Published On: Saturday, January 02, 2016
திண்டுக்கல்லைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை ரூபாதேவி சர்வதேச கால்பந்து நடுவராக தேர்வு
திண்டுக்கல்லைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை ரூபாதேவி (வயது 24). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி மற்றும் திண்டுக்கல் கால்பந்து கழக அணி சார்பில் விளையாடி வெற்றி பெற்றவர்.தற்போது மத்திய பிரதேசத்தில் சீனியர் மற்றும் ஜூனியர் கால்பந்து போட்டிகளில் நடுவராக உள்ளார்.
‘பீபா’ எனப்படும் சர்வதேச கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியின் நடுவராக ரூபாதேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இருந்து அதிலும் குறிப்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் முதல் முறையாக சர்வதேச கால்பந்து போட்டியில் நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.இது குறித்து திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஜி.சுந்தரராஜன், கவுரவ செயலாளர் சண்முகம் ஆகியோர் தெரிவிக்கையில் திண்டுக்கல் மாவட்டம் தமிழகத்திலேயே கால்பந்து போட்டிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
திண்டுக்கல்லில் கால்பந்து போட்டிக்கான பிரத்யேக புல்தரை விளையாட்டு மைதானம் அமைத்து பயிற்சி மற்றும் திறமையான பயிற்சியாளர்களைக் கொண்டு ஆண்கள், பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வருடந்தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தி திறமையானவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு அளிக்கப்பட்டு வருகிறது. கால்பந்து போட்டியில் ஆண்களுக்கு இணையாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களும் சாதனை படைத்து வருகின்றனர். அதன் வரிசையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரூபா தேவி சர்வதேச கால்பந்து போட்டிக்கு நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்தனர்.
