Published On: Sunday, January 03, 2016
அக்கரைப்பற்றின் அபிவிருத்தித்திட்டங்கள் சிறந்த முறையில் செயற்படுத்தப்படும் - மாகாண சபை உறுப்பினர் தவம்
அக்கரைப்பற்றின் முன்னாள் அமைச்சர் மற்றும் அக்கரைப்பற்றின் முன்னாள் மாநகர மேயர் ஆகியோர் கடந்த காலங்களில் தன்னிச்சையாக முடிவெடுத்து செயற்பட்டது போன்றில்லாமல் தற்போதுள்ள நல்லாட்சியில் மக்கள் விரும்பும் விடயத்தினை செய்வதற்கும் மக்களுக்கு நியாயமான முறையில் சகல அபிவிருத்தி திட்டங்களும் பொருத்தமான அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் விவகார தொழில் வாய்ப்புத்துறை செயலாளருமான ஏ.எல்.தவம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதிக்கீட்டின் மூலம் அக்கரைப்பற்று சம்சுல் உலும் முன்பள்ளி மாணவர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் புத்தகப்பையுடன் அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று (03) முன்பள்ளி ஆசிரியர் ஏ.ஜீ.நப்ரிஸ் பானு தலைமையில் நடைபெற்ற போது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு அவர் அங்கு உரையாற்றினார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் செயற்படுத்தப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வாழ்வாதார விடயங்கள் பொருத்தமான அடிப்படையிலும் பொருமான நபர்களுக்கும் சரியான முறையில் சென்றடையவில்லை.
இனிவரும் காலங்களில் இவ்வாறான விடயங்கள் நடைபெறாது மக்கள் எதை விரும்புகின்றார்களோ அவ்விடயங்கள் செயற்படுத்தப்படும் ஒருசிலரின் விருப்பத்திற்காக அல்லது நட்புக்காக அல்லது உத்தியோகத்தர்களின் குடும்பம் சார்பாக செயற்படுத்தப்படமாட்டாது.
அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை தேர்தல் நடைபெறவுள்ளது இத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பான வெட்பாளர்களை வெற்றி பெறச் செய்து இச்சபைகளை கைப்பற்றி சிறந்த முறையில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க நாம் எல்லோரும் செயற்பட வேண்டும்.அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு கிராமப்பிரிவுகளுக்கும் 15 பேர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மறுமலர்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஏ.எல்.றமீஸ் மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ஐ.றியாஸ் உட்பட முன்பள்ளி நிருவகத்தின் உறுப்பினர்கள் பிரமுகர்கள் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
எம்.ஐ.எம்.றியாஸ் -