றி கொள்ளும் திறன் எமது கட்சியின் தலைமைக்கு இருக்கின்றது. அனைவரையும் அரவனைத்து மக்கள் நலன் காக்கும் திட்டத்தில் நாம் அயராது எதிர்காலத்தில் பாடுபடுவோம்.
எங்களுடைய கட்சியானது அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு கன்னி முயற்சியிலேயே அதிக அளவிலான வாக்குகளை பெற்றுள்ளது. ஆகவே கட்சியின் தலைமையானது செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்டையும் இணைத்துக்கொண்டுதான் இக்கட்சியினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் இக்கட்சிக்குள் இருக்கின்றவர்கள் மட்டுமல்லாது கருத்து முரண்பாடுகளால் வெளியில் இருக்கின்ற அனைவரையும் அரவனைத்து அவர்களை வெளியில் விடாமல் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கெளரவத்தினையும் கொடுத்து எல்லோருடைய கருத்துக்களையும் செவிமடுத்து கட்சியினை வழிநடத்தி செல்ல வேண்டும் என்பதே எமது தற்போதைய நிலைப்பாடாகும்.
அதுபோல் எனக்கு வழங்கப்பட்டிருக்கின்ற பதவியினைக் கொண்டு நான் எதிர் காலத்தில் அம்பாரை மாவட்ட மக்களுக்காக அரும்பாடுபட்ட உழைக்க இருக்கின்றேன். இதுவே எமது தலைமையின் விருப்பமாகவும் இருக்கின்றது. எடுத்த எடுப்பிலே சுமார் 33 ஆயிரம் வாக்குகளை அளித்து கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசை தலை நிமிர வைத்த அம்பாறை மாவட்ட மக்களுக்காக நாம் என்றும் நன்றியுணர்வுடன் செயற்படுவோம். எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் பிரதேச, நகர, மாநகர சபைகளில் எமது கட்சி சார்பான உறுப்பினர்களையும் பெறுவதற்காக பாரிய பொறுப்புடன் நாம் செயற்பட்டு வருகின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
(எஸ்.அஷ்ரப்கான்)