Published On: Friday, January 22, 2016
பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு
கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் மீனவர்களின் குடும்பங்களின் கல்வி நிலையினை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
அந்தவகையில் திருகோணமலை மாவட்ட மூதூர் கிளிவெட்டி, சேருநுவர காவன்திஸ்ஸபுர மற்றும் கிண்ணியா ஆயிலியடி போன்ற பிரதேங்களைச் சேர்ந்த பாடசாலை வறிய மாணவர்களுக்கு இக்கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண காணி அமைச்சர் திருமதி.ஆரியவதி கலபதி, மாகாண சபை உறுப்பினர்கான ஜயந்த விஜயசேகர, எஸ்.ஜனார்த்தனன், மாகாண விவசாயத் திணைக்கள திருகோணமலை மாவட்டப் பிரதிப் பணிப்பாளர், விவசாய அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ்.தங்கவேல், மற்றும் பாடசாலை மாணவர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
விவசாய அமைச்சின் அமைச்சருக்குரிய பிரத்தியேக நிதியில் வருட இறுதியில் மீதப்படுத்தப்பட்ட தொகையின் மூலம் மாகாண விவசாய, மீன்பிடி, கால்நடை வளர்ப்போர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு சுமார் 1600 ரூபா பெறுமதி வாய்ந்த கற்றல் உபகரணங்கள் அடங்கிய இப்புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கு முன்னர் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் முஸ்லீம் சிங்கள வறிய மாணவர்களுக்கு இச்செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்